மகாத்மா காந்தியின் பயணம் இறுதி முடிவை பெறும்போது காந்தியும் இப்படி நினைத்திருக்கக் கூடும். அவர் நினைத்த ராம ராஜ்ஜியத்தை (புனித இந்தியா) அவரே உருவாக்க வேண்டும் என்ற பேராசையும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். இயற்கை அவருக்கு அனுமதிக்காததை இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் அனுமதித்திருக்கிறார் முதல்வர் மகாத்மா-வில்.
சுடப்பட்டதும் இறந்துவிடும் காந்தி மேலோகம் செல்கிறார். அவர் நினைத்த இந்தியா உருவாகாததால் கடவுளிடம் போராடி, தன் ஆயுதமான அறப்போராட்டத்தை கடைபிடித்து மீண்டும் சராசரி மனிதனாக பூலோகம் வருகிறார். 1980-க்கு பிறகான இந்தியாவில் எத்தகைய மாற்றத்தை அவர் கொண்டு வருகிறார் என்பதும், அவரிடம் சீடராக இருந்து பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் அனுபம் கெர், காந்தியின் கனவை நிஜமாக்குவதுதான் இப்படத்தின் கதை.
இது எல்லோரையும் சென்றடையக்கூடிய சினிமாவாக எடுக்க இயக்குனர் தவறியிருந்தாலும், அதன் சமூக அக்கறைக்காக வரவேற்க வேண்டிய சினிமா.
காந்தியாக கனகராஜ். காந்தியைப் போலவே இருந்தாலும் வயதான காந்தியின் முகத்தில் இருக்கும் வசீகரம் இவரிடம் காணவில்லை. இருந்தாலும் தனது பிடிவாதத்தில் காரியம் சாதித்து சிரிக்கும் போது ரசிக்கவே வைக்கிறார்.
காந்தியின் சீடராக இளம்வயது அனுபம் கெர்-ஆக வருபவர் சுந்தர். இவருக்கு படத்தில் பெரிய வேலை எதுவும் இல்லை. பகவத்கீதை வாசிப்பது, கடிதம் எழுதுவது என அவ்வளவே.
படத்தில் தெரிந்த முகம் அனுபம் கெர். காந்தியின் வழியை பின்பற்றும் அமைதியான முகத்திற்கு பொருத்தமான தேர்வுதான் என்றாலும் அவருக்கு நேர்மையான முதல்வர் என்ற பெயரை தவிர, வேறு எதுவும் இல்லை. காந்தியைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனாக மகாலிங்கம். அவர் வருவது படத்தில் தேவையில்லாமல் திணிக்கப்பட்டது என்றாலும் அந்த ஒரு காட்சியில் அழகு தமிழை கேட்க முடிகிறது.
இளையராஜா இசையில் முத்துலிங்கம் வரிகளில் ‘காந்தி இன்று இருந்தால்’ என்ற பாடல் மட்டும் கேட்க முடிகிறது. ராஜாவின் பலமே பின்னணி இசைதான். ஆனால் இப்படத்தில் பின்னணி இசை குறிப்பிடும்படியாக இல்லை என்பது வேதனையே.
தன் கவிதைகளில் சமகாலத்தை தைரியமாக கேலி செய்யும் விக்கிரமாதித்யனை ஒரு காட்சியோடு வீணடித்து விட்டார்கள்.
வீடு அழுக்கா இருக்குறதுக்காக வீடே வேணாம்ணு போகலாமா? பணத்தை வாங்கிட்டா ஓட்டு போட்டீர்கள்? என்று காந்தி கேட்கும் கேள்விகள் நம்மை யோசிக்க வைக்கின்றன.
காந்தி மேலோகத்தில் தவமிருக்க, இடையிடையே இந்தியாவில் நடக்கும் போபால் விஷவாயு, விவசாயிகள் தற்கொலை என்று காட்டுவதில் மட்டும் திரைக்கதை இருக்கிறது.
காந்தியை சூப்பர் மேனாக ஆக்கியதே அவருடைய நடைப் பயணமும், ஓயாத உழைப்பும்தான். இதில் காந்தி படம் முழுக்க ஒரு கிராமத்துக்குள்ளேயே சின்ன பிள்ளைகளோடு சுற்றிக் கொண்டு ஒரு குடிசையில் சதா உபதேசம் சொல்லிக் கொண்டே இருப்பதால் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறார்.
கதை எந்த காலத்தில் நடைபெறுகிறது என்ற குழப்பம் நம் மத்தியில் எழுகிறது. காந்தி கதாபாத்திரம் கிட்டப்பா காலத்து வசன நடையில் பேசுவதை வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக சின்ன குழந்தைகள் முதற்கொண்டு அப்படியா பேசவேண்டும்.
மாணவர்கள் ஒன்று கூடி எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நாட்டில் மறுமலர்ச்சி வந்துவிடுமா? என்னதான் போராடினாலும் படத்தில் காட்டியதுபோல் மக்கள் ஓட்டுக்கு வாங்கிய பணத்தை திருப்பி எம்.எல்.ஏ., வீட்டில் கொண்டு வந்து போடுவதுபோல் காட்சிப்படுத்தியது நிஜத்தில் நடந்தால்தான் உண்டு மறுமலர்ச்சி.
சினிமா என்று வரும்போது சினிமாவுக்கான அழகியல் முதல்வர் மகாத்மாவில் இல்லாவிட்டாலும் அதன் நல்ல கொள்கைக்காக எல்லோரும் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது.