517 ஆம் ஆண்டு, மரணமில்லாத பெண்ணாகவும், ரத்தத்தின் மகாராணி என்று அழைக்கப்படும் நிமோ மனிதர்களை அழித்து வருகிறார். இதை தடுப்பதற்காக கிங் ஆர்த்தர் நிமோவை தன்னுடைய சக்தி மிகுந்த வாளால் ஆறு பாகங்களாக வெட்டி மந்திரம் செய்த பெட்டியால் அடைத்து, தன்னுடைய தளபதிகள் மூலம் அந்த பெட்டியை யாரும் கண்டுபிடிக்க முடியாதளவிற்கு அனுப்பி வைக்கிறார்.
நிகழ் காலத்தில் சீக்ரெட் ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார் ஹெல்பாய். இந்நிலையில், பூமியில் வேற்று கிரகவாசிகள் உலாவுவதாக தகவல் கிடைக்கிறது. இதன் பின்னணியில் நிமோவின் பாகங்களை கண்டுபிடிப்பதற்காக அவை செயல்பட்டு வருவதாகவும், மொத்த பாகங்களை ஒன்று சேர்த்தால் நிமோ உயிர் பெற்று உலகில் உள்ள மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி விடுவாள் என்பதையும் ஹெல்பாய் அறிகிறார்.
இறுதியில் நிமோ உயிர்தெழுந்தாரா? ஹெல்பாய் தடுத்தாரா? என்பதே படத்தின் கதை.
‘ஹெல்பாய்’ கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு மூன்றாவதாகத் திரைக்கு வந்திருக்கிறது இப்படம். ராட்ஷச தேகம், சிவந்த நிறம், முன் நெற்றியில் அறுபட்ட கொம்புகள், பாறை வலது கரம் எனப் பயமுறுத்தும் தோற்றத்துடன் முன்கோபியாகவும் எதிரிகளை அதிரடியாகத் தாக்கும் தோரணையுமாக வலம் வருகிறார் ஹெல்பாய்.
ஹெல்பாயாக நடித்திருக்கும் டேவிட் ஹார்பரும், ரத்த மகாராணியாக நடித்திருக்கும் நிமோவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சூனியக்கார ரத்த ராணியான நிமோவை ஹெல்பாய் எதிர்கொள்வதும் இருவருக்கும் இடையிலான இதுவரை வெளிப்படாத உறவும் சொல்லப்பட்டிருக்கிறது. பயமுறுத்தும் உயிரினங்களும், மனிதர்களுக்கும் உதவுவதற்காக ஹெல்பாயின் சாகசங்களும் ரசிக்க வைக்கிறது.
முதலிரு ‘ஹெல்பாய்’ படங்களை இயக்கிய கியர்மோ டெல் டோராவுக்குப் பதிலாக மூன்றாவது ‘ஹெல்பாய்’ படத்தை நெய்ல் மார்ஷல் இயக்கியுள்ளார். பெஞ்சமினின் இசையும், லாரென்சோ செனடோரின் ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஹெல்பாய்’ குட்பாய்.