பருவத்தில் வரும் தீவிர உணர்ச்சி அதே வேகத்தில் நீர்த்துப் போகவும் கூடும் என்பதை இதுவரை பார்த்திராத கதைக்களத்தில் அழகாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி.
கருவேல மரங்கள் நிறைந்த கடற்கரை. நிழலற்ற சாலை. எந்நேரமும் அடிக்கின்ற தீவிரமான, இடைவிடாத வெயில். தூரத்தில் மேகத்தை தொட்டு நிற்கும் புகை போக்கிகள். குலசேகரப்பட்டினத் திருவிழா, வியாபாரம், வீடு என்று இருக்கும் நடுத்தர சமூகம் என தூத்துக்குடியின் முகத்தை யதார்த்தமாக காட்டியதில் ராட்டினம் தனி ரகம்.
ஒரு பெண்ணுக்காக இரு பையன்கள் அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்கள். அதில், ஒருவன் அந்த பெண்ணின் பின்னால் இரண்டு வருடமாக சுற்றும் பானை சேகர். இவன் நாயகன் லகுபரனின் நண்பன்.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளிவரும் தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க லகுபரன் அந்த பெண் பின்னால் சுற்றுகிறார். ஒருகட்டத்தில் பானை சேகர் தன் காதலை காதலியிடம் சொல்ல லகுபரன் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார். பதற்றத்தில் நண்பன் தடுமாற, அந்த பெண் நண்பனை கண்டுகொள்ளாமல் போய்விடுகிறாள்.
உடனே, காதலை எப்படி தைரியமாக சொல்லவேண்டும் என்பதை நண்பனுக்கு விளக்க, அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட்டோடு வரும் நாயகி சுவாதியை மடக்கி, காதலை ஒரு பெண்ணிடம் தெரிவிப்பது எப்படி என சொல்லிக் காட்டுகிறார் லகுபரன். ஏதும் அறியாத சுவாதி பதிலுக்கு லகுபரனை திட்டிவிட்டு செல்கிறாள்.
அதன்பின்பு லகுபரனை தான் படிக்கும் பள்ளி முன்னால் பார்க்கும் போதெல்லாம் தன்னை துரத்துவதாக நினைத்து சுவாதி சண்டையிட, அதுவே அதற்கடுத்த சந்திப்புகளில் அவர்களுக்குள் காதலை உண்டக்குகிறது.
லகுபரனுடன் சுவாதி பள்ளிக்கூடத்திற்கு கட் அடித்து விட்டு திருச்செந்தூர் சென்று திரும்பும் வழியில் போலீஸிடம் மாட்டிக் கொள்ள, அதற்கடுத்து, அவர்களின் அதிதீவிரமான காதல் அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திக்க, முடிவு காலமாற்றத்தை உணர்த்தும் உண்மை.
லகுபரன் ஒரு நடுத்தர வர்க்க பையனாக நம் மனதில் பொருந்துகிறார். காதலிக்கு கொடுக்கும் அன்பளிப்பை பைக்கில் வைத்துவிட்டு அவள் அதை எடுக்கும்போது தூர நின்று தலையை கவிழ்த்து, தலையை ஆட்டிக் கொண்டே ஓரப் பார்வை பார்ப்பதும், அண்ணனுடைய ஹார்டுவேர் கடையில் வேலை செய்யும் போதும் அழகாக இருக்கிறார்.
தனமாக ஹீரோயின் சுவாதி. கேரளத்து வனப்பில் வசீகரமாக ஈர்க்கிறார். ஸ்கூல் பெண்ணாக மட்டும் கொஞ்சம் பொருந்தி பார்க்க முடியவில்லை. மற்றபடி தீவிரமான காதலை வெளிப்படுத்துவதிலும், முடிவில் லகுபரனின் அப்பாவை நகைக் கடையில் சந்திக்கும்போது ஒரு வாழ்க்கையையே தன் கண்களுக்குள் மறைப்பதிலும் கச்சிதம்.
படத்தில் எல்லாவற்றிலும் முதலாவதாக இருப்பது லகுபரனின் அண்ணனாக வரும் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி. அதிர்ந்து பேசாத முகம். தன் தொழில், தனக்கென்று இருக்கும் அரசியல், அதில் வெளிப்படுத்துகிற யதார்த்தம் என சமூக அடையாளங்களோடு பொருந்தியிருக்கிறார். முடிவில் அவர் இறக்கும்போது உண்மையிலேயே நம்மை பரிதாபப்பட வைக்கிறார். ஹீரோவுடைய வீட்டை இதுவரை எந்த படங்களிலும் இல்லாத அளவு யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
லகுபரனின் நண்பனாக வரும் பானை சேகரும், அவருடைய காதல் டிராக்குகளும் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை.
ஒரு யதார்த்தமான காதல் கதை, ஒரு இரண்டாம் நிலை நகரத்தில் இருக்கும் அரசியல் போட்டிகள், சிறு பிரச்சினையிலும் ஆதாயம் தேட நினைக்கிற அரசியல் நரித்தனம், வட்டார மொழி என கவனமாக ராட்டினத்தை கையாண்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி.
படத்தின் பின்பாதியில் மட்டும் இன்னும் வேகம் கூட்டியிருக்கலாம். பாடல்களில் கவனம் செலுத்திய இசையமைப்பாளர் பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம்.
தூத்துக்குடியின் நகர்புறங்களையும், அதைச் சுற்றியுள்ள இடங்களையும் அப்படியே அள்ளி வந்திருக்கிறது ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு. திரைக்கதையில் நுணுக்கமான அரசியல், காதலுக்குள் அரசியலை நுழைத்த விதம், லகுபரன் நண்பனின் காதல், முக்கியமாக வயிறு குலுங்க வைக்கும் கள்ளக்காதல் ஜோடி காமெடி என அனைத்தையும் கோர்வையாக கொண்டு வந்த இயக்குனர் படத்தின் முடிவில் மட்டும் அந்த காதல் தோல்வியில் முடிவதற்கான காரணத்தை சொல்லாமலேயே விட்டு விட்டது ஒரு நெருடல்.
பிரிந்துபோன காதலை லகுபரனுடைய அப்பாவின் பார்வையில் பார்ப்பதும், அவர் காலமாற்றத்தையும், இழப்புகளையும் நினைத்து ராட்டினத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல் மாறிய உலகில், அவர் தனிமையில் நிற்க என படத்தின் முடிவு கவிதையாக நம் மனதில் நிற்கிறது.