உடுமலைப்பேட்டையில் உள்ளது கிருஷ்ணவேணி பஞ்சாலை. அந்த ஊரில் இருப்பவர்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்வதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு படிக்க சென்றிருக்கும் பஞ்சாலை முதலாளியின் மகனான ராஜிவ் கிருஷ்ணா அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்து போகும் பஞ்சாலை முதலாளி தற்கொலை செய்து கொள்கிறார்.
தந்தையின் ஆசைப்படி அமெரிக்காவிலிருந்து பஞ்சாலையை நிர்வகிக்க வருகிறார் ராஜிவ் கிருஷ்ணா. இப்படி சாதி பிடிப்பு அதிகம் உள்ள அந்த ஊரில் கதாநாயகன் கதிரும், கதாநாயகியான பூங்கோதையும் பஞ்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பூங்கோதையின் அக்கா சாதி விட்டு சாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு கதாநாயகனும் அவனது நண்பர்களும் உதவியாய் இருக்கிறார்கள். இதனால் பூங்கோதையின் வெறுப்பிற்கு ஆளாகும் நாயகன், அவரது அக்கா சந்தோஷமாக இருப்பதை எடுத்துச் சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார்.
ஆனால் கதாநாயகியின் அம்மாவான ரேணுகாவோ தனது மூத்த மகள் செய்ததை ஏற்க மறுக்கிறார். பின்னாளில் ரேணுகாவை சமாதானப்படுத்தும் பூங்கோதை கர்ப்பமாக இருக்கும் தனது அக்காவையும் அவரது கணவரையும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
சந்தோஷமாய் சாப்பிட்டு விட்டு அனைவரும் உறங்க செல்கின்றனர். மறுநாள் காலையில் பூங்கோதையின் அக்கா செத்துக் கிடக்கிறார். அவரது கணவரோ தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இதனிடையே பஞ்சாலை தொழிலாளர்களுக்கு முதல் வருடம் வந்த லாபத்தில் 40 சதவீதம் போனஸ் தரும் ராஜிவ் கிருஷ்ணா, நடப்பாண்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 40 சதவீதம் போனஸ் தரமுடியாது என்கிறார். இதனால் போராட்டத்தில் குதிக்கும் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
பஞ்சாலை சூப்பர்வைசராக வரும் சாக்லேட் சண்முகம் பூங்கோதையை ஒருதலையாய் காதலிக்கிறார். இவரது காதலை பூங்கோதை ஏற்க மறுக்க, விஷம் குடித்து விடுகிறார் சண்முகம். இதனால் கொந்தளிக்கும் சண்முகத்தின் தாய், ரேணுகாவின் குடும்பத்தையே அசிங்க அசிங்கமாய் ரோட்டில் வைத்து திட்டி விடுகிறார்.
இதனால் அவமானத்திற்குள்ளாகும் ரேணுகா தற்கொலை செய்து கொள்கிறார். அனாதையாக்கப்பட்ட பூங்கோதை நாயகனிடம் வருகிறார். உடுமலையிலிருந்து இருவரும் சென்னை வருகிறார்கள்.
அங்கு அவர்கள் நிலை என்ன ஆனது? மூடப்பட்ட பஞ்சாலை என்ன ஆனது? என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் தனபால் பத்மநாபன்.
கதிர் கேரக்டரில் நடித்துள்ள ஹேமச்சந்திரனின் நடிப்பு மிகவும் நேர்த்தி. பூங்கோதையாக நடித்துள்ள நந்தனாவின் நடிப்பு கச்சிதமாய் அந்த கேரக்டருக்கு பொருந்தியிருக்கிறது. அழகாய் இருப்பது மட்டுமின்றி அழகாய் நடித்தும் இருக்கிறார்.
சாதி பிடிப்பில் உறுதியாக இருக்கும் அம்மாவாக வரும் ரேணுகா, அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். சாக்லேட் சண்முகமாக வரும் சண்முக ராஜாவின் நடிப்பு அற்புதம். கேண்டீன் மாஸ்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், கதிரின் நண்பன் கிட்டுவாக வரும் அஜயன் பாலா, டிப்டாப் பழனிசாமியாக வரும் பாலாசிங் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.
வைரமுத்து, தாமரை ஆகியோர்களின் வரிகளில் பாடல்கள் அத்தனையும் இதம். அதிலும் உன் கண்கள் கண்ணாடி பாடல் கண்களுக்கும், செவிகளுக்கும் இதம்.
என்.ஆர். ரகுநந்தனின் இசை படத்திற்கு பக்க பலம். சுரேஷ் பார்கவ் மற்றும் அதிசயராஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறது. 'சாதி விட்டு சாதி கல்யாணம் பண்றவங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் ஒரே ஊர் சென்னை மட்டுமே' என்று நச் வசனத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.
பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்வியலையும், உடுமலை வட்டாரப் பகுதிகளில் முன்பு இருந்த சாதிப் பிடிப்பை அழகாய் பதிவு செய்திருக்கிறார் தனபால் பத்மநாபன்.
கதாநாயகி அக்காவின் சாவிற்கு யார் காரணம் என்பதை கிளைமாக்சில் சொல்லாமல் விட்டது குறை என்றே சொல்லவேண்டும்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை - ரசிகர்களை கவரும் ஆலை