மீரா கிருஷ்ணன் தவறான வழியில் கர்ப்பமாகி, பொது கழிப்பிடத்தில் குழந்தையை பெற்று, அங்கேயே விட்டுச் செல்கிறார். அந்த குழந்தையை அங்கு வேலை செய்பவர், எடுத்து வளர்க்கிறார். வளர்ந்து பெரியளாகும் நாயகன் நேசம் முரளி, பொது கழிப்பிடத்தை கவனித்து வருகிறார்.
பொது கழிப்பிடத்திற்கு அருகே, நாயகி நந்தினி தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாலையோரத்தில் தங்குகிறார். நந்தினிக்கு பணம் சேர்த்து ஒரு வாடகை வீட்டில் குடியேற வேண்டும் என்று விருப்பம்.
பிளாட்பாரத்தில் நந்தினி தன்னுடைய குடும்பத்துடன் தங்குவதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. இப்படி ஒரு பிரச்சனையில் நந்தினிக்கு உறுதுணையாக இருக்கிறார் நேசம் முரளி. இதிலிருந்து இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் அந்த பிரச்சனையில் சிக்கி நேசம் முரளி ஜெயிலுக்கு செல்கிறார். தண்டனை காலம் முடிந்து திரும்பி வரும் நேசம் முரளி, பிளாட்பாரத்தில் தங்கியிருந்த நந்தினி, தன் குடும்பத்துடன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.
பின்னர் நந்தினியை தேடி அலைகிறார். இறுதியில் நந்தினியை நேசம் முரளி கண்டுபிடித்தாரா? நந்தினியுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தவறான வழியில் பிறக்கும் குழந்தைகளின் நிலைமையையும், பிளாட்பாரத்தில் வசிப்பவர்களின் நிலைமையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் நேசம் முரளி, இதில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். யதார்த்தமான நடிப்பையும், அழுத்தமான கருத்தையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நந்தினி, பிளாட்பாரத்தில் இருந்து, வாடகை வீட்டிற்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடித்து மனதில் பதிகிறார். அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் மீரா கிருஷ்ணன். குழந்தை நட்சத்திரம் பேபி ஐஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கிறார்.
விஜியின் ஒளிப்பதிவு பிளாட்பாரத்தில் கஷ்டப்படுவர்களை யதார்த்தம் மீறாமல் படம்பிடித்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கபிலவஸ்து’ எதார்த்தம். #Kabhilavasthu #KabhilavasthuReview #NesamMurali #Nandhini