ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன் வரிசையில் டிராகன்களின் ரகசிய உலகத்தை மையப்படுத்தி இந்த பாகம் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் டிராகன்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் நாயகன் ஹிக்கப். டிராகன்களால் மனிதர்களுக்கு ஆபத்து வராது, டிராகனும், மனிதர்களும் ஒன்றாக வாழலாம் என்பதை உணர்த்தும் ஹிக்கப், நிஜத்தில் அதனை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே டிராகன்களால் மனிதர்களுக்கு ஆபத்து தான் என்று அதனை அடிமைப்படுத்தி அழிக்க நினைக்கிறார் கிரிம்மல். ஹிக்கப்பிடம் இருக்கும் டிராகன்களின் அரசனான நைட் பியூரியை (டூத்லெஸ்) கவர்ந்து அதன் மூலம் மற்ற டிராகன்களை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
அதற்காக லைட் பியூரி எனப்படும் வெள்ளை டிராகன் மூலம் லைட் பியூரியை பிடிக்க முயற்சி செய்கிறார். இதையடுத்து டிராகன்களை கிரிம்மல்லிடம் இருந்து பாதுகாக்க தனது அப்பா சொல்லும் பாதுகாப்பான ரகசிய உலகத்தை தேடுகிறார்.
கடைசியில், பாதுகாப்பான உலகத்தை கண்டுபிடித்தாரா? அனைத்து டிராகன்களையும் அங்கு அழைத்துச் சென்றாரா? மனிதர்கள், டிராகன்கள் ஒன்றாக ஒரே உலகத்தில் வசித்தனவா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் முழுக்க முழுக்க அனிமேஷன், கிராபிக்ஸ் என 3டியில் உருவாகி இருப்பதால் திரையில் பார்க்க ஒரு விருந்தாகவே அமைகிறது. படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளன. ஆக்ஷன் காட்சிகள், அதில் வரும் இடங்கள் என அனைத்தும் கண்ணிற்கு விருந்தளிக்கின்றன.
குறிப்பாக டிராகன்களின் ரகசிய உலகத்தில் வரும் வண்ணமயமான டிராகன்கள் மற்றும் இடங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. டிராகன் - மனிதர்களுக்கு இடையேயான பாசம், பிரிவு என செண்டிமெண்ட்கள் இடம்பெற்றிருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் `ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன்' விருந்து. #HowToTrainYourDragon #HowToTrainYourDragonReview