சிறுமி டெஸ்ஸா தாம்சன் சிறு வயதில் இருக்கும் போது ஏலியன்களை பார்க்கிறார். பெற்றோர்கள் இவளது நினைவுகளை அழிக்காமல் விட்டுவிடுகிறார்கள். வளர்ந்தவுடன் எம்.ஐ.பி குழுவில் சேர நினைத்து அவர்களையும் கண்டு பிடிக்கிறாள். ஏற்கனவே அதற்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றதால் எம்.ஐ.பி ஏஜென்ட் ஆக வேலை கிடைக்கிறது.
லண்டனில் வன்கஸ் என்னும் ஏலியனை சந்திப்பதற்காக கிறிஸ் ஹெம்ஸ்வார்துடன் செல்கிறார் டெஸ்ஸா. அங்கு வன்கஸை இரட்டை ஏலியன்கள் தாக்குகிறார்கள். இதில் வன்கஸ் உயிரிழக்கும் நிலையில், ரத்தினகல் ஒன்றை கொடுத்து, எம்.ஐ.பி-யில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் சொல்லி இறக்கிறார்.
இறுதியில் எம்.ஐ.பி.-யில் இருக்கும் பிரச்சனையை கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டெஸ்ஸா இருவரும் கண்டுபிடித்தார்களா? வன்கஸை கொலை செய்த இரட்டை ஏலியன்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
அவெஞ்சர்ஸ்: எண்ட் கேமில் தொப்பையும், பீருமாக காட்சியளித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தப் படத்தில் ஸ்டைலிஷ், ஹேண்ட்சம் லுக்கில் கவர்ந்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் டெஸ்ஸா அவருக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நின்று விளையாடுகிறார். தாடி போல் அமர்ந்திருக்கும் குட்டி ஏலியன், இரட்டை ஏலியன் என பட முழுக்க 3டி விருந்து படைத்திருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் சிலிர்க்க வைக்கிறது.
இதற்கு முன், மென் இன் பிளாக் மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கிறது. நான்காவது பாகமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. வேற்றுக் கிரக உயிரினங்களுடன் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் கலந்து இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
முந்தைய பாகங்கள் வரிசையில் இந்தப் படமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவும், பின்னணியும் அருமை. எம்.ஐ.பி ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக அமைந்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘மென் இன் பிளாக் இன்டர்நேஷனல்’ மைண்ட் ப்ளோயிங்.