டேனி டிவிட்டோ நடத்தி வரும் சர்க்கஸில் கொலின் பரல் பணிபுரிந்து வருகிறார். அந்த சர்க்கஸில் உள்ள பெரிய யானைக்கு புதிதாக ஒரு குட்டி யானை பிறக்கிறது. அதை அனைவரும் ஆர்வத்துடன் பார்க்க வருகிறார்கள், அந்தக் குட்டியின் காதுகள் வித்தியாசமாக தரையைத் தொடும் அளவுக்கு நீண்டுள்ளது. யாருக்குமே அதைப் பிடிக்கவில்லை. எல்லோரும் அதனிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள்.
இந்நிலையில், பெரிய யானையை ஏமாற்றி விற்றதாக கூறி அதை விற்று விடுகிறார்கள். தனிமையில் இருக்கும் குட்டியானைக்கு டம்போ என்று பெயர் வைக்கிறார்கள். இதனுடன் கொலின் பரலின் குழந்தைகள் விளையாடி வருகிறார்கள். அப்போது இறகை வைத்து விளையாடும் போது டம்போ காதை சிறகுகளாகப் பயன்படுத்தி பறக்கிறது. இதை மற்றவர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள்.
ஒருநாள் சர்க்கஸின் போது, டம்போவால் பறக்க முடியும் என்ற வியப்பான விஷயம் அனைவருக்கும் தெரியவருகிறது. அதன்பின் டம்போவுக்குப் பயிற்சி தருகிறார்கள். சர்க்கஸும் செழிப்பாகிறது.
பெரிய சர்க்கஸ் கம்பெனி நடத்தி வரும் மைக்கேல் கீட்டன் இதையறிந்து டம்போவை வாங்க முயல்கிறார். இதை தர மறுக்கும் சர்க்கஸ் குழுவினரை பார்ட்னராக மாற்றி டம்போவை வாங்கி அவர் இடத்திற்கு கொண்டு சென்று விடுகிறார்.
அங்கு ஒரு நாள் சர்க்கஸின் போது ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் தன்னுடைய தாய் யானை இருப்பதை டம்போ அறிந்து அங்கு சென்று விடுகிறது. இதை பிரிக்க நினைக்கிறார் மைக்கேல் கீட்டன். இறுதியில் இவரது திட்டம் நிறைவேறியதா? தாய் யானையுடன் டம்போ சேர்ந்ததா? என்பதே படத்தின் கதை.
குழந்தைகளுக்கான பேன்டஸி படங்கள் வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் டிம் பர்டன். முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி சென்டிமென்ட்டாகவும் திரைக்கதை நகர்கிறது. டம்போவைப் பார்த்துக்கொள்ளும் நபராக, கொலின் பரல். அவரது குழந்தைகள்தான் படத்தின் நிஜ ஹீரோக்களாக வருகிறார்கள். வில்லனாக மைக்கேல் கீட்டன் சிறப்பாக நடித்திருக்கிறார். சர்க்கஸில் வேலை பார்க்கும் பெண்ணாக ஈவா க்ரீன் என கலர்புல் பட்டாளமாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘டம்போ’ குழந்தைகளின் செல்ல பிள்ளை.