1981-ஆம் வருடம் எஸ்.பி.முத்துராமன் டைரகஷன்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்சு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கழுகு.
ஆனா இப்ப நாம பார்க்கப்போற கழுகு திரைப்படத்துல பழைய படத்தோட டைட்டிலை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பட்டியல் கே.கே.சேகர் மற்றும் கே.எஸ்.மதுபாலா இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சத்யசிவா.
நாயகனாக கிருஷ்ணா, நாயகியாக பிந்துமாதவி. இவர்களோடு கருணாஸ், தம்பிராமையா, ஜெயபிரகாஷ், சுஜிபாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கொடைக்கானலில் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் வேலையை கருணாஸ், தம்பி ராமையா ஆகியோருடன் சேர்ந்து செய்து வருகிறார் கிருஷ்ணா.
தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகளின் பிணங்களை அடிக்கடி பார்த்து பழக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணாக்கு காதல் என்றாலே வெறுப்பு, அலட்சியம்.
ஆனால் அப்படிப்பட்டவரையும் ஒரு கட்டத்தில் காதல் நெருப்பு பற்றிக் கொள்கிறது. சின்னச்சின்ன தடங்கல்கள் ஏற்பட்டாலும் அவரது காதல் திருமணத்தில் முடிகிறது.
சந்தோஷமாக வாழ்க்கையைத் துவங்கும் நேரத்தில் எதிர்பாராத ஒரு நிகழ்வு அவரது வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. அதை கிருஷ்ணா எந்தவிதமாக எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மையக்கரு.
அலிபாபா, கற்றது களவு படங்களைத் தொடர்ந்து கிருஷ்ணாவிற்கு இது மூன்றாவது படம்.
மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களைத் தூக்கிவந்து அதற்கு கூலியாக கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும் இளைஞன் சேராவாக நடித்திருக்கும் கிருஷ்ணா. தனது முந்தைய படங்களைவிட இதில் மிகவும் கடுமையான உழைப்பைக் காட்டியிருக்கிறார்.
இன்றைக்கு யாராவது மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளமாட்டார்களா என்று எதிர்பார்ப்பது, அப்படிக் கிடைக்கும் உடல்களிலிருந்து நகை, பணம் என கிடைத்தவரை சுருட்டி நண்பர்களுடன் பங்கிட்டுக் கொள்வது, தழைகீழாக கயிற்றைக் கட்டிக்கொண்டு பள்ளத்தாக்கில் இறங்குவது என பிணம் தூக்குபவர்களின் அவல வாழ்க்கையைக் தத்ரூபமாக பிரதிபலித்திருக்கிறார் கிருஷ்ணா.
பிந்துமாதவியின் காதலை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்துவது, பின்னர் அவரது உண்மையான அன்பைப் புரிந்துகொண்டு அவரைத் திருமணம் செய்து கொள்வது, கடைசியில் பிந்துமாதவியின் மரணத்தைக் கண்டு அவர் எடுக்கும் முடிவு என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்துள்ளார் கிருஷ்ணா.
கவிதாவாக வரும் பிந்துமாதவி தனது அழுத்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தான் நல்லதொரு புதியவரவு என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
கிருஷ்ணாவை விரட்டி விரட்டி அதேசமயம் மிகவும் நாகரிகமாக காதலிக்கும் காட்சிகளில் சபாஷ் வாங்குகிறார்.
கிருஷ்ணாவுக்கு விபத்து என்றதும் பதறிப்போகும் காட்சியில் தனது காதலின் ஆழத்தை அருமையாக வெளிப்படுத்தியிருக்கும் பிந்துமாதவி. இறுதிக்காட்சியில் நம்மை உறையவைத்து விடுகிறார்.
கிருஷ்ணாவின் நண்பனாக நண்டு என்கிற கதாபாத்திரத்தில் கருணாஸும் சித்தப்பாவாக வரும் தம்பி ராமையாவும் சீரியசான திரைக்கதையில் தேவையான இடங்களில் நகைச்சுவைப் பூக்களைத் தூவியிருக்கிறார்கள்.
இறந்த உடலில் இருந்து திருடிய நகையை தனது மனைவியிடம் பரம்பரை நகை என்று அடித்துவிடும் கருணாஸின் காமெடிக்கு சவால் விடுகிறது.
கிருஷ்ணாவின் திருமணத்திற்காக ஸ்டூடியோவிலிருந்து கோட் ஒன்றை சுட்டுக்கொண்டு வரும் தம்பி ராமையாவின் காமெடி. லாரிகளில் அனுப்பப்படும் டீத்தூளை வழிமறித்துக் கொள்ளையடித்து அதனைத் தனது கம்பெனி தயாரிப்பாக விற்பனை செய்யும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ஜெயபிரகாஷ். கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்.
தெளிவான திரைக்கதைக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது. நா.முத்துக்குமார் எழுதியுள்ள 'ஆத்தாடி மனசுதான்’ பாடல் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் வகையில் அருமையான மெலடியாக அமைந்துள்ளது.
அதேபோல சினேகன் எழுதிய ‘பாதகத்தி கண்ணுபட்டு’ பாடலும் படம் முடிந்து வெளிவந்த பின்னரும் முணுமுணுக்க வைக்கிறது.
க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி அமைப்புக்காக ஸ்டண்ட் இயக்குனர் ரமேஷை பாராட்டியே ஆக வேண்டும் கொடைக்கானலின் குளுமையை அப்படியே தன் கேமராமூலம் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சத்யா.
மலையும் மலைசார்ந்த பகுதிகளும்தான் கதைக்களம் என்றாலும் அவற்றைப் படமாக்கிய விதத்தில் தனது கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார் சத்யா.
குறிப்பாக இறந்து போனவர்களின் உடல்களை மீட்கும் காட்சிகளும் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிகளும் ஒளிப்பதிவிற்கு கட்டியம் கூறுகின்றன. தனது முதல் படத்திலேயே பிணம் தூக்கிகளின் வாழ்க்கை என்ற வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் சத்யசிவா.
கதைக்குத் தேவையான நடிகர்களையும் கதைக்களத்தையும் தேர்வுசெய்ததிலேயே இயக்குனர் பாதி வெற்றிபெற்றுவிட்டார். க்ளைமாக்ஸிற்கு முந்திய காட்சிகள் ஏற்கனவே வந்த ஒரு படத்தின் சாயலில் இருந்தாலும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் நம்மை அதிர வைக்கிறது.
ஒன்றிரண்டு இடங்களில் லாஜிக் குறைபாடுகள் சிறிய அளவில் இருந்தாலும் போரடிக்காத திரைக்கதை அதை சரிசெய்துவிடுகிறது. எதிர்பார்த்து படம் பார்க்கவரும் ரசிகர்களுக்கு எமாற்றம் தராத வகையில் வெளி வந்திருக்கும் இந்தக் கழுகு உயரே பறப்பதற்கான பல தகுதிகளை பெற்றிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.