நான்கு விதமான கதைகள் கிளைமாக்ஸில் ஒன்று சேர்கிறது. முடிவு என்ன என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
முதல் கதையில் தாய், தந்தையர் திடீரென்று இறந்துபோக கதாநாயகி தன் தங்கையுடன் அனாதையாகி விடுகிறார். பெற்றோர் இறந்த அதிர்ச்சியில் கதாநாயகியின் தங்கை பைத்தியமாகிவிடுகிறார். அவளை அங்குள்ள மனநலகாப்பகத்தில் சேர்த்து விட்டு, அதே காப்பகத்தில் கம்யூட்டர் ஆபரேட்டராக வேலைக்கு சேர்கிறார். அக்காப்பகத்தின் தலைவன், அங்குள்ள பெண்களை கற்பழித்து விடுகிறான். அதை படம்பிடித்து அவனது வெப்சைட்டில் போட்டு விடுகிறான். இதை அறியும் கதாநாயகி அவனை போலீஸில் பிடித்துக் கொடுக்க, கதாநாயகியை பழிவாங்க துரத்துகிறான்.
இரண்டாவது கதையில், கதாநாயகன் நிதின் சத்யாவின் நண்பன் காதல் படத்தில் வரும் பரத்தைப் போல ஒரு பெண்ணைக் காதலித்து விட்டு, ஏமாற்றத்தால் மெண்டாலாகித் திரிகிறார்.
மூன்றாவது கதை, இன்ஸ்பெக்டராக வரும் அஜய் ரத்தினம் ஒரு சந்தேகப் பேர்வழி. வேலைக்கு செல்லும் போது தனது மனைவியை வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டி விட்டு போகும் அளவுக்கு சந்தேகப் பேர்வழி. இதனால் வெறுப்படையும் அவரது மனைவி கதாநாயகனின் நண்பனோடு தப்பு செய்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
நான்காவது கதை, கதாநாயகன் நிதின் சத்யா டாக்சி டிரைவராக இருக்கிறார். கதாநாயகியை நேரில் பார்க்காமல் காதலிக்கிறார். அவரும் காதலிக்கிறார். நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டாலும் இவன்தான் தன் காதலன், இவள்தான் தன் காதலி என்று அவர்களுக்கு தெரிவதில்லை...
இந்த நான்கு கதைகளும் இறுதியில் ஒன்று சேர்கிறது. தன்னை துரத்தும் வில்லனிடமிருந்து நாயகி தப்பித்தாளா? தனது காதலனை கைபிடித்தாளா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி படத்தை முடித்திருக்கிறார்.
படத்தில் நிதின் சத்யா நடிப்பு சுமார் ரகம். நாயகியாக வரும் திஷா பாண்டேவின் நடிப்பு பரவாயில்லை. நான்கு கதைகளும் இஷ்டத்திற்கு ரெக்கை கட்டி பறக்க, பார்க்கும் ரசிகனுக்கு ஒன்றும் புரியக்கூடாது என்று இயக்குனர் வேந்தன் நினைத்துக் கொண்டாரோ என்னவோ.
திரைக்கதையில், லாஜிக்கில், காட்சிகளில் ஏகப்பட்ட ஓட்டைகள். படம் சொல்லியிருக்கும் விதம் ரசிகர்களுக்கு அதிருப்தியை தரும் அளவிற்கு இருக்கிறது.
மயங்கினேன் தயங்கினேன் - பார்ப்பவர்களுக்கு மயக்கம்தான்.