பள்ளி ஆசிரியர் ராமராஜன். ஏழை மாணவர்கள் வறுமையால் படிப்பை பாதியில் நிறுத்துவது கண்டு துடிக்கிறார். அவர்கள் கஷ்டம் போக்கவும் கல்வி கட்டணங்களை ஏற்கவும் அறக்கட்டளை துவங்குகிறார். இதனால் பள்ளிக்கு மாணவர் வருகை பெருகுகிறது.
படிப்பை நிறுத்திய மாணவர்களை வைத்து தொழிற்சாலை நடத்தும் கோட்டை குமாருக்கு இதனால் பாதிப்பு வருகிறது. ராமராஜன் தொடங்கிய அறக்கட்டளையில் அவர் பணம் கையாடல் செய்ததாக பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்புகிறார்.
ராமராஜனின் மனைவியையும் தாயையும் ஆள் வைத்து சாகடிக்கிறார். ஜெயிலில் இருந்து விடுதலையாகும் ராமராஜன் கோட்டை குமாரை பழி வாங்கினாரா என்பது மீதி கதை...
ராமராஜன் ரொம்ப காலத்துக்கு பின் மீண்டும் பழமை மாறாமல் களம் இறங்கியுள்ளார். அதே வேட்டி சட்டை ஏழைகளுக்கு பரிந்து பேசும் ஆவேச வசனம். அடிதடி என அனல் கிளப்புகிறார். பெற்றோர் எதிர்க்கும் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்துவது. மனைவி தாயை கொன்றவர்களை பழி வாங்க அரிவாள் தூக்குவது.. வில்லன்களுக்கு நன்மை செய்து திருத்துவது என அழுத்தம் பதிக்கிறார்.
நாயகி கவுசிகா கலகலப்பாக வந்து பரிதாபமாக இறந்து போகிறார். இளம் ஜோடி அஜய்-ஹாசினி காதல் இதம். திருடனாக வரும் கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கிறார்.
கோட்டை குமார் மிரட்டல் வில்லன். போலீஸ் அதிகாரியாக ராஜ்கபூர். ஆசிரியராக கே.நட்ராஜ் வருகின்றனர். ஏழை மாணவர்கள் கல்வி பிரச்சினையை கருவாக வைத்து கதையை கோர்த்துள்ளார் இயக்குனர் என்.டி.ஜி. சரவணன். காட்சிகளில் பழைய வாசனையை தவிர்த்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும். இரு கொலை செய்தவனுக்கு விதிக்கும் தண்டனை சாதாரணம். தினா இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன.