கிராமத்தில் நாயகன் விக்ரம் ஜெகதீஷ் தன்னுடைய பாட்டியின் அரவணைப்பில் சிறு வயதில் இருந்து வளர்ந்து வருகிறார். அதே ஊரில் இருக்கும் நாயகி நேஹாவிற்கு விக்ரம் ஜெகதீஷும் சிறு வயதில் இருந்தே பழகி வருகிறார்கள். நேஹாவிற்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறார்.
நாளடைவில் நேஹா மீது விக்ரம் ஜெகதீஷுக்கு காதல் ஏற்படுகிறது. நேஹா படித்து ஒரு பள்ளிக்கு ஆசிரியராக வேலைக்கு சேருகிறார். தன்னுடைய சம்பள பணத்தில் விக்ரம் ஜெகதீஷுக்கு சட்டை எடுத்துக் கொடுக்கிறார். இதனால், நேஹா தன்னை காதலிப்பதாக நினைத்துக் கொள்கிறார் விக்ரம் ஜெகதீஷ்.
ஒரு கட்டத்தில் நேஹாவிடம் விக்ரம் ஜெகதீஷ் தன்னுடைய காதலை சொல்லுகிறார். ஆனால், அவரோ, தன்னுடன் வேலை பார்க்கும் தர்மராஜை காதலிப்பதாக கூறிவிடுகிறார். இதனால் வருத்தமடையும் விக்ரம் ஜெகதீஷ், மதுவுக்கு அடிமையாகிறார்.
நேஹாவோ, தர்மராஜை திருமணம் செய்துக் கொள்கிறார். சில தினங்களில் விக்ரம் ஜெகதீஷ், நேஹாவின் நினைவில் இறந்து விடுகிறார். இதையறிந்த நேஹா, தான் கட்டியிருந்த தாலியை கழட்டி விடுகிறார்.
விக்ரம் ஜெகதீஷ் இறந்ததற்கு நேஹா ஏன் தாலியை கழட்டினார்? தன் கணவர் தர்மராஜுடன் இணைந்து வாழ்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் ஜெகதீஷ் தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். நாயகி நேஹா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பரணி. காதல், சென்டிமென்ட் என சிறு படஜெட்டிற்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு படத்தை திறமையாக இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். இவரே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் இப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களும் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.
மொத்தத்தில் ‘ஒண்டிக்கட்ட’ ரசிக்கலாம்.