பைக் ரேசராக இருக்கும் வீரசமர், டியூ கட்டாத பைக்குகளை தூக்கி வருகிறார். மேலும் அதே பகுதியில் இருக்கும் நாயகி அமிதா ராவை காதலித்து வருகிறார். ஒரு நாள் அரசியல்வாதி மூலம் ஒரு பைக் ரேஸ் நடக்கிறது. இதில் நாயகன் வீரசமருக்கும் ஒரு கும்பலுக்கும் சண்டை ஏற்படுகிறது.
அந்த கும்பல் வீரசமரை அடித்து ஒரு பெட்டிக்குள் வைத்து உயிருடன் புதைத்து விடுகிறார்கள். நினைவு திரும்பி பார்க்கும் வீரசமர், எப்படி தப்பிப்பது என்பது தெரியாமல் தவிக்கிறார். தன்னுடைய செல்போன் நெட்வொர்க் மூலம் காதலிக்கு பட்டிபுலம் என்ற பகுதியில் இருப்பதாக தகவல் அளிக்கிறார்.
இறுதியில் அமிதா ராவ், வீரசமர் இருக்கும் பகுதியை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? உயிருடன் பெட்டிக்குள் புதைக்கப்பட்ட வீரசமர் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கலை இயக்குனரான வீரசமர், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். பைக் ரேசராகவும், பெட்டிக்குள் அடைத்தவுடன் பதட்டமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் நடித்திருக்கிறார் அமிதாராவ். யோகிபாபுவின் காமெடி படத்திற்கு ஒரே பலம். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது.
பைக் ரேசை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ். ஆனால், பெரிதளவிற்கு திரைக்கதை கைகொடுக்க வில்லை. படம் பார்க்கும் போது பழைய ஒரு சில படங்களின் காட்சிகள் ஞாபகத்திற்கு வருகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஆர்.கே.வர்மாவின் ஒளிப்பதிவு சுமார் ரகம். வல்லவனின் இசை கவனம் பெற வில்லை.
மொத்தத்தில் ‘பட்டிபுலம்’ இன்னும் பட்டி பார்க்கணும்.