காதலைக் கூட பக்தியாக கடைப்பிடித்த மீரா மாதிரியான பெண்ணுக்கு எல்லாவற்றையும் சந்தேகப்படும் ஒருவன் கணவனாக அமைகிறான். மீராவுக்கு ஏற்ற கிருஷ்ணனனாக அவளது கணவன் மாறினானா இல்லையா என்பதுதான் இப்படத்தின் ஒருவரிக் கதை.
கிருஷ்ணா சிறு வயதிலே தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களால் கல்யாணமே வேண்டாம் என்று இருக்கிறார். அம்மாவின் கட்டாயத்தால் டாக்டராக இருக்கும் மீராவை கல்யாணம் செய்கிறார். முதலில் அமைதியாக போகும் வாழ்க்கையில், மீரா வேலைக்குப் போக ஆரம்பிக்கவும் கிருஷ்ணாவுக்கு சந்தேகம் எட்டிப் பார்க்கிறது.
அது பெரிதாக, தன்னால் உண்டான கருவை கலைக்க முயற்சிக்கிறார். கோபத்தில் நாயகி வீட்டை விட்டு வெளியேற, மீரா வேலை செய்யும் மருத்துவமனை முதலாளியின் ரூபத்தில் விதி விளையாடுகிறது. முடிவு என்ன ஆனது என்பதுதான் மீராவுடன் கிருஷ்ணா.
படத்தை எழுதி, இயக்கிய கிருஷ்ணாவே நாயகனாகவும் நடித்திருக்கிறார். கோபத்தில் படுத்திருக்கும் மனைவியிடம் ஆசையை அடக்க முடியாமல் தவிப்பதாகட்டும், தன்னிடம் குழைந்து கொண்டே இருக்கும் வேலைக்காரியிடம் எரிந்து விழும் நேரத்திலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
குடும்ப குத்துவிளக்காய் வரும் நாயகியாக ஸ்வேதா. குடும்பப் பெண் பாத்திரத்தில் பளிச்சென இருக்கிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். கோபம் தலைக்கேறியதும் கணவனை ''டேய் லூசு...'' என்று கேட்கும்போதும், மாமியாரிடம் சண்டையை மறைக்கும் போதும் வெளிப்படுத்தும் பக்குவப்பட்ட உணர்வுகளும் அசல் மனைவியை காட்டுகிறது.
ஹீரோ தன் பக்கமே நியாயம் இருக்குமென்பதை காட்ட பிளாஷ்பேக் வலிந்து திணிக்கப்பட்டது என்றாலும் அதில் வரும் தமிழ் அண்ணனின் பாத்திரம் மனதில் நிற்கவே செய்கிறது.
சிறு வயது நாயகனின் நண்பனாக வரும் பையன் செய்யும் இழிவான காரியம், நமது சமூக மதிப்பீட்டை 'பளார்' என்று அறைகிறது. முறை தவறிப் போன மனைவி வந்து மன்னிப்பு கேட்டதும், தனக்கிருக்கும் போதை பழக்கம்தான் மனைவியை மாற்றியிருக்கிறது என்று புரிந்து கொண்டு மனைவியை ஏற்றுக் கொள்ளும் நாயகனுடைய நண்பனின் கதாபாத்திரம் யதார்த்தம்.
பின்னணி இசையிலும், ஒளிப்பதிவிலும் புதிதாக ஒன்றும் இல்லை. ‘சந்தனம் இங்கே சேராச்சு’ பாடல் மட்டும் கேட்கும் ரகம். எடிட்டிங் குறிப்பிடும்படி இல்லை.
நாயகனுக்கு அவனுடைய குணாதிசயங்களே வில்லனாக இருக்கும்போது, தேவையில்லாமல் ஒரு வில்லன் தேவைதானா? நல்லவேளை வில்லனுக்கென்று சண்டைக் காட்சி வைக்காதது ஆறுதல்.
படத்தின் பெரிய மைனஸ் கிருஷ்ணாவின் ஓவர் ஆக்டிங். பாதி நேரம் கேமராவை பார்த்து பேசுகிறார். ஒப்பாரி வீட்டில் சிரிக்கக்கூடாது என்பது மரபு. இயக்குனர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. பாதி காட்சிகள் சீரியஸான காட்சியா? சிரிப்பான காட்சியா? என குழம்ப வைத்திருக்கிறார்.
மனைவியிடம் ''கருவைக் கலைத்துவிடு...'' என்று சண்டை போடும்போது அந்த உணர்வோடு ஒன்றாமல் எம்.ஆர்.ராதா ஸ்டைல், ஆளவந்தான் ஸ்டைல் என்று நடிப்புக் கலையை தாறுமாறாக கலக்கியிருக்கிறார்.
எல்லா பொறுப்பும் ஒழுக்கமும் பெண்களுக்கே ரொம்ப முக்கியம் என்பது போன்ற வசனங்கள் தேவையில்லாதது. ஹீரோ, ஹீரோயின், அவர்கள் வீடு என்று கதை அங்கேயே சுற்றுவது, நாடகத்தனமான காட்சியமைப்புகள் சலிப்பை தருகிறது.
நாயகன் கண்ணாடியைப் பார்த்து ஒவ்வொரு தடவையும் பேசும்போது, அவருக்குள் இருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் கருப்புச் சட்டையில் வருவதும், பின் நாயகன் திருந்தி நாயகியை பார்க்க வரும்போது அவர் அதே கருப்பு சட்டையில் வருவதும் இயக்குனர் டச்.
கவிதை போன்று நகர்த்த வேண்டிய காட்சிகள் படத்தில் இல்லாததால் ‘மீராவுடன் கிருஷ்ணா’ தலைப்பில் மட்டும் இருக்கிறது