அதிகம் பேசாத வெள்ளந்தி இளைஞன் அருள்நிதி. அவரை பிரச்சினைகள் துரத்துகின்றன. அண்ணன் தன்னோடு அழைத்து போய் பட்டிணத்தில் படிக்க வைக்கிறான். அங்கும் பெரிய சிக்கலில் மாட்டுகிறார். இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் தனது போலீஸ் கூட்டாளிகள் மூவருடன் சேர்ந்து விபத்தில் அடிபட்டு கிடக்கும் தொழில் அதிபர் மகனை கொன்று காரில் இருக்கும் பல கோடி பணத்தை கொள்ளையடிக்கிறார்.
அவர்கள் சதியை ஜான் விஜய்யின் கள்ளக் காதலி வீடியோவில் பதிவு செய்கிறாள். இதனால் அவளையும் கொல்கின்றனர். வீடியோ காணாமல் போகிறது. அதை தேடி அலைகின்றனர். எப்படியோ அருள்நிதி வசம் அந்த கேமரா வந்து சேர்கிறது.
அதை கைப்பற்றும் ஜான்விஜய் கோஷ்டி அருள்நிதிக்கு கொலைச் சதி தெரிந்து விட்டதாக தப்பாக நினைத்து அவரை கடத்திப் போய் என் கவுண்டரில் சாகடிக்க முயல்கின்றனர். அது முடியாமல் போக பைத்தியம் என முத்திரை குத்தி மன நல காப்பகத்தில் சேர்க்கின்றனர்.
அவர்களிடம் இருந்து எப்படி தப்புகிறார் என்பது கிளைமாக்ஸ்...
அழுத்தமான கதையுடன் வந்துள்ள படம். கேரக்டர்களும் காட்சியமைப்பும் விழிகளை கட்டி போடுகின்றன. மூன்று பேரை போலீஸ் ஜீப்பில் அடைத்து என் கவுண்டருக்கு கொண்டு செல்வது போல் கதை ஆரம்பித்து பிளாஸ்பேக்கில் செல்கிறது.
அருள்நிதி பாத்திரத்தோடு ஒன்றுகிறார். பழுதான டெலிபோன் பூத்தை உடைத்து தனது இரண்டு ரூபாயை பொறுக்கி எடுப்பது, இருவரின் சண்டையை பார்த்து அப்பாவித் தனமாக ஒதுங்கி போவது, அண்ணியின் தங்கை மீதான யதார்த்தமான காதல், சகமாணவர்கள் இம்சைகளை தாங்கும் பொறுமை என கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறார்.
பைத்தியமாக்கப்பட்டு ஊசி மூலம் நாடி நரம்பு செயல் இழந்து கிடக்கையில் தன்நிலை பற்றி அண்ணன், காதலி போன்ற உறவுகளிடம் சொல்ல திராணியற்று தவிக்கையில் நடிப்பின் உச்சம் தொடுகிறார். கிளைமாக்சில் எதிரிகளை தாக்கி ஆவேசம் காட்டுகிறார்.
இனியா காதலுக்கு பயன்டுகிறார். கர்ப்பிணி போலீசாக வரும் உமா ரியாஸ்கான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பெரிய வயிற்றுடன் கஷ்டப்பட்டு நடந்தும் கொலையை துப்பு துலக்கும் காட்சிகள் முத்திரை. கோடிக் கணக்கான பணத்தை கொள்ளையடித்து அதில் இருந்து தப்ப சங்கிலி தொடர் கொலைகள் செய்யும் ஜான் விஜய், அவரது கூட்டாளியான பாலகிருஷ்ணன் வில்லத்தனங்கள் இதுவரை பார்க்காத மிரட்சிகள்.
கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா, மது, முருகதாஸ் கேரக்டர்களும் கச்சிதம். இரு மாநில பிரச்சினை என்று அப்பாவி இளைஞனை பலிகடா ஆக்க முயற்சிப்பதில் லாஜிக் இல்லை. திகிலான கதையை விறுவிறுப்பாக நகர்த்தி தரமான படத்துக்கான அந்தஸ்தை பெற்றுள்ளார் இயக்குனர் சாந்தகுமார். தமனின் இசை, மகேஷ்முத்துசாமி ஒளிப்பதிவு வலு சேர்க்கின்றன.