என் மலர்

    செய்திகள்

    நெல்லையில் 5-வது நாளாக போராட்டம்: 30 பேர் உண்ணாவிரதம்
    X

    நெல்லையில் 5-வது நாளாக போராட்டம்: 30 பேர் உண்ணாவிரதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லையில் 5-வது நாளாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 30 பேர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினர்.
    நெல்லை:

    பாளை வ.உ.சி. மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி மாலை இந்த போராட்டத்தை மாணவர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள், இளைஞர்கள் தொடங்கினர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

    நேற்று இளைஞர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளும் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள். கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை என்பதால் கல்லூரி மாணவ-மாணவிகள் வழக்கத்தை விட அதிகமான அளவில் பங்கேற்றனர். இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

    இவர்கள் அவ்வப்போது மைதானத்திற்கு திரண்டு வந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றியும் வருகின்றனர். போராட்டத்தில் அரசியல் கட்சியினரை அனுமதிக்காததால் பல்வேறு பொதுநல அமைப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளார்கள். நேற்று இளைஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம் நடத்தினர். ஆங்காங்கே சிறு சிறு ஆர்ப்பாட்டங்கள், தர்ணாவும் நடத்தப்பட்டது. வக்கீல்கள் சிலர் குதிரை வண்டியில் மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தார்கள்.

    நேற்று ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் பேர் மைதானத்தில் திரண்டதால் மைதானம் முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. தன்னார்வ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தண்ணீர், காபி வழங்கி உற்சாகப்படுத்தினார்கள். இரவு விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடந்தது. சுமார் 250 இளைஞர்கள் இரவு முழுவதும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் மைதானத்திலேயே படுத்திருந்தனர். இதில் 20 மாணவிகளும் அடங்குவர்.

    இந்த நிலையில் நேற்று இரவு போராட்ட குழுவை சேர்ந்த சுமார் 30 இளைஞர்கள் திடீரென காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினர். மைதானத்தில் ஒரு பகுதியில் அவர்கள் தனியாக அமர்ந்தனர். அவர்களுக்கு சக இளைஞர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களது உண்ணாவிரத போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.

    தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் இன்று 5-வது நாளாக நடந்து வருகிறது. காலையில் இருந்தே ஏராளமான இளைஞர்கள் மைதானத்தில் குவிய தொடங்கினர். இன்று பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பொது மக்களும் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தோடு மைதானத்திற்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றார்கள்.

    3 குழுக்களாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாணவர்களின் போராட்டத்தையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே மாநகர் துணை போலீஸ் கமி‌ஷனர் பிரதீப்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று கூடுதலாக ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
    Next Story
    ×