திருசெந்தூர் கடற்கரையோரமுள்ள கிராமங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் சேவற்கொடி. தனது தங்கை அவள் காதலனோடு ஓடிப்போனதற்கு கதாநாயகன்தான் காரணம் என வில்லன் தவறாக நினைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளே இப்படத்தின் கதைக்களம். வில்லன் பவனுக்கு தான் டிரைவராக ஓடும் சரக்கு ஆட்டோவிற்கு உரிமையாளராக வேண்டுமென்று ஆசை.
அதற்கேற்றார் போல் அவளது தங்கையை தனக்கு இரண்டாம்தாரமாக மணமுடித்து தந்தால், நீ ஓட்டும் வண்டிக்கு நீதான் ஓனர் என்கிறார் பவனின் 45 வயதுள்ள முதலாளி. பவன் அதற்கு இசைய, ஆட்டோ அவருக்கு சொந்தமாகிறது. ஆனால் பவனின் தங்கையோ தனது காதலனுடன் ஊரை விட்டே ஓடிப்போய் விடுகிறார். அதுவரை ஆட்டோவின் ஓனராக வலம் வரும் பவன் மீண்டும் டிரைவராகிறார். தனது தங்கை ஓடிப்போனதற்கு அருண் பாலாஜிதான் காரணம் என தவறாக புரிந்து கொள்ளும் பவன், அருண் பாலாஜியை அழிக்க நினைக்கிறார்.
இடையே அருண்பாலாஜிக்கும் கதாநாயகி பாமாவிற்கும் காதல் முளைக்க, இருவீட்டாரும் சம்மதிக்கிறார்கள். காதல் ஜோடி மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். தன் வாழ்க்கை நாசமாக காரணமாக இருந்த அருண்பாலாஜியை பவன் அழிக்க முயல, அதில் சில உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதை சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் சுப்பிரமணியன். கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள அருண்பாலாஜி இன்னும் நடித்திருக்கலாம். மலையாளத்து வரவான பாமா அழகாய்த் தெரிகிறார்.
அளவாய் நடித்திருக்கிறார் அவ்வளவே. வில்லனாக வரும் பவன் நன்கு நடித்திருக்கிறார். கதாநாயகனின் அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி பாந்தமாய் வந்து பரிதாபமாய் உயிரிழக்கிறார். பிற கேரக்டர்கள் வந்து போகின்றன. 'எங்கேயும் எப்போதும்' பட இசையமைப்பாளர் சத்யா இசையமைப்பில் பாடல்கள் சுமார் ரகம். 'கம்பி மத்தாப்பு..' பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தும் பயனில்லாமல் இருக்கிறது. படத்தில் திடீரென்று முளைக்கும் பாடல்கள் சலிப்பை தருகின்றன. திரைக்கதை வலுவாக இல்லாததால் காட்சிகள் வந்து வந்து போகின்றன.
அதை போல நடிகர்களும் வந்து போகிறார்கள். செல்லதுரையின் ஒளிப்பதிவு கண்ணிற்கு நிறைவைத் தருகிறது. கிரி படத்தில் வடிவேலு செய்யும் பேக்கரி காமெடி லைனை உல்டா செய்து அதை கதையாக்கியது போல் தோன்றுகிறது. கதையில் உயிர்ப்பு இல்லாதது பெரும் குறை. அதற்கேற்ப நடிகர்களும் வந்து போவது குறையோ குறை. குறைகளை நிவர்த்தி செய்திருந்தால் சேவற்கொடி பறந்திருக்கும்.