கால் டாக்சி டிரைவரான பிரபுதேவா காரில் சென்று கொண்டிக்கும் போது விபத்தில் சிக்கியிருந்த பிரகாஷ் ராஜை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வரும் பிரகாஷ் லாஜின் மனைவி பூமிகாவை பார்த்த பிரபுதேவா, சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்.
இதையடுத்து பிரகாஷின் விருப்பத்தின் பேரில் பிரபுதேவாவுக்கு, போன் செய்யும் பூமிகாவுக்கு தனது முன்னாள் காதலாரான பிரவுதேவா தான், தனது கணவரை காப்பாற்றியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பிரபுதேவாவும், பூமிகாவும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்களது காதலை விரும்பாத பூமிகாவின் தந்தை, பிரபுதேவா மீது பொய் வழக்கை விழச் செய்து அவரை வெளிவர முடியாத படி செய்து வருகிறார். இந்த இடைவெளியில் தனது மகளை பிரகாஷ் ராஜுக்கு திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார். இந்நிலையில், ஜெயில் தண்டனை முடிந்து வெளியில் வரும் பிரபுதேவா பூமிகாவுக்கு திருமணம் ஆனதை அறிந்து ஊரைவிட்டே சென்றுவிடுகிறார்.
அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கால் டாக்சி டிரைவராக தனது அன்றாட வாழ்க்கையை ஏழ்மையுடன் வாழ்ந்து வருகிறார். பிரபுதேவாவின் ஏழ்மையை உணர்ந்த பூமிகா, பிரபுதேவாவின் மனைவியிடம் சில லட்சங்களை அவர்களது உதவிக்கு வைத்துக் கொள்ளும்படி கொடுத்துவிட்டு வருகிறார். தனது வாழ்க்கையில் அடுத்தவர் காசுக்கு ஆசை படாதவரான பிரபுதேவா அந்த காசை பிரகாஷ் ராஜிடம் திருப்பிக் கொடுக்கிறார்.
தனது உயிரைக் காப்பாற்றிய, பணத்தின் மீது ஆசை கொள்ளாத பிரபுதேவாவை, பிரகாஷ் ராஜுக்கு பிடித்துப் போக தனது கம்பெனியிலேயே வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். மேலும் தன்னுடனேயே தங்கியிருக்கும்படியும் பணிக்கிறார்.
இவ்வாறாக பிரிந்த காதலர்கள் மீண்டும் அடிக்கடி பார்க்கும் சூழல் வருகிறது. அது அந்த காதலர்கள் இருவரது உள்ளத்திலும் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இப்படி இருக்க பிரபுதேவா - பூமிகாவின் காதல் மீண்டும் வெளிப்பட்டதா? பிரகாஷ் ராஜுக்கு இவர்கள் முன்னாள் காதலர்கள் என்பது தெரிந்ததா? கடைசியில் அவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரபுதேவா தனக்குரிய ஸ்டைலில், தங்கர் பச்சானை லயித்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதலராகவும், கணவராகவும், யார் பொருளுக்கும் ஆசைப்படாதவராக அவரது நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு சாதாரண ஏழை குடிமகனாக வந்து செல்வது படத்துடன் ஒன்றியிருக்கிறது. காதல் காட்சிகளிலும் சரி, திருமணமான பின்னர் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி வரம் பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் வலம் வருகிறார் பூமிகா.
பிரகாஷ் ராஜ் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. பெரியாராக வரும் சத்யராஜ் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கஞ்சா கருப்பு, சத்யன் படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
பிரிந்த காதலர்கள், திருமணத்திற்கு பிறகு நேரில் சந்தித்தால், அவர்களது சந்திப்பின் போது என்ன நடக்கும்? அவர்களது அன்பு எப்படி இருக்கும். அதை அவர்களது வாழ்க்கைத் துணை எப்படி பார்ப்பார் என்பதை தனக்கே உரிய ஸ்டைலில் அழுத்தத்துடன் காட்டியிருக்கிறார். தான் என்ன கஷ்டத்திற்கு உள்ளானாலும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர், நேர்மையான மனிதர், எதையும் எதிர்பார்க்காத அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். குறிப்பாக படத்தின் கடைசியில் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்துவதும், அதனால் வருத்தப்படுவதும் அதன் இயற்கையை வெளிப்படையாக காட்டியிருப்பது சிறப்பு. வழக்கமான கதை தான் என்றாலும் அதை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார். திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் வேகம் இருந்திருக்கலாம்.
பரத்வாஜ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஔிப்பதிவையும் தங்கர் பச்சான் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.
மொத்தத்தில் `களவாடிய பொழுதுகள்' காதலர் போராட்டம்.