வெகுநாள் கழித்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முழுநீள காமெடி கலாட்டாவான படம். 2.30 மணி நேரமும் முழுக்க முழுக்க சிரித்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரலாம். அந்த அளவுக்கு காமெடியாக பண்ணியிருக்கிறார் இயக்குனர்.
கும்பகோணத்தில் மூன்று தலைமுறையாக கொடிகட்டிப் பறந்த மசாலே கபே ஹோட்டல், இந்த காலக்கட்டத்தின் கைக்கு வந்தபின் வியாபாரத்தில் நொடிந்து போய்விடுகிறது. ஹோட்டல்தான் தனக்கு எல்லாமே என நினைக்கும் ஹீரோ விமல், ஹோட்டலை நடத்துவதற்காக கடன் வாங்கி வியாபாரம் நடத்துகிறார். சமையல்காரராக வி.எஸ்.ராகவனும், அவருக்கு உதவியாக அவரது பேத்தி ஓவியாவும் அதே ஓட்டலில் பணிபுரிகிறார்.
விமலுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் அவருக்கு கடன் கொடுக்கிறார் இளவரசு. இந்நிலையில் ஊருக்கு புதிதாக வரும் சுகாதார ஆய்வாளரான அஞ்சலி, வந்தவுடனேயே ஓட்டலை பரிசோதித்துவிட்டு, இரண்டு மாதத்திற்குள் ஹோட்டலை மூடவேண்டும் என்று ஆணையிடுகிறார். ஆகவே, இதிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று யோசனை செய்கிறார் விமல்.
இந்நிலையில் ஊரின் முக்கிய பிரமுகர் ஒருவர் ஹோட்டலை அபகரிக்க முயல்கிறார். அவருக்கு விமலின் நண்பரும் அந்த ஊர் இன்ஸ்பெக்டருமான ஜான் விஜய் உறுதுணையாக இருக்கிறார்.
இதையடுத்து, விமலின் தம்பியான சிவா ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். அவர் ஒரு பில்டப் ஆசாமி. தான் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாக பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி தனது இமேஜை கூட்டிக் கொள்கிறார். அவரிடம், விமல் இதுவரை ஹோட்டலில் நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்.
அதற்கு சிவா, விமலிடம் சுகாதார ஆய்வாளரான அஞ்சலியை நீ காதலித்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று கூறுகிறார். இதையடுத்து, விமலும் அஞ்சலியை காதலிக்க ஆரம்பிக்க, அஞ்சலியும் விமலை காதலிக்கிறார்.
இந்நிலையில் ஓவியாவுக்கும் சிவாவுக்கும் காதல் ஆரம்பிக்கிறது. ஹோட்டலின் வியாபாரத்தை அதிகப்படுத்த விமலுக்கு சிவா யோசனை கூறுகிறார். அதன்படி, பழைய கிராமத்து உணவுகளை சமைத்துக் கொடுத்து அதன் மூலம் ஒரே பாடலில் வியாபாரத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் சகோதரர்கள்.
தனது சொந்த கிராமத்துக்கு செல்லும் அஞ்சலிக்கு, ஊரில் முறைமாமனுடன் திருமணம் நிச்சயமாகிறது. அந்த திருமணத்தில் இஷ்டமில்லாத அஞ்சலி தனது காதலன் விமலுக்கு போன் பண்ணி, தன்னை அழைத்துச் செல்ல கிராமத்துக்கு வருமாறு அழைக்கிறார்.
விமல் தன் தம்பி சிவாவிடம் ஹோட்டலை பார்த்துக் கொள்ளுமாறு ஒப்படைத்துவிட்டு அஞ்சலியின் கிராமத்துக்கு போகிறார். கிராமத்துக்கு செல்லும் விமல், வில்லன்களான சந்தானம், மனோபாலா கோஷ்டியிடம் சில ரகளைகள் செய்து, காதலியை கைப்பிடிக்கும் தருணத்தில் அஞ்சலியின் தாத்தா விபத்தில் சிக்கிவிட, அதற்கு காரணம் விமல்தான் என கருதி, விமலை வெறுக்கிறார் அஞ்சலி.
காதலியை கைப்பிடிக்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் கும்பகோணம் திரும்பும் விமலுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. எதிரிகளின் சதியால் சீட்டாட்டத்தின் மூலம் ஹோட்டலை இழக்கிறார் சிவா. காதலி ஓவியாவும் இவரை விட்டு பிரிகிறார். இதனால் பெரும் மனமுடைந்து போகிறார் விமல்.
இறுதியில் சகோதரர்கள் ‘மசாலா கபே’ ஹோட்டலை எப்படி மீட்கிறார்கள்? என்பதும், பிரிந்த காதலர்கள் காதலில் வெற்றி அடைந்தார்களா? என்பதும் மீதிக் கதை.
இடையில் சுப்பு தலைமையிலான வில்லன் கோஷ்டி, ரூ 10 கோடி வைரத்தை ஒரு செல்போனில் வைத்துத் தொலைத்துவிட்டு தேடுகிறது. அந்தக் கதையின் க்ளைமாக்ஸும் மசாலா கபேவுக்கே வருகிறது.
முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சி வரை எங்கு தேடினாலும் கதையில் கிடைக்காத ஒரே சமாச்சாரம் லாஜிக் மட்டும்தான். ஆனால் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலவென காமெடியாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. அதற்காக அவருக்கு சல்யூட் வைக்கலாம்.
காதலி கேட்கும் பொருள்களை வாங்க பர்தா போட்டுக் கொண்டு சிவா திருடுவது சரியான காமெடி. அந்த நேரம் பார்த்து கடையில் ஹேண்ட் பேக் வாங்க வந்து பணமில்லாமல் தவிக்கும் விமல், அந்தப் பையையும் சேர்த்து திருடிக் கொடுக்குமாறு கேட்பது வயிற்றைப் புண்ணாக்குகிறது.
அதிலும் அந்த நாய் கேரக்டர் வரும்போதெல்லாம் தியேட்டரில் சிரிப்பு சத்தம்தான் மேலோங்கியிருக்கிறது.
விமல்தான் படத்தின் ஹீரோ. ஆனால் ஹீரோயிஸம் காட்டாமல், அப்பாவியாக நமது மனதில் நிற்கிறார். அவர் தம்பியாக வரும் சிவா அவருடைய கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காமெடிக்கு இவர் சரியான தேர்வு.
நாயகிகளில் அஞ்சலிக்குதான் நடிக்க, கவர்ச்சி காட்ட ஏக வாய்ப்பு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறங்கி வந்து கவர்ச்சி காட்டி கதிகலங்க வைக்கிறார். ஓவியாவும் படத்தில் கேப் கிடைக்கும்போதெல்லாம் குளிக்கிறார் அல்லது குத்தாட்டம் போடுகிறார் அல்லது பாவாடை சட்டையோடு வந்து ஒரு வழி பண்ணிவிடுகிறார் நம்மை.
இடைவேளைக்குப் பிறகுதான் சந்தானம் வருகிறார். வாயைத் திறந்தால் வண்டிவண்டியாக ஜோக்குகளைக் கொட்டும் அவருக்கு மொக்கையான வசனங்கள். இருந்தாலும் அவரது பாடி லாங்வேஜ், பார்த்தவுடன் சிரிக்க வைக்கிறது.
போலீசுக்கு பயந்து தசாவதாரம் கமல் ரேஞ்சுக்கு விதவித கெட்டப்புகளில் வரும் இளவரசு, வைரங்களைத் துரத்தி க்ளைமாக்ஸில் தர்ம அடிவாங்கும் சுப்பு, வைரங்களை லவட்டிக் கொண்டு போக நினைத்து, முன்னாள் மந்திரி வீட்டு பாத்ரூம் சுவர் ஓட்டைக்குள் மாட்டிக் கொள்ளும் ஜான் விஜய், அந்த நாய்... என அத்தனை பாத்திரங்களையும் நினைத்து நினைத்து சிரிக்கலாம்!
ரூ 10 கோடி வைரத்தை யாராவது செல்போன் கவரில் வைத்து, அத்தனை அலட்சியமாக ஒரு மூளை சரியில்லாதவனிடம் கொடுத்தனுப்புவார்களா? அந்த செல்போன் ஒவ்வொருவர் கையாக மாற, அவர்களும் நம்பரை மாற்றாமல் அப்படியேவா உபயோகிப்பார்கள்? அத்தனை பெரிய ஹோட்டலை வைத்து யாராவது சீட்டாடுவார்களா? அண்ணன் தம்பி இருவருக்கும் சொந்தமான ஹோட்டலை தம்பி மட்டுமே கையெழுத்துப் போட்டு பதிவு செய்வது சாத்தியமா? இப்படிப்பட்ட கேள்விகளை மறந்துவிட்டால் படத்தை ரசிக்கலாம்.
செந்தில்குமாரின் கேமரா காவிரியை ரொம்ப அழகாகப் படம் பிடித்திருக்கிறது. விஜய் எபினேசரின் இசையில் உன்னைப் பற்றி உன்னிடமே, இவளுக இம்சை.. பரவாயில்லை ரகம். பாடல் வரிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
தியேட்டருக்கு வந்தவர்களை சிரிக்க வைப்பது மட்டும்தான் ஒரே நோக்கம் என படுபயங்கரமாக வேலை பார்த்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. அந்த வகையில் அவரது கணக்கு தப்பவில்லை.
மொத்தத்தில் 'கலகலப்பு' சிரிப்புக்கு பஞ்சமில்லை!