கல்லூரி மாணவன் சிவா. மது கும்மாளம் என திரியும் ஜாலி பேர்வழி. அதே கல்லூரியில் படிக்கும் சிந்தியா அழகில் கிறங்கி காதலிக்கிறான். சிந்தியாவும் விரும்புகிறாள்.
ஒரு கட்டத்தில் இருவரும் படுக்கையில் அத்து மீறுகின்றனர். இதில் சிந்தியா கர்ப்பமாகிறாள். பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். குழந்தை பிறக்கிறது. மனைவி, குழந்தையுடன் சிவா வீட்டிலேயே முடங்குகிறான். சிந்தியா அலுவலகம் போய் சம்பாதித்து போடுகிறாள்.
அப்போது குழந்தைக்கு தந்தை சிவா அல்ல, இன்னொருத்தன் என சிந்தியா போனில் பேசிக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவலை சிவா ஒட்டு கேட்டு உடைகிறார். குழந்தையின் தந்தை பெயர் மகேஷ் என்பதை அறிந்து அவனை தேட ஆரம்பிக்கிறார். கல்லூரியில் மகேஷ் பெயரில் படித்தவர்கள் விலாசங்களை சேகரித்து வீடு வீடாக விசாரிக்கிறார். கண்டு பிடித்தாரா என்பது கிளைமாக்ஸ்...
கலகலப்பு, காமெடி இளசுகளை சுண்டி இழுக்கும் வசனங்கள் என காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார் இக்குனர் மதன்குமார். பொறுப்பில்லாத ஊதாரி மாணவன் சிவா கேரக்டரில் சந்தீப் கிஷன் பொருந்துகிறார். குழந்தையின் நிஜ தந்தையை தேடி போய் ஒவ்வொரு வரிடமும் சிக்கி படும் அவஸ்தைகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன.
சிவாவுக்கு உதவியதற்காக சிங்கமுத்து மகன் கட்டாய திருமணத்துக்கு ஆளாகி தந்தையிடமும் மனைவியிடமும் அடி, சித்ரவதை அனுபவிக்கும் சீன்கள் தியேட்டரையே குலுங்க வைக்கிறது.
சிந்தியாவாக வரும் டிம்பிள் வசீகரம். படுக்கையில் சூடேற்றவும் செய்கிறார். வசனங்களில் ஆபாச நெடி வீசுவதை தவிர்த்து இருக்கலாம். கோபி சந்தர் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன ராணா ஒளிப்பதிவும் நேர்த்தி.