நாயகன் தாடி சிவா மிகவும் வசதியானவர். மலை சூழ்ந்த பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவர் மாடர்னான பெண்களை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்து அவரது தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார்.
இப்படி இருக்கும் நிலையில், வீட்டிற்கு அருகே இருக்கும் நாயகி பிராமினி முரளாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. பிராமினி முரளாவையும் வழக்கம் போல் கொலை செய்ய நினைக்கிறார் தாடி சிவா. ஆனால் நாயகி அவரை காதலிக்கிறார். இந்நிலையில், நாயகன் தாடி சிவாவிற்கு ஒரு பேய் ஒன்று தொந்தரவு செய்கிறது.
இறுதியில் அந்த பேய் அவரை தொந்தரவு செய்ய காரணம் என்ன? எதற்கு பெண்களை கொலை செய்கிறார்? நாயகி பிராமினி முரளாவை கொலை செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தாடி சிவா, பெண்களை ஏமாற்றுபவராகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. போலீஸ் தோற்றத்திற்கு பொருந்திருந்தாலும், நடிப்பு அவ்வளவாக பொருந்தவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் பிராமினி முரளா கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபடவில்லை.
சைக்கோ திரில்லர் கதையை பேய், திகில் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் புவனேஷ். நாயகனை சுற்றியே படத்தை நகர்த்தி இருக்கிறார். அழுத்தமான திரைக்கதை அமைத்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம். இது போன்ற கதைகள் ஏற்கனவே வந்திருப்பதால், படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் இல்லாமல் அமைந்திருக்கிறது.
நரேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். செல்வம் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகளை மட்டுமே ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘டிசம்பர் 13’ வழக்கமான நாள்.