விலங்குகள் சரணாலயத்தில் விலங்குகள் நிபுரணராக வேலை பார்த்து வருகிறார் டுவெயின் ஜான்சன். இவர் விலங்குகள் மீது அதிக அக்கறையுடன் இருந்து வருகிறார். குறிப்பாக ஜார்ஜ் எனும் மனிதக் குரங்கு இவருக்கு ரொம்பவே செல்லம்.
ஒருநாள் விண்வெளியில் இருந்து ஒரு சிறு இயந்திரம் மூன்று இடங்களில் விழுகிறது. ஒன்று அடந்த காட்டு பகுதியிலும், இரண்டாவது கடலுக்குள்ளும், மற்றொன்று டுவெயின் ஜான்சன் இருக்கும் விலங்குகள் சரணாலத்தில் விழுகிறது.
அந்த இயந்திரத்தில் இருந்து வெளிவரும் விஷ வாயுவால், ஜார்ஜின் செயல்பாடுகளில் வித்தியாசம் ஏற்படுகிறது. விஷ வாயுவின் வீரியத்தில் ஜார்ஜுக்கு வலிமையும் சக்தியும் கிடைக்கிறது. மேலும் அதன் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
இந்த இயந்திரத்தை தேடி ஒரு கும்பல் காட்டுக்குள் செல்கிறார்கள். அந்த இயந்திரத்தால் பாதிக்கப்பட்ட ஓநாய் அந்த கும்பலை அடித்து நொறுக்குகிறது. அதுபோல் நீருக்குள் விழுந்த இயந்திரத்தால் முதலை பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒரு கும்பல் கதிர்வீச்சு ஒன்றை ஏற்படுத்தி, மூன்று விலங்குகளையும் உக்கிரமடையச் செய்கிறது. வெவ்வேறு இடத்தில் இருந்து கதிர்வீச்சை நோக்கிப் பயணிக்கும் மூன்று விலங்குகளும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்டு அந்த ஊரையே அழிக்கிறது.
இதையறிந்த டுவெயின் ஜான்சன், தன்னுடைய செல்ல குரங்கு ஜார்ஜ் ஏற்பட்ட நிலையை அறிந்து வருந்துகிறார். ஜார்ஜை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார்.
இறுதியில் அந்தக் கதிர்வீச்சை ஏற்படுத்தியது யார்? விண்வெளியில் வெளியான விஷ வாயுவுக்குக் காரணம் என்ன? விஷ வாயு தாக்கிய ஜார்ஜை டுவெயின் ஜான்சன் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
டுவெயின் ஜான்சன், எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும், விலங்குகள் எவ்வளவு அடித்தாலும் ஆர்ம்ஸை முறுக்கிக்கொண்டு, சண்டையிடுகிறார். கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.
குரங்கு, ஓநாய், முதலை போன்ற விலங்குகள் ராட்ஸச வடிவில் படம் முழுக்க வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் சிறப்பு. டுவெயின் ஜான்சன் குரங்குடன் செய்யும் லூட்டிகள் படத்தை ஜாலியாக எடுத்து செல்கிறது. டெக்னிக்கல் விஷயங்களில் ஒட்டுமொத்த குழுவும் தங்களுடைய சிறப்பை கொடுத்திருக்கிறது.
கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ப்ராட் பெய்டன்.
மொத்தத்தில் ‘ராம்பேஜ்’ விருந்து.