என் மலர்

    செய்திகள்

    உலக மொழிகளில் திருக்குறள் ஒரே குறுஞ்செயலியில் இயங்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு
    X

    உலக மொழிகளில் திருக்குறள் ஒரே குறுஞ்செயலியில் இயங்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் ஒரே குறுஞ்செயலியில் இயங்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேசினார். #Vairamuthu #Thirukkural
    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே வெற்றித்தமிழர் பேரவை சார்பில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர் வைரமுத்து திருக்குறள்களை உரத்த குரலில் சொல்ல குழந்தைகளும், மாணவர்களும் பின்மொழிந்தார்கள். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

    தமிழின் ஞானப் பேரடையாளம் திருவள்ளுவர். திருக்குறள் மட்டும் ஒரு மேல்நாட்டு மொழியில் எழுதப்பட்டு இருந்தால் மானுடத்தின் சட்டமாகவே அது மாற்றப்பட்டு இருக்கும். இத்தனை பெரிய அறிவுக் கருவூலம் உலகத்தின் கண்களில் போதுமான அளவுக்குப் புலப்படுத்தப்படவில்லை. அதை உலகம் முழுக்கக் கொண்டு செல்லும் தொழில்நுட்ப யுகம் இப்போது பிறந்துவிட்டது. பனை ஓலையில் இருந்த திருக்குறளை இணைய வெளிகளுக்கு இப்போது எளிதாகக் கடத்திவிட முடியும்.

    இணையம் இப்போது உலக ஊடகமாகி விட்டது. எனவே உலகத்தின் பெருமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இணையப் பெருவெளியில் திருக்குறள் உலவவிடப்பட வேண்டும். தமிழ் அல்லாத இந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம், மராத்தி, காஷ்மீரி, குஜராத்தி, உருது, மைதிலி, ஒரியா முதலிய மொழிகளின் மொழிபெயர்ப்புகளோடு, ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷியன், ஜெர்மன், சீனம், பிரஞ்சு முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளும் ஒரே குறுஞ் செயலியில் (மொபைல் ஆப்) இயங்க வேண்டும்.

    இதுவரைக்கும் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதோ அந்த உரிமைகளைப் பெற்று ஓரிடத்தில் குவித்தால் உலகம் திருக்குறளை வசதியாக வாசிக்கும். தமிழின் பெயரால் இயங்கும் நிறுவனங்களும், சங்கங்களும் இதைச் செய்யலாம். அவர்களுக்கு இந்த உரிமையும், வசதியும் இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் இலக்கிய வாசகர்களின் விரல் நுனிகளில் திருக்குறள் அகப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

    பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிள்ளைகளின் மூளைத்திறன் பெருக்குவதற்கும், நினைவாற்றல் வளர்ப்பதற்கும் உங்கள் பிள்ளைகளுக்குப் பிஞ்சு வயதிலேயே நெஞ்சு நிறையத் திருக் குறளைக் கற்றுக்கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×