என் மலர்

    செய்திகள்

    ஒக்கி புயலில் சிக்கிய 725 மீனவர்கள் கதி என்ன?: ஹெலிகாப்டரில் தேடும் பணி தீவிரம்
    X

    ஒக்கி புயலில் சிக்கிய 725 மீனவர்கள் கதி என்ன?: ஹெலிகாப்டரில் தேடும் பணி தீவிரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒக்கி புயலில் சிக்கி மாயமான 725 மீனவர்களை விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது. மேலும் உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து கப்பல்கள் மூலமும் வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி ஒக்கி புயல் தாக்கியது. புயலால் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தன. வீடுகள் இடிந்தும், மழை வெள்ளத்தில் சிக்கியும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். குடிநீர், மின்சாரம் இல்லாமல் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.


    கடற்கரை கிராமங்களும் ஒக்கி புயலால் பேரிழப்பை சந்தித்தது. புயல் தாக்கும் என்று அறிவிப்பு வரும் முன்பே கடலுக்கு சென்ற மீனவர்கள் சூறாவளி காற்றில் சிக்கிக் கொண்டனர்.

    மீனவர்களின் படகுகள் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் உடைந்து நொறுங்கின. அதில் இருந்த மீனவர்கள் கடலில் மூழ்கினர். சில படகுகள், சூறைக்காற்றில் இழுத்துச் செல்லப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் குமரி கடல் பகுதியில் இருந்து மாயமானார்கள், அவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது.

    மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் கேரள கடல் பகுதியில் தவித்த மீனவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர்.

    இதுபற்றி மீனவ கிராமங்களுக்கு மாநில அரசு தகவல் தெரிவித்தது. 2,124 மீனவர்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும், இனி 70 மீனவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.

    இதனை குமரி மாவட்ட மீனவ அமைப்புகள் ஏற்கவில்லை. மாயமான மீனவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் அதிகமென்றும், அரசின் அறிவிப்பில் குளறுபடி உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.


    இதனை கண்டித்து மீனவ அமைப்புகள் போராட்டம் நடத்தினர். குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவ அமைப்புகள் ஒக்கி புயலில் மாயமான மீனவர்கள் பற்றிய விவரத்தை தனியாக கணக்கெடுத்தனர். இதனை மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் அளித்தனர். அவர், இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.

    இதையடுத்து தமிழக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் மீனவ கிராமங்களில் ஆய்வு நடத்தினர். மாயமான மீனவர்கள், அவர்களில் மீட்கப்பட்டவர்கள், வெளி மாநிலங்களில் தஞ்சமடைந்தவர்கள், இனி மீட்கப்பட வேண்டியவர்கள் பட்டியலை தயாரித்தனர்.

    இதுபற்றி தமிழக தகவல் தொழில்நுட்ப துறை செயலாளரும், குமரி மாவட்ட ஒக்கி புயல் நிவாரண கண்காணிப்பு குழு அதிகாரியுமான ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு நாள் முன்பே 284 படகுகளில் 2641 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் 249 படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று விட்டனர். இந்த படகுகளில் 1969 மீனவர்கள் இருந்தனர்.

    இவர்களை கடற்படை, கடலோர காவல்படை வீரர் கள் தேடி வந்தனர். இதில் அவர்கள் மராட்டியம், குஜராத், லட்சத்தீவு மற்றும் கர்நாடகா, கேரள பகுதிகளில் கரை ஒதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

    கரை சேர்ந்த மீனவர்களின் பெயர்கள், அவர்களின் படகுகள் பற்றிய விவரங்கள் மீன்வளத்துறை மூலம் சேகரிக்கப்பட்டன.

    இதில் மராட்டிய மாநிலம் டியோகர் பகுதியில் 61 படகு கள் கரை ஒதுங்கி உள்ளது. இதில் 498 மீனவர் கள் இருந்தனர். ரத்தினகிரி கடற்கரையில் 23 படகுகளில் பயணம் செய்த 267 மீனவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.

    லட்சத்தீவின் கல்பேனி, அன்ரோட், கில்ட்ரன், அகட்டி, பிட்ரா, கடாமெட், கவரட்டி, சிட்லாட் கடற்கரைகளில் 12 படகுகளும், 143 மீனவர்களும் தஞ்சம் அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கார்வார் துறைமுகத்தில் 38 படகுகளும், 810 மீனவர்களும் கரை ஒதுங்கி உள்ளனர்.

    மல்பி பகுதியில் 98 படகுகளும், 665 மீனவர்களும், குஜராத் மாநிலம் வெராவலில் 8 படகுகளும், 46 மீனவர்களும், கேரளாவில் கொச்சி, விழிஞ்ஞம், முனம்பம் கடற்கரைகளில் 9 படகுகளும், 40 மீனவர்களும் கரை ஒதுங்கி உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து மாயமான படகுகளில் 249 படகுகள் பற்றிய விவரம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்த 1969 மீனவர்கள் பற்றிய விவரத்தையும் கண்டுபிடித்துள்ளோம்.

    குமரி மீனவர்கள் கரை ஒதுங்கி உள்ள வெளி மாநிலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குஜராத்திற்கு சந்திரகாந்த் பி.காம்பிளேயும், மராட்டியத்திற்கு ‌ஷம்பு கல்லோலிகரும், கேரளாவிற்கு அருண்ராயும், லட்சத்தீவிற்கு ஜாண் லூயிசும் செல்கிறார்கள்.

    இவர்கள் அங்கு சென்று குமரி மாவட்ட மீனவர்களின் பெயர் விவரம், அவர்களின் சொந்த ஊர் போன்ற விவரங்களை சேகரிக்க உள்ளனர்.

    நீரோடி துறை, வள்ளவிளை, சின்னத்துறை, பூத்துறை, மார்த்தாண்டன் துறை உள்ளிட்ட 8 கிராமங்களில் இருந்து 75 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற 855 பேரை காணவில்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். அவர்களில் 130 பேரும், 11 படகுகளும் வெளி மாநிலங்களில் பத்திரமாக கரை ஒதுங்கிய தகவல் கிடைத்துள்ளது. அவர்களின் பெயர் விவரத்தையும் திரட்டி வருகிறோம்.

    இதற்காக கடற்கரை கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மீனவ அமைப்பினர் மற்றும் ஆலய பங்குதந்தையர்களுடனும் பேசி உள்ளோம்.

    இக்கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் இனி 725 பேரின் விவரங்களே கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் கடற்படையுடன் எங்களையும் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, தேடுதல் வேட்டையில் மீனவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தேடுதல் வேட்டை குறித்து மீனவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒக்கி புயல் தாக்கி இன்றுடன் 9 நாட்கள் ஆகிறது. புயலில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் அழுகிய நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. கடலில் தத்தளித்தவர்களை மீட்டு வந்தபோது அவர்களின் உடல் பாகங்கள் நீரில் மூழ்கி சிதைந்த நிலையில் இருந்தது.

    மீட்டு வரப்பட்டவர்களின் நிலையே இது என்றால் இனியும் கடலில் மாயமானவர்களின் கதி என்னவாக இருக்குமென்று தெரியவில்லை. இனியும் 725 மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டியது இருப்பதால் அவர்களின் கதி என்ன? என்பதை எண்ணி மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளது.

    மாயமான மீனவர்களை விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது. மேலும் உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து கப்பல்கள் மூலமும் வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×