மகாபாரதத்தில் வரும் சகுனி தனது தந்திரங்களால் கெட்டவர்களுக்கு உதவுவார். ஆனால் இந்த நவீன சகுனி கெட்டவர்களுக்கு எதிராக சகுனி ஆட்டம் போடுகிறார்.
காரைக்குடியில் வசித்துவரும் வசதியான ஒரு குடும்பம் காலங்காலமாக ஊருக்கே அன்னதானம் செய்து வருகிறது. தங்களிடம் பணம் இல்லாவிட்டாலும் எப்பாடு பட்டாவது ஊருக்கு அன்னதானம் செய்யும் அக்குடும்பத்திற்கே சோதனை வந்துவிடுகிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் ரெயில்வே தண்டவாளம் இவர்கள் வீடு வழியாக வருகிறது. வீட்டை இடித்து அத்திட்டத்தை நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், வீட்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென அந்த குடும்பத்தின் வாரிசான கமலக்கண்ணனிடம், அவரது தாத்தா கேட்டுக்கொள்கிறார்.
கமலக்கண்ணனும் வீட்டைக் காப்பதாக தாத்தாவுக்கு உறுதி கூறுகிறார். தாத்தாவுக்கு உறுதியளித்தபடி வீடு இடிக்கப்படாமல் காப்பதற்காக சென்னை சென்று ரெயில்வே அமைச்சரை சந்திக்க முடிவு செய்கிறார் கமலக்கண்ணன்.
சென்னையில் தனது அத்தை பரிமளா வீட்டில் தங்கும் கமலக்கண்ணன் அங்கு தனது அத்தை மகள் ஸ்ரீதேவியை சந்திக்கிறார். அங்கு ஸ்ரீதேவிக்கும் கமலக்கண்ணனுக்கும் காதல் மலர்கிறது. இந்நிலையில் ரெயில்வே அமைச்சருடன் சந்திப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறி பலரும் ஏமாற்றுவதால் விரக்தி அடைகிறார் கமலக்கண்ணன்.
விரக்தியில் ரோட்டோரமாக நடந்து வரும் கமலக்கண்ணனை ஆட்டோ டிரைவர் அப்பாராவ் ரஜினி வற்புறுத்தி தனது ஆட்டோவில் ஏற்றுகிறார். தன்னை ரஜினி என அறிமுகம் செய்து கொள்ளும் ஆட்டோ டிரைவரிடம், 'என் பேரு கமல்’ என கமலக்கண்ணன் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.
தன் ஆட்டோவில் வரும் கமலக்கண்ணனிடம் பணமே இல்லை என தெரிந்ததும் ரஜினி டென்ஷன் ஆவதும் அதே ரஜினியிடம் தன் பிளாஷ்பேக்கை கமலக்கண்ணன் சொல்வதுமாக கலகலப்பாக கதை நகர்கிறது.
பின்னர் அமைச்சரை சந்திக்கும் முடிவைக் கைவிட்டு தாத்தாவின் ஆலோசனைப்படி தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வருமான பூபதியை சிரமப்பட்டு சந்திக்கும் கமலக்கண்ணனுக்கு அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தனது பினாமியான காண்டிராக்டர் வசுந்தரா தேவிக்கு டெண்டர் கொடுத்துவிட்ட பூபதி, கமலக்கண்ணனின் வீட்டை இடித்தே ஆக வேண்டும் எனக் கூறுவதோடு அவரை அவமானப்படுத்தி விடுகிறார். இதனால் நொந்துபோன கமலக்கண்ணன் அரசியல்வாதிகள் தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை. எனவே சரியானவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறார்.
நேர்மையாக இருந்தால் ஜெயிக்க முடியாது என ‘சிவாஜி’ பட பாணியில் முடிவுசெய்து தனது வீட்டைக் காப்பதற்காக சகுனியாக மாறி தந்திரங்களை செய்கிறார்.
நேர்மையாக இருந்தால் ஜெயிக்க முடியாது என ‘சிவாஜி’ பட பாணியில் முடிவுசெய்து தனது வீட்டைக் காப்பதற்காக சகுனியாக மாறி தந்திரங்களை செய்கிறார்.
பின்னர் ரஜினியின் ஆட்டோவுக்கு பைனான்ஸ் செய்யும் ரமணி ஆச்சி மூலமாக அரசியலில் களமிறங்குகிறார் கமலக்கண்ணன். முதல்வர் பூபதியின் கட்சிக்கு எதிராக கவுன்சிலர் தேர்தலில் ரமணியைப் போட்டியிட வைத்து தனது தந்திரங்கள் மூலமாக அவரை ஜெயிக்கவும் வைக்கிறார். பின்னர் கவுன்சிலர் ரமணியை, மேயர் தேர்தலில் நிற்கவைத்து மேயர் ஆக்குகிறார்.
இறுதியில் சட்டமன்ற தேர்தல் வர, எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து தனது தந்திரங்கள் மூலம் அவரை ஜெயிக்க வைத்து முதல்வராக்க முயல்கிறார். இம்முயற்சியில் கமலக்கண்ணன் ஜெயித்தாரா? அவரது வீட்டைக் காப்பாற்ற முடிந்ததா? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
படத்தின் முதல் பாதியை நகைச்சுவையாகவும், இரண்டாவது பாதியை அதிரடியாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். முடிச்சை அவிழ்ப்பது ஒரு சுவாரஸ்யம்னா, அவிழ்க்க முடியாத முடிச்சுகளைப் போடுவது அதைவிட சுவாரஸ்யம் என பஞ்ச் சொல்லி, அழகான முடிச்சுகளைப் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர் தயாளுக்கு ஒரு சபாஷ் போடலாம்.
கமலக்கண்ணனாக வரும் கார்த்தி காமெடியிலும், காதல் காட்சிகளிலும், அதிரடியிலும் பின்னியிருக்கிறார். சந்தானத்துடன் இணைந்து அவர் செய்கிற ரகளையில் அரங்கம் அதிர்கிறது. அப்பாராவ் ரஜினியாக வரும் சந்தானம் வழக்கம்போல தனது பணியை கச்சிதமாக செய்து, கரவொலியில் மிதக்கிறார்.
கார்த்தியின் அத்தை மகள் ஸ்ரீதேவியாக வரும் ப்ரணிதா, காதல் காட்சிகளில் ஒன்றுவதோடு தனது கேரக்டரில் நன்றாகப் பொருந்தியிருக்கிறார்.
முதல்வர் பூபதியாக வரும் பிரகாஷ்ராஜ், சாமியாராக வரும் நாசர், ரமணி ஆச்சியாக வரும் ராதிகா, அத்தை பரிமளாவாக வரும் ரோஜா, பெருமாளாக வரும் கோட்டா சீனிவாசராவ், காண்ட்ராக்டர் வசுந்தரா தேவியாக வரும் கிரண் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் சுகமான ராகங்கள். பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு நிறைவாக உள்ளது. நகைச்சுவை காட்சிகளும், சகுனியின் தந்திரங்களும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவழைக்கப் போவது நிச்சயம்.
சகுனி.....கார்த்திக்கு மேலும் ஒரு வெற்றிக்கனி.