ஜெயிக்க போராடும் இளம் போட்டோ கிராபர் கதை...
திருமணம், சடங்குகளை படம் எடுக்கும் போட்டோ கிராபர் தனுஷ். புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் ரவி பிரகாஷிடம் உதவியாயராக சேர முயற்சிக்கிறார். தனுஷ் நண்பன் சுந்தருக்கு ரிச்சாமேல் காதல். ஆனால் தனுஷ்க்கும் ரிச்சாவுக்கும் ஒத்துப்போகாமல் மோதிக் கொள்கின்றனர்.
அதே வேளை தனுசின் தொழில் பக்தி ரிச்சாவுக்கு பிடிக்கிறது. அதுவே அவர் மேல் காதல் கொள்ளவும் வைக்கிறது. லட்சியத்தில் உயர முடியாமலும் காதலை ஏற்க முடியாமலும் தனுஷ் தவிக்கிறார். காட்டில் தனுஷ் எடுத்த பறவைகள் படங்களை ரவி பிரகாஷ் மோசடியாக அபகரித்து பத்திரிகையில் தன் பெயரில் வரவைக்கிறார்.
இதனால் இடிந்து போகும் தனுசுக்கு ரிச்சா ஆறுதலாக இருக்கிறார். அது தனுசுக்கு பிடிக்க மனதை பறி கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் சுந்தருக்கு தெரிய வெடிக்கிறான். பிறகு மனம்மாறி திருமணம் செய்து வைக்கிறான். அதன் பிறகு தனுஷ் நடத்தைகளில் மாற்றம். புகைப்பட தொழிலில் முன்னேற முடியாத விரக்தியில் போதைக்கு அடிமையாகிறார். மனைவி, நண்பர்களை வெறுக்கிறார்.
அதிலிருந்து மீட்டு கொண்டு வர ரிச்சா போராடுகிறார். தனுஷ் படங்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கிறார். முயற்சி பலித்ததா என்பது மீதிக்கதை. தனுசிடம் ஏக முதிர்ச்சி. சந்தோஷத்துக்கு எதிர்முறையான ஏமாற்றம், தூக்கம், வலிகளை அநாவசியமாக கொட்டி நடிப்பில் சிகரம் தொடுக்கிறார்.
புகைப்பட நிபுணரிடம் உதவியாளர் வாய்ப்பு கேட்டு கெஞ்சுவது... அவர் தனது படங்களை மோசடியாக அபகரித்ததும் என் லைப் சார், அது என் படங்கள்னு சொல்லுங்க சார் என கண்ணீர் பொங்க உருகுவதும்... அங்கிருந்து விரட்டப்பட்டு திரும்பி திரும்பி பார்த்து துக்கத்தோடு வெளியேறுவதும் நெஞ்சை பிழிபவை.
துயரத்தில் பங்கெடுத்து காதலை தர தயாராகும் நண்பனின் தோழியை நெருங்க முடியாமலும் உதற முடியாமலும் தவிப்பது தத்ரூபம். மனைவியின் கர்ப்பம் கலைய காரணமாகி தலையில் அடித்து அழுவது ரணம். கிளைமாக்சில் மனைவியின் பெருமை பேசும் போது சினிமாத்தனம் எட்டி பார்த்தாலும் விழிகள் பூரா நீர்.
துரோகம் செய்த வரை நெருங்கி பழி தீர்ப்பார் என பார்த்தால் தேங்க்ஸ் சொல்லி இன்னும் உயரம் போகிறார். காதலன் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவன் நண்பனை விரும்பும் ஹைடெக் பெண்ணாய் ரிச்சா. சண்டை கோழிகளாய் ரிச்சாவும் தனுசும் மோதுவதும் பிறகு காதல் வயப்படுவதும் கவித்துவ பதிவுகள்.
தன்னிடம் தப்பாக நெருங்கும் தனுஷ் நண்பனை எச்சரிப்பதில் கலாசார ஜொலிப்பு. ககலகலப்பான நண்பர்கள்... மது உற்றி கொடுக்கும் தந்தை கேரக்டர் போன்றவையும் நேர்த்தி. காதல், ஏக்க உணர்வுகளில் ஜீவனை வழிந்தோட விட்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
புது யுக்தியோடு காதலை பதிவு செய்தமைக்கு கை குலுக்கலாம். காதல் துரோகத்தை போதையானதும் நண்பன் மன்னிப்பது யதார்த்தமில்லாதது. ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவசம். பின்னணி இசை வருடுகிறது. ராம்ஜி ஒளிப்பதிவில் ரம்மியம்.