தன்னிடம் உள்ள சக்தியை வைத்து, அமானுஷ்யங்களால் பாதிக்கப்பட்டவர்களை விடுவித்து வருகிறார் லின் ஷெய். அப்போது போனில் ஒரு அழைப்பு வருகிறது. ஒரு வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், அதை விரட்ட வரும் படி கேட்கிறார்கள். அவர்கள் கூறும் முகவரியை கேட்ட பின், உங்களுக்கு உதவ முடியாது என்று லின் ஷெய் கூறுகிறார்.
தான் ஏற்கனவே அந்த வீட்டில் இருந்ததாகவும், அந்த வீட்டில் என் அம்மா இறந்ததாகவும், அந்த வீடு இல்லை, ஒரு சுடுகாடு என்றும் தன் உதவியாளரிடம் கூறுகிறார் லின் ஷெய். அதனால் தான் அந்த வீட்டிற்கு செல்ல மறுத்தேன் என்றும் கூறுகிறார்.
பின்னர், தான் பட்ட கஷ்டம் தற்போது அந்த வீட்டில் இருப்பவர்கள் அனுபவிக்க கூடாது என்று நினைக்கிறார் லின் ஷெய். இதனால் அந்த வீட்டிற்கு செல்கிறார் லின் ஷெய். இறுதியில் அந்த வீட்டில் இருப்பவர்களை லின் ஷெய் காப்பாற்றினாரா? அமானுஷ்ய சக்தியை விரட்டினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
லின் ஷெய்யை சுற்றியே சுற்றியே கதை நகர்கிறது. ஒரு பழைய வீடு, அச்சுறுத்தும் பேய், குழந்தைகளை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்துப் பயங்காட்டுவது, இரண்டு ட்விஸ்ட்கள் என ஆங்கிலப் பேய் படங்களுக்கே உரித்தான டெம்ப்லேட்தான் இந்தப் படமும் பயணித்திருக்கிறது.
நடிகை லின் ஷெய் எலிஸ் ரெயினியர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து, வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பேய்களை முதலில் பார்க்கும்போது தோன்றும் நடுக்கம், தள்ளாத வயதில் வரும் சோர்வு என தன் இயலாமையை மிகவும் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார்.
அந்த ரகசிய அறையில் லின் ஷெய் அவரது உதவியாளனுடன் சேர்ந்து மர்ம முடிச்சை அவிழ்க்கும் காட்சி மிரள வைத்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் முன்னரே யூகிக்கும்படி அமைந்தது சற்று ஏமாற்றமே. அடுத்தடுத்த காட்சிகளில் என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாமல் செய்தால் மட்டுமே திகிலான காட்சிகள் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும். இங்கே அந்த உணர்வு எங்கேயும் ஏற்படவில்லை.
நல்ல கதையை பிடித்தவர்கள், திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி, திகில் காட்சிகளை கவனமாகக் கட்டமைத்து, இன்னமும் பயமூட்டியிருந்தால் இப்படம் சிறப்பாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் ‘இன்ஸிடியஸ் தி லாஸ்ட் கி’ திகில் குறைவு.