நண்பர்கள் ஆறு பேர் அடர்ந்த காட்டுக்குள் மலையேற்ற பயிற்சி எடுக்க செல்கின்றனர். அவர்களில் இருவர் பெண்கள். சுற்றுலா வழிகாட்டியையும் உடன் அழைத்து செல்கின்றனர்.
இரவில் ஒரு பகுதியில் தங்குகின்றனர். விடியும் போது வழிகாட்டியாக வந்தவர் செத்து கிடக்கிறார். அவர் பிணமும் மாயமாகிறது.
இதனால் பதற்றமாகும் ஆறு பேரும் பயணத்தை ரத்து செய்து திரும்புகிறார்கள். அப்போது நர மாமிசம் சாப்பிடும் காட்டு மனிதர்கள் அவர்களை வழி மறித்து பிடித்து போய் மரத்தில் கட்டி போடுகின்றனர். மூன்று பேரை ஒவ்வொருத்தராய் கொன்று சாப்பிடுகின்றனர். மற்றவர்கள் கதி என்ன? என்பது கிளைமாக்ஸ்.
காட்டில் திகிலும் பயமுமாய் காட்சிகளை விறு விறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் பண்டி சரோஜ் குமார்.
நண்பர்களாக வரும் ராஜேஷ், ஷரண், ராஜேஷ் கனகசபை, வித்யா, விக்டோரியா கேரக்டரில் அழுத்தம் பதிக்கின்றனர்.
ராஜேஷ் அளவோடு பேசி சீரியஸ் காட்டுகிறார். எம்.எல்.ஏ. மகன் என பந்தா விடும் ராஜேஷ் கனகசபை கலகலப்பூட்டுகிறார்.
நர மனிதர்களிடம் இருந்து உயிர் பிழைக்க போராடும் சீன்கள் பதற வைக்கின்றன. காட்டுக்குள் கேரக்டர்களை ஓட விட்டே காட்சிபடுத்தியது சலிப்பு.
சக தோழர்களின் கொடூர சாவை கண்டு முகத்தில் கொலை பயத்தை காட்டாமல் இருப்பதும் நெளிய வைக்கிறது. சித்தார்த்தா விபின் பின்னணி இசையும் ராஜ்குமார் ஒளிப்பதிவும் பயம் காட்டுகிறது.