என் மலர்

    செய்திகள்

    வருமானவரி சோதனை: ஜெயிலில் சசிகலாவுடன் வக்கீல்கள் ஆலோசனை
    X

    வருமானவரி சோதனை: ஜெயிலில் சசிகலாவுடன் வக்கீல்கள் ஆலோசனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வருமானவரி சோதனை குறித்து வக்கீல்களுடன் சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
    பெங்களூரு:

    சசிகலா குடும்பத்தினர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் 5 நாட்களாக வருமானவரி சோதனை நடந்தது.

    சசிகலாவின் தம்பி திவாகரன், உறவினர்கள் டி.டி.வி. தினகரன், இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக், கிருஷ்ணபிரியா மற்றும் உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் உள்பட மொத்தம் 187 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.

    பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இந்த சோதனை குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்தார். நாளிதழில் வந்த சோதனை குறித்த செய்திகளை அவர் பார்த்தார்.

    நேற்று முன்தினம் அவர் வக்கீல் அசோகனை வரவழைத்து பேசினார். அவருடன் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு சசிகலா 2 கடிதங்களை வக்கீல் அசோகனிடம் கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.

    அந்த கடிதங்கள் டி.டி.வி. தினகரன் மற்றும் விவேக் ஆகியோருக்கு எழுதப்பட்ட கடிதங்களாகும். இந்த கடிதங்களை நேற்று அசோகன் சென்னையில் தினகரன் மற்றும் விவேக்கை சந்தித்து நேரில் வழங்கினார்.

    அந்த கடிதத்தில் வருமானவரி அதிகாரிகள் விசாரணையின் போது அளிக்க வேண்டிய பதில்கள், தாக்கல் செய்யவேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை சசிகலா கோடிட்டு காட்டி உள்ளார். இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவுக்கு சில தகவல்களை சசிகலா சொல்லி அனுப்பியதாக தெரியவந்தது. இந்த தகவலையும் அசோகன், கிருஷ்ணபிரியாவை சந்தித்து கூறியுள்ளார்.

    நேற்று சசிகலாவை வக்கீல்கள் மூர்த்தி ராவ், கிருஷ்ணப்பா ஒன்றரை மணிநேரம் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மூர்த்தி ராவ் மற்றும் கிருஷ்ணப்பாவிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:


    இன்னும் 2 நாட்களில் விவேக் பெங்களூரு வந்து அவரது தாயார் இளவரசியை சந்திக்க உள்ளார். அதற்கு அனுமதி கடிதம் கொடுக்கவே சிறை அதிகாரிகளை சந்திக்க வந்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதன்பிறகு வக்கீல் மூர்த்தி ராவ் செல்போன் மூலம் விவேக்கை தொடர்பு கொண்டு சிறையில் அதிகாரிகளை சந்தித்து கொடுத்த கடிதம் குறித்து விளக்கி கூறினார்.

    சசிகலாவுக்கு தொடர்ச்சியாக சோதனைகள் வந்த வண்ணம் உள்ளது. அவரது கணவர் நடராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

    நடராஜனை பார்க்க சசிகலா 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து விட்டு சென்றார். கணவரின் உடல் நிலையை பார்த்து கலங்கிய அவருக்கு தற்போது உறவினர்கள் வீடுகளில் நடந்த சோதனை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சோதனைகள் பற்றிய செய்திகளை பத்திரிகையில் படித்தும், டி.வி.களை பார்த்தும் தெரிந்து கொண்ட சசிகலா அதிர்ச்சியடைந்தார்.

    இதனால் அவர் மன வேதனையில் உள்ளார். தூக்கமில்லாமல் தவிக்கிறார். சசிகலாவுக்கு அதிர்ச்சியாக கர்நாடக சிறையில் அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை என்று வினய்குமார் தலைமையிலான உயர்மட்டகுழு விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறை விதிகளை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை தான் என்றும், அவர்களுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. சமையல் செய்ய சமையல் எரிவாயு, குக்கர் போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருந்ததும், பொழுதை கழிப்பதற்காக டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கட்சி நிர்வாகிகள் மற்றும் வக்கீல்களை சந்திக்க தனி அறை ஒதுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. உயர் மட்டக்குழு விசாரணை அறிக்கை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் சசிகலா மேலும் வருத்தம் அடைந்துள்ளார்.
    Next Story
    ×