‘குணா’, ‘காதல் கொண்டேன்’ பாணி திரைப்படம்தான் ‘18 வயசு’. ஆனால் சொன்ன விதத்திலும் முடித்த விதத்திலும் சுவாரஸ்யமாகவே செய்திருக்கிறார்கள்.
உலகமே தன் அப்பாதான் என்று இருக்கும் கதாநாயகன் கார்த்திக். அவன் கண்முன்பே தன்னுடைய அம்மாவின் தவறான தொடர்பு காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார் பாசக்கார அப்பா. அதன்பிறகு தன்னுடைய அப்பா சொல்லிக் கொடுத்த காட்டைப் பற்றிய கற்பனையிலேயே வளர்கிறான் கார்த்திக்.
அதனால் காட்டில் போய் சந்தோஷமாக வாழலாம் என நினைக்கும் கார்த்திக்குக்கு வித்தியாசமான நோய் இருக்கிறது. அதாவது, அவன் பக்கத்தில் எந்த மிருகம் வந்தாலும் அந்த மிருகத்தின் குணமும், ஆக்ரோஷமும் அவனுள் வந்துவிடும்.
இந்நிலையில் பக்கத்து வீட்டுக்கு உறவினராய் வரும் நாயகி காயத்ரியின் மென்மையான அன்பில் தன் அப்பாவை மறந்து அவளே உலகம் என்ற நிலைக்கு வருகிறான். காயத்ரிக்கு பாதுகாப்பு தரும்படியான எந்த உறவும் இல்லாத நிலையில் கார்த்திக்கின் அன்பு பிடித்துப்போக அவனோடு அவன் வாழ நினைக்கும் காட்டுக்கே கிளம்ப தயாராகிறாள். அவனுக்கு இருக்கும் சைக்கோ குணங்கள் ஏதும் தெரியாமல் இருக்கும் காயத்ரி, காட்டுக்குள் கிளம்புகிற நேரத்தில் கள்ளக்காதலனோடு இருக்கும் அம்மாவை கார்த்திக் கொன்றுவிட, அவனுடன் செல்லும் முடிவிலிருந்து காயத்ரி பின் வாங்குகிறாள்.
இந்நிலையில் கார்த்திக்கை போலீஸ் துறத்துகிறது. விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்படும் காயத்ரியை மனநலம் பாதிக்கப்பட்ட தனது நண்பனோடு சேர்ந்து அவளை கடத்துகிறான். போலீஸ் கார்த்திக்கை சுட்டுத் தள்ள துடிக்க, கூடவே அவனை காப்பாற்ற நினைக்கிற டாக்டர் ரோகிணியும் அவனை பின்தொடர, முடிவை கழுத்தை அறுக்கும் சோகத்துடன் சொல்லாமல் கவிதையாக சொல்லியிருக்கிறார்கள்.
கார்த்திக்காக ரேனிகுண்டா ஜானி. மனநலம் பாதிக்கப்பட்டவராக உடல் மொழியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். நாயகி காயத்ரிக்கு அடுத்தடுத்து பெரிய ரவுண்டு வரக்கூடிய திறமை இருக்கிறது. பக்கத்து வீட்டு பெண் போன்ற இயல்பும், மென் சோகமும் இவரது ப்ளஸ். இவருடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி வந்திருக்கிறார்.
படத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இன்னொரு கதாபாத்திரம் ஜானியின் நண்பனாக வரும் ஜாக்கி. அவர் கதாபாத்திரம்தான் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.
டாக்டராக வருகிற ரோகிணியும் அனுபவ நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். அவரது கணவராக வரும் கிருஷ்ணா டாவின்சி வந்து போகிற கதாபாத்திரம் என்பதால் வேறு நல்ல வாய்ப்பை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
யுவராணியின் கள்ளக்காதலனாக வரும் டாக்டர் சூரி கலகலப்பூட்டுகிறார். ஜானியுடன் குப்பைமேட்டில் கட்டிப்புரண்டு சண்டைபோடும்போது நன்றாக அடி வாங்கியிருக்கிறார். ஒளிப்பதிவில் சக்தி மிரட்டியிருக்கிறார். வித்தியாசமான கோணங்களில் திரில்லரை கொண்டு வருவதிலும், அதே நேரத்தில் ஹீரோவின் கனவில் தேவதையாக வருகிற காயத்ரியை குளோசப் காட்சியில் காட்டுவதிலும் வெவ்வேறு பரிமாணங்களை காட்டியிருக்கிறார்.
தினேஷ் மற்றும் சார்லஸின் பின்னணி இசை சில இடங்களில் காட்சிகளுக்கு ஏற்ப தனி வண்ணத்தை தருகிறது. ‘உனக்கென்ன’ பாடல் படத்தில் தேவையில்லாத இடத்தில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் வந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு கேட்கலாம். மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
விலங்குகளின் குணாதிசயங்கள் ஹீரோவுக்கு வந்துவிடுமென்பது சுவாரஸ்யமான ஐடியாவென்றாலும், அதை நம்பும்படியாக செய்திருந்தால் படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கும்.
காகம் மாதிரி பறப்பதெல்லாம் காமெடியாக செய்திருக்கிறார். ஹீரோ காயத்ரியிடம் பேசுகிற முதல் வார்த்தையிலேயே யாருமே எளிதில் புரிந்துவிட முடியும் ஹீரோ மனநல வளர்ச்சி இல்லாதவர் என்பது. அப்படி இருக்கையில் அவரை நம்பி காயத்ரி காட்டுக்கு கிளம்புவது அழுத்தமாக இல்லை. நாடகத்தனமாக இருக்கிறது.
சின்ன கிராமத்தில் வீட்டு வராண்டாவில் இருந்து கொண்டு யுவராணி கள்ளக்காதலனோடு கொஞ்சிக் கொண்டு இருப்பது நம்பும்படியாக இல்லை. ஆனால் அந்த இடத்தில் ஆபாசத்திற்கு வாய்ப்பிருந்தும் அதனை இயக்குனர் தவிர்த்திருப்பது பாராட்டும்படியான விஷயம்.
ஆபாசம், வன்முறையை படம் முழுக்க தவிர்த்திருப்பதும், முடிவை மென்மையாக முடித்திருப்பதிலும் இயக்குனர் பன்னீர்செல்வம் ஈர்த்திருக்கிறார்.