கிராமத்தில் வசிக்கும் உமாரியாசுக்கு ஒரு பவுர்ணமி தினத்தில் குழந்தை பிறக்கிறது. அது மிருகமும் மனிதனும் இணைந்த கொடூர தோற்றத்தில் இருப்பது கண்டு அதிர்கின்றனர்.
பிரசவம் பார்த்த பெண்ணை கொல்கிறது. கிராமமக்கள் அதை சாகடிக்க எத்தனிக்கின்றனர். அப்போது தப்பியோடி கிராமத்தை ஒட்டி உள்ள சோளக்கொல்லையில் ஒளிகிறது.
150 ஆண்டுகள் வாழும் அந்த மிருகம் சோளக்கொல்லை பக்கம் வரும் மனிதர்களை கொல்கிறது. இதனால் ஊருக்கும் கொல்லைக்கும் நடுவில் சுவர் எழுப்புகின்றனர். கல்லூரி மாணவன் அஜய்யின் காதலி சனம் அக்கிராமத்தில் வசிக்கிறார். அவளை சந்திக்க சோளக்கொல்லை வழியாக நண்பன் ஸ்ரீஜித்துடன் செல்லும் அஜய்யை மிருகம் துரத்துகிறது. அவர்கள் மிருகத்துடன் மோதி அழிக்க முயற்சிக்கின்றனர். வென்றார்களா? என்பது கிளைமாக்ஸ்...
திரில்லர் கதையை சீட் நுனிக்கு இழுக்கும்படியாக பயங்கரம், விறுவிறுப்புடன் படமாக்கியுள்ளனர் இயக்குனர்கள் ஹரிசங்கர், ஹரீஷ்நாராயண். காட்சி அமைப்பின் பிரமாண்டமும் விழிகளை விரிய வைக்கிறது.
ராஜேந்திரனுடன் கொல்லை வழியாக செல்லும் சிறுமி பயந்து வேண்டாம்பா என்று அழுவதும் அவளை மிருகம் கொல்வதும் உதறல்... அஜய்யும் ஸ்ரீஜித்தும் மிருகத்தை வேட்டையாட புறப்பட்டதும் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
மிருகத்தின் அண்ணன் செங்கோடன் கேரக்டரில் அதே கொல்லையில் வசிக்கும் பார்த்திபன் வித்தியாசமான கெட்டப்பில் ஈர்க்கிறார். கிளைமாக்சில் மிருகத்துடன் சண்டையிடுவதில் ஆக்ரோஷம்.
காடு, சோளக்கொல்லை, காட்டு பங்களா, பாழடைந்த கோவில் என கதை களம் மிரட்டுகிறது. 3டி எபெக்ட்ஸ் காட்சிகளில் இன்னும் அழுத்தம். சதீஷ்.ஜி.யின் ஒளிப்பதிவும், இசையும் கதையோடு ஒன்ற வைக்கின்றன. தம்பி ராமையா சிரிக்க வைக்கிறார்.
கதை சோளக்கொல்லைக்குள்ளேயே முடங்குவதில் சலிப்பு தட்டினாலும் அதையும் மீறி ஹாலிவுட் தரத்துக்கு இணையான திகிலுடன் மிரள வைக்கிறது.