நாயகன் அரசர் ராஜாவும், நாயகியும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்க்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து மேலும் 4 பேர் அங்கு வேலை பார்க்கிறார்கள். இதையடுத்து அந்த தொலைக்காட்சியின் உயரதிகாரி, கூடுவிட்டு கூடு பாய்வது பற்றிய தகவல்களை சேகரிக்கும்படி கூறி, அதற்கான பொறுப்பை அரசர் ராஜாவுக்கும், நாயகிக்கும் கொடுத்து விடுகிறார்.
இதனால் கடுப்பாகும் மற்ற 4 பேரும், அரசர் ராஜாவை காலி செய்ய திட்டமிடுகின்றனர். இதையடுத்து கூடு விட்டு கூடு பாய்வது பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக 6 பேரும் இணைந்து ஆனைமலையில் இருக்கும் யோகி ஒருவரை சந்தித்து அவரிடம் இருந்து தகவல்களை பெறுவதற்காக செல்கின்றனர்.
போன இடத்தில் அரசர் ராஜா அந்த யோகியிடம் இருந்து கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை கற்றுக் கொள்கிறார். அதே பகுதியில் அரசர் ராஜா தோற்றத்தில் இருக்கும் மற்றொருவர் பெரிய ப்ளேபாய். அவரை அவரது காதலியே கொன்றுவிடுகிறார்.
இதற்கிடையே தனது உடலை விட்டு வெளியே வந்திருக்கும் நாயகன் அரசர் ராஜாவின் உடலை அவருடன் வேலைபார்ப்பவர்கள் எரித்துவிடுகிறார்கள். இதனால் செய்வதறியாது தவிக்கும் அரசர் ராஜாவின் ஆவி, அந்த யோகியின் வழிகாட்டுதலின் படி, காதலியால் கொலை செய்யப்பட்ட அரசர் ராஜாவின் உடலில் புகுந்து கொள்கிறது.
அதன்மூலம் அரசர் ராஜா ஒரு பயங்கரமான ஆளாக மாறிவிடுகிறார். கடைசியில் தனது உடலை எரித்தவர்களை அரசர் ராஜா பழிவாங்கினாரா? நாயகியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன், இயக்குநர் என இரு வேலைகளை எடுத்து, இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துமிருக்கிறார் அரசர் ராஜா. நாயகி, கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் அவர்களது வேலையை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கின்றனர். கூடுவிட்டு கூடு பாய்வதை மையப்படுத்தி படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். கதை கேட்கும் போது நல்லா இருந்தாலும், அதை காட்சிப்படுத்துவதில் இயக்குநர் தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். திரைக்கதையையும் கவனித்திருக்கலாம்.
சுபீர் அலி கானின் இசையில் பின்னணி இசை ஓரளவுக்கு வலுசேர்த்திருக்கிறது. செல்வமணியின் ஒளிப்பதிவும் பட்ஜெட்டுக்கு ஏற்றபடியாக உள்ளது.
மொத்தத்தில் `பயங்கரமான ஆளு' பயங்கரமா இல்லை. #BayangaramanaAaluReview #ArasarRaja