
பட்டிமன்ற நடுவரும், மக்கள் நீதி மய்யத்தின் முதன்மை நிர்வாகியுமான ஞானசம்பந்தனின் மகன் ஞானகுரு-மீனாட்சி திருமணம் இன்று மதுரையில் நடந்தது.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் கவிஞர் வைரமுத்து, மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், நடிகர் பாண்டியராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-
பெருமிதம் பொங்கும் தகப்பனாராக ஞானசம்பந்தனை இங்கே பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நட்பை உறவாக மாற்றும் வித்தை தெரிந்தவர் அவர். வேடிக்கை பார்க்க வந்த என்னை நண்பராக மாற்றியவர். நட்புபாராட்ட வந்த என்னை உறவினராக மாற்றி பெருமை சேர்த்தவர். அவரிடம் நட்பு பாராட்டுவதில் என்னைபோல் பலருக்கும் போட்டி உண்டு.
இந்த திருமணத்தில் நான் ஒரு கருவி அல்ல. ஒரு உறவாக வந்து மணமக்களை வாழ்த்தி உள்ளேன். வாழ்க்கை நீளமாக இருக்க வேண்டும். வாழ்த்து சுருக்கமாக இருக்க வேண்டும். அதுபோல் மணமக்கள் வாழ்க்கை நீண்டிருக்க வேண்டும். அவர்கள் பிள்ளைகளை பெற்று தமிழ் பிள்ளைகளாக வளர்த்தெடுக்க வேண்டும். அது பெற்றோரின் கைகளில் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasan