கூரியரில் சரவணன் என்ற பெயருக்கு ஒரு கவர் வருகிறது. மொட்டைமாடியில் தூங்கி கொண்டிருக்கும் சரவணனை எழுப்பி அந்த கவரைத் தருகிறார் அந்த கூரியர் மேன்.அதை வாங்கி பிரித்துப் பார்த்தால் அந்த கவரில் சரவணனின் காதலி மீராவின் திருமண அழைப்பு.
அழைப்பிதழில் முக்கிய குறிப்பாக திருமணத்திற்கு வர வேண்டாம் என்று எழுதி அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பிதழில் முக்கிய குறிப்பாக திருமணத்திற்கு வர வேண்டாம் என்று எழுதி அனுப்பப்பட்டுள்ளது.
உடனே சரவணன் அவரது நண்பன் பார்த்தசாரதிக்கு தொடர்பு கொண்டு காரை எடுத்துக் கொண்டு அடையாறு சிக்னலுக்கு உடனே வா. நாம் பாண்டிச்சேரிக்கு சென்று மீராவின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார். உடனே இரண்டு ஜாம்பவான்களும் திருமண வரவேற்பிற்கு பயன்படுத்தும் காரை எடுத்துக் கொண்டு பாண்டிச்சேரிக்கு செல்கிறார்கள்.
செல்லும் போதே இவர்களின் பிளாஷ்பேக் கதை என்னவென்பதை இயக்குனர் ராஜேஷ் சொல்கிறார். இரண்டே வரி கதைதான் இப்படம். நாயகன் நாயகியை விரட்டி விரட்டி காதலிக்கிறார். நாயகனின் காதலை வெறுக்கும் காதலி இறுதியில் காதலை ஏற்றாரா, இவர்கள் ஜோடி சேர்ந்தார்களா என்பதுதான் கதை...
இந்த இருவரி கதையை, தனது திறமையான திரைக்கதை மூலம், காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ராஜேஷ். சரவணனாக நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு இது முதல்படம் என்று இல்லாத அளவிற்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் காட்சிகளானாலும் சரி, காமெடி காட்சிகளானாலும் சரி, குடும்ப காட்சிகளானாலும் சரி அனைத்திலும் ஒன்றிணைந்து நடித்துள்ளார்.
பார்த்தசாரதியாக வரும் சந்தானம் இவருடன் இணைந்து நடித்திருக்கும் லூட்டியே இப்படத்தின் பியூட்டி எனலாம். படம் முழுக்க வரும் சந்தானம் இப்படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம். இப்படத்தில் இவரது டயலாக் டெலிவரி மட்டுமின்றி, பாடி லாங்வேஜ் இப்படத்தில் முதன் முதலாக பார்க்க முடிகிறது. அது காமெடி காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.
மீராவாக நடித்துள்ள நாயகி ஹன்சிகா மோத்வானி, ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் முக பாவனைகள், இளவட்டங்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் எனலாம். இப்படத்தில் 'சின்ன குஷ்பு' என்று பாராட்டும் காட்சிகள் இவருக்கு படு பொருத்தம். நாயகனை வெறுக்கும் போதும் பிறகு காதலை ஒப்புக் கொள்ளும் போதும் நடிப்பில் அழுத்தம்.
நாயகனின் அம்மாவாக வரும் செண்பகம் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் சரண்யா பொன்வண்ணன். அம்மாவின் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.நாயகனின் தந்தையாக வரும் வரதராஜன் கதாபாத்திரத்தை செய்துள்ள அழகம் பெருமாள் முதலில் இறுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி பிறகு மென்னைமயான தந்தையாக வலம் வந்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் வரும் ஆர்யா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் சில நிமிடங்களே வந்தாலும் நினைவில் நிற்கின்றனர்.
நா.முத்துக்குமாரின் வரிகளில் 5 பாடல்களும் முத்தான பாடல்கள். அகிலா அகிலா பாடலில் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் தனது கேமராத் திறமையை காட்டியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பக்கபலம். இதுமட்டுமின்றி இவரது பின்னணி இசை படத்தினை மிகச்சிறப்பாக நகர்த்த உதவியிருக்கிறது. விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறது.
கலகலப்பாக செல்லும் படத்தில் குடும்ப காட்சிகள் வரும்போது மற்றும் படத்தின் வேகம் சற்று மட்டுப்படுகிறது. இதை தவிர்த்திருக்கலாம். இருப்பினும் எளிமையான கதையை தனது திறமையான காமெடி கலந்த காட்சியமைப்புகளால் கலகலப்பாக படத்தை கொடுத்துள்ள இயக்குனர் ராஜேஷை மனதார பாராட்டலாம் மொத்தத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி... ரசிகர்கள் பட்டாளம் அதன் பின்னாடி..!