காதல் திருமணம் செய்த இளைஞனுக்கு பைத்தியம் பிடித்தால்...? இதுவே கரு...
ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்திலும் 'கொலை வெறி' பாடல் பிரபலத்திலும் எதிர்பார்ப்போடு வந்துள்ள படம். தனுஷ் இறந்து மனைவி ஸ்ருதியும், குடும்பத்தினரும் அழுது புரள பிளாஷ்பேக்கில் சாவுக்கான காரணங்களை அலசுவதுபோல் கதை விரிகிறது.
பிரபு- பானுப்பிரியா தம்பதி மகன் தனுஷ். பிளஸ்-2 மாணவன். இவருக்கு இன்னொரு பள்ளியில் படிக்கும் ஸ்ருதி மேல் காதல். முதலில் வெறுப்பு காட்டும் ஸ்ருதி பிறகு காதலை ஏற்கிறார். மகளை அமெரிக்காவில் படிக்க வைக்கும் கனவில் இருக்கும் ஸ்ருதியின் பெற்றோருக்கு காதல் விவகாரம் இடியாய் தாக்குகிறது.
பிரபுவும் எதிர்க்கிறார். படிப்பு முடிந்ததும் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். சந்தோஷமாய் நகரும் இல்லற வாழ்க்கையில் தனுஷ் மனச் சிதைவு புயலை கிளப்புகிறது.
கோபம் வரும்போது சைக்கோவாக மாறி, கையில் கிடைத்தவர்களை கொலை வெறியாய் துவம்சம் செய்கிறார். நண்பன் உதவியுடன் ஸ்ருதிக்கு தெரியாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். ஒரு கட்டத்தில் நோய் எல்லை மீற அதன் பிறகு நடக்கும் விபரீதங்கள் உயிரை உலுக்குபவை. முதல் பாதியில் கவித்துவமான காதலையும், பிற்பகுதியில் திகிலையும் வைத்து கல கலப்பும் விறு விறுப்புமாய் காட்சிகளை நகர்த்தும் ஐஸ்வர்யா சிறந்த அறிமுக இயக்குனராக பளிச்சிடுகிறார்.
பிளஸ் 2 மாணவ பருவ காதலை செதுக்கிய விதம் அழகு... ஒரு மழையில் சைக்கிள் செயின் கழன்று சிரம்மப்படும் ஸ்ருதிக்கு தனுஷ் உதவி காதல் வயப்படுவதும், பிறகு அவர் சீருடையை வைத்து பள்ளியை தேடிப்பிடித்து, வாயிலில் நின்று காதல் பார்வை வீசுவதும், ஸ்ருதி பயமும் தவிப்புமாய் அவரை கடப்பதும் சுவாரஸ்யமானவை.
டியூசன் சென்டரில் நடக்கும் பார்வை பரிமாற்றங்கள் ஜீவன். இருவரும் காதல் உணர்வில் வாழ்கிறார்கள். திருமணத்துக்கு பின் கதை சஸ்பென்ஸ், திரில்லர் என வேறு களத்தில் தாவுகிறது. பைத்திய நிலையில் தனுஷ் நண்பனை கொடூரமாக தாக்குவதும், மனைவியிடம் தகராறு செய்தவர்களை கார் பார்க்கிங்கில் ரத்த களறி ஆக்குவதும் குலை நடுக்கம். தன்னை பிடித்துள்ள நோயின் குரூரம் அறிந்து உடைந்து காதல் மனைவிக்கு தெரிந்தால் தாங்கமாட்டேளே என தவித்து கலங்க வைக்கிறார்.
தனுசுக்கு மைல் கல் படம். ஸ்ருதியும் கேரக்டரில் பொருந்துகிறார். விழிகளில் உயிர்ப்பான காதலை வழிய விட்டு வியப்பூட்டுகிறார். தனுசை தாக்கிய நோய் தெரியாமலேயே சிறு சிறு பிரச்சினைகளுக்காக அவர் மேல் கோபித்து நிறைய அழுவது நெளிய வைக்கிறது. கதையில் முதல் பாதியில் இருந்த அழுத்தம் கடைசி வரை நீடித்து இருந்தால் இன்னும் பிரகாசித்து இருக்கும்.
கிளைமாக்ஸ் நிமிர வைக்கிறது. பள்ளி தோழனாக தனுசுடன் வரும் சிவ கார்த்திகேயனின் யதார்த்தமான காமெடி அமர்க்களம். சுந்தரும் நட்பில் வீரியம் காட்டுகிறார். பாசக்கார தந்தையாக மனதில் நிற்கிறார் பிரபு. அனிருத்தின் பின்னணி இசையும், வேல்ராஜ் ஒளிப்பதிவும் ஒன்ற வைக்கிறது. 'கொலை வெறி' பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் அம்சம்.