என் மலர்

    செய்திகள்

    சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்: ரூ.2 கோடி கைமாறியதை கண்டுபிடித்தது எப்படி?  - ரூபா பேட்டி
    X

    சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்: ரூ.2 கோடி கைமாறியதை கண்டுபிடித்தது எப்படி? - ரூபா பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி கைமாறியதை கண்டுபிடித்தது எப்படி என்று டி.ஐ.ஜி. ரூபா பேட்டி அளித்துள்ளார்.
    பெங்களூர்:

    பெங்களூர் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை கண்டு பிடித்து வெளியிட்டார்.

    தற்போது ஜெயிலில் நடந்த முறைகேடுகள் பற்றி டி.ஐ.ஜி. ரூபா நாள்தோறும் புதிய தகவல்கள் அளித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-



    பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பது குறித்து எனக்கு கைதிகள் நிறைய தகவல் அளித்தனர். இதற்காக அவர்களை வேறு ஜெயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நான் செய்த பணியை துணிச்சல் என்று கூற முடியாது, என் பணியைத்தான் செய்தேன்.

    பெங்களூர் சிறையில் முறைகேடுகள் நடந்ததை புதிய சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

    ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிப்பதற்காக பணம் கைமாறியது உண்மை. நேர்மையான, நியாயமான, முழுமையான விசாரணை நடந்தால் உண்மை வெளியே வரும். சரியான நேரத்தில் ஆவணங்களை வழங்குவேன்.

    இரட்டை இலை சின்னத்துக்காக சசிகலா உறவினர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமான மல்லிகார்ஜுனா மூலம் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ரூ.2 கோடி கைமாற்றியுள்ளதாக தகவல் வந்தது. முதலில் அதை நான் நம்பவில்லை. அதன் பிறகு டெல்லி போலீசாரிடம் அவர்கள் இருவரும் கொடுத்த வாக்குமூலம் தொடர்பான ஆதாரத்தின் நகல் கிடைத்தது. அதன் பேரில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்க பணம் கைமாறியதை கண்டுபிடித்தேன்.

    இந்தப் பணம் பெங்களூர் சிறையின் தலைமை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் மூலமாக டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு சென்றுள்ளது. இந்த வி‌ஷயத்தில் கிருஷ்ணகுமார் மூலம் சிறையில் சசிகலாவை பிரகாஷ் சந்தித்தார்.

    தற்போது இந்த ஊழல் சம்பந்தமாக கர்நாடக லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக கேள்விப்பட்டேன்.

    எனது நடவடிக்கைக்காக என் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் தொடரட்டும். அதை சந்திக்க தயார். மேலும் எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. சிறை விதிமுறைப்படி முதல் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு கைதிகள் மட்டும் தங்களுக்கு வேண்டிய உடை அணிந்து கொள்ளலாம்.

    தற்போது நான் ஏற்றுள்ள போக்குவரத்து பிரிவில் சாலை விபத்துகளை தடுத்து பாதுகாப்பை பலப்படுத்துவது பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். அதன்பின் இந்த துறையில் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    எனது நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட திரைப்பட இயக்குனர் ரமேஷ், என் பெயரில் ரூபா ஐ.பி.எஸ். என சினிமா தயாரிப்பதாக கேள்விப்பட்டேன். சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என் பெயரில் சினிமா தயாரிப்பதற்கு அனுமதிப்பது குறித்து யோசித்து முடிவு செய்வேன்.

    அலுவலக ரீதியாக எனக்கு எந்த பிரச்சினை இருந்தாலும் வீட்டுக்கு சென்றதும் என் குழந்தைகளை பார்த்ததுமே அனைத்து பிரச்சினைகளையும் மறந்து விடுவேன்.

    இவ்வாறு ரூபா கூறினார்.

    Next Story
    ×