சூழ்ச்சி புரியாத மருமகன், முத்துப்பாண்டி நிலத்தில் சாராயம் காய்ச்சுகிறார். இதனை தட்டிக் கேட்டும் முத்துப்பாண்டிக்கு அடி, உதை விழுகிறது. வேறு வழியில்லாமல் முத்துப்பாண்டி போலீசாரிடம் முறையிடுகிறான். போலீஸ் பண்ணையாரின் மருமகனை கைது செய்கிறது. அவமானம் தாங்க முடியாத மருமகன் முத்துப்பாண்டியை பழிவாங்க நினைத்து அவரிடம் சண்டைபோடுகிறார். சண்டையில் முத்துப்பாண்டியின் கையை வெட்டி விடுகிறார்கள்.
அடிப்பட்டு நடுரோட்டில் கிடக்கும் முத்துப்பாண்டியை அன்னம் என்கிற ஆடு மேய்க்கும் பெண் தூக்கி சென்று காட்டுக்குள் ரகசியமாக வைத்தியம் பார்க்கிறாள். அதில் குணமாகும் முத்துப்பாண்டி தன் கையை வெட்டிய பண்ணையாரின் மருமகனை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். இதற்கு அவ்வூரில் உள்ளோர்கள் கூட்டாளியாக சேருகிறார்கள்.
இதன்பிறகு ஊரில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்டும் மனிதனாக மாறும் முத்துப்பாண்டி தன் கையை வெட்டிய பண்ணையாரின் மருமகனை ஒருகட்டத்தில் சுட்டுக் கொலை செய்துவிடுகிறார். இதற்கிடையில் ஊரில் பண்ணையாரின் அக்கிரமம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒரு நாள் இவருடைய அக்கிரமத்திற்கு ஒரு பெண் பலியாகிறாள். இதற்கு காரணம் பண்ணையார்தான் என்று தெரிந்ததும் முத்துப்பாண்டி பொங்கி எழுகிறார். பண்ணையாரை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். மறுமுனையில் முத்துப்பாண்டியை பிடிக்க போலீஸ் வலை விரித்து தேடி வருகிறது.
இறுதியில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி பண்ணையாரை முத்துப்பாண்டி பழிவாங்கினாரா? இல்லை போலீஸ் பிடியில் சிக்கினாரா? என்பதே மீதிக்கதை.
முத்துப்பாண்டியாக நடித்திருக்கும் ரகுபதி மிடுக்கான தோற்றம், முறுக்கு மீசை என வீரத்தமிழனாக நம் கண்முன்னே நிற்கிறார். இவருடைய நடிப்புதான் படத்தில் பேசும்படியாக இருக்கிறது. ஒரு கையுடன் மிகச்சிறந்த நடிப்பை காட்டியிருக்கிறார். பாசம் காட்டுவதாகட்டும், கோபத்தில் கொந்தளிப்பதாகட்டும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றபடி வேறு எந்த கதாபாத்திரமும் பேசும்படியாக இல்லை.
போலீஸ் அதிகாரியாக வருபவர்கள் வாகனத்தில் வலம் வந்து இரண்டு டயலாக் பேசிவிட்டு மறுபடியும் வாகனத்தில் ஏறி செல்வதுமாக இருக்கிறார்கள்.
மலையூர் மம்பட்டியான், வாட்டாக்குடி இரணியன், கும்பக்கரை தங்கையா ஆகிய கிராமத்து வாழ்க்கையை படமாக எடுத்து நிலைநாட்டிய தமிழனின் பெருமையை இதுபோன்ற படங்கள் சீர்குலைத்து விடுமோ? என்ற அச்சம் தோன்றுகிறது.
நல்ல கதையை எடுத்துக்கொண்டு திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர் ரகுபதி. ஆர்லின் இசையில் அத்திப்பூவே.. அத்திப்பூவே..., கதிர் அருவா மீசைக்காரா.. ஆகிய இரண்டு பாடலும் கேட்கும் ரகம். பின்னணி இசை மகா சொதப்பல்.
மொத்தத்தில் ‘அத்திமலை முத்துப்பாண்டி’ வெத்துபாண்டி.