தந்தை வெறுத்து ஒதுக்கும் ஒரு மகனின் வாழ்வியல் போராட்டமே கதை...
வீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்பு கொடுப்பவர் ராகுல். நண்பர்களுடன் குடி, கும்மாளம் என திரிகிறார். தாய், தந்தை, அண்ணன், தங்கையுடன் வசிக்கிறார். ராகுலை உருப்படாதவன் என தந்தை சதா திட்டித் திரிகிறார். அவர் மனதில் இடம் பிடிக்க ராகுல் எடுக்கும் முயற்சிகள் சொதப்பி மேலும் வெறுப்பை ஏற்பட வைக்கிறது.
போலீஸ், உள்ளூர் கவுன்சிலர் எதிர்ப்பை எல்லாம் சம்பாதிக்கிறார். தங்கை கல்லூரியில் படிக்க பட்டணம் போகிறாள். துணைக்கு அண்ணனும் செல்கிறான். அங்கு ரவுடிகள் அவளை கடத்துகின்றனர். குடும்பமே அழுது புலம்புகிறது. ராகுல் அவளை கண்டு பிடித்து தந்தை மனதில் இடம் பிடித்தானா? என்பது கிளைமாக்ஸ்...
குடும்ப சென்டிமென்ட் கதையை காதல், ஆக்ஷனில் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் சுரேஷ். துறுதுறுவென வருகிறார் ராகுல். தந்தை பிறந்த நாளில் விருப்பமான பாடலை எப்.எம். ரேடியோவில் போடச் சொல்ல பாடலோ அவரை இழிவுபடுத்துவது போல் ஒலிபரப்பாவது ரகளை.
கவுன்சிலர் அடியாட்களுடன் மாடிகளில் தாவி குதித்து சண்டையிட்டு அனல் பறத்துகிறார்.
உத்ரா உன்னியுடனான ஒருதலை காதல் கவித்துவம். கிளைமாக்சில் விழிகளில் நீர் முட்ட வைக்கிறார். உத்ரா உன்னி கேரக்டரில் அழுத்தம் பதிக்கிறார்.
அண்ணன், தந்தை, தங்கை பாத்திரங்களும் கச்சிதம். தந்தை, மகன் சச்சரவுகள் வழக்கமான மசாலா. பட்டணத்துக்கு கதை பயணித்த பிறகு வேகம் பிடிக்கிறது.
ஜெரோம் புஷ்பராஜ் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. ஒய்.என். முரளி ஒளிப்பதிவு பலம்.