என் மலர்

    சினிமா

    மனைவி உயிரிழந்தபோதே சசிகபூரும் பாதி இறந்துவிட்டார்: உறவினர்கள் உருக்கம்
    X

    மனைவி உயிரிழந்தபோதே சசிகபூரும் பாதி இறந்துவிட்டார்: உறவினர்கள் உருக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மனைவி உயிரிழந்தபோதே சசிகபூரும் பாதி இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
    ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சி அது. மிக முக்கிய பிரபலங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஒரு பிரபல நடிகரும் கலந்துகொண்டு இருந்தார். அந்த நடிகரை திடீரென காணவில்லை. எல்லோரும் அவரை தேடினார்கள். சிலர் நடிகர் ஏதேனும் இளம்பெண்ணுடன் மாயமாகிவிட்டாரா? என கேலி செய்தனர்.

    இந்தநிலையில் அந்த நடிகர் அங்கு இருந்த சமையல் அறையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் அங்கு இருந்த சமையல்காரர்கள், ஊழியர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தார். அவர் தான் நடிகர் சசிகபூர். புகழின் உச்சியில் இருந்தபோதும் எளிமையான வாழ்க்கை மூலம் சுற்றி இருந்தவர்களை அதிகம் கவர்ந்தவர். நடிகர் சசிகபூர் 1961-ம் ஆண்டு வெளியான ‘தர்மபுத்ரா’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

    1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் அதிக காதல் படங்களில் நடித்து இளைஞர்கள், இளம்பெண்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்தபோதும், சசிகபூர் தன் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்க தவறவில்லை. அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளமாட்டார். அந்த நாள் முழுவதையும் குடும்பத்தினருடனேயே செலவிடுவார்.


    மனைவி ஜெனிபர் கெண்டால் மற்றும் குழந்தைகளுடன் நடிகர் சசிகபூர். (பழைய படம்)

    இதேபோல படப்பிடிப்பு முடிந்து இரவு எவ்வளவு தாமதமாக வந்தாலும், காலை உணவை குடும்பத்தினருடன் சாப்பிடுவதை அவர் தவிர்த்தது இல்லை.

    மேலும் விடுமுறை காலங்களில் மட்டுமே அவர் வெளியூர் படப்பிடிப்பிற்கு திட்டமிடுவார். அப்போது தனது குடும்பத்தினரையும் அந்த ஊருக்கு அழைத்து செல்வார். ஆனால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வரக்கூடாது என கண்டிப்புடன் கூறிவிடுவார். படப்பிடிப்பு முடிந்த பிறகு குடும்பத்தினரோடு தனது நேரத்தை செலவிட்டு மகிழ்வார். சசிகபூர் தனது குடும்பத்தினர் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். கடந்த 1986-ம் ஆண்டு புற்று நோயால் ஆங்கிலப்பட நடிகையான அவரது மனைவி ஜெனிபர் கெண்டால் உயிரிழந்தார். அப்போதே சசிகபூரும் பாதி இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். அந்தளவிற்கு அவர் தனது மனைவியை நேசித்தார்.

    மனைவியை இழந்தபிறகு அவரது வாழ்க்கையில் ஆரவாரம் எதுவும் இல்லை. 1999-ம் ஆண்டு முதல் தனது திரையுலக பயணத்தையும் தவிர்த்தார். கடந்த 4-ந் தேதி, 79 வயதில் சசிகபூர் தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டு திரையுலகையும், ரசிகர்களையும் கண்ணீர் கடலில் தவிக்கவிட்டு சென்று விட்டார்.

    மறைந்த நடிகர் சசிகபூர் குறித்து அவரது மகன் குணால் கூறுகையில், “இன்று நான் எனது மகனை தோளில் போட்டு கொஞ்சுகிறேன். அவன் கழிவறை சென்றால் சுத்தம் செய்து விடுகிறேன். அவன் சிறுநீர் கழித்த ஆடையை மாற்றுகிறேன். இதற்கு எனக்கும் எனது தந்தைக்கும் இடையேயான உறவு தான் காரணம்” என உருக்கமாக கூறினார்.



    நடிகர் சசிகபூருக்கு கடந்த 2015-ம் ஆண்டு ‘தாதாசாகிப் பால்கே’ விருது வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் மிகவும் உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தார். இது குறித்து குணால் கூறும்போது:-

    ‘தாதாசாகிப் பால்கே’ விருது கொடுத்தபோது அவருக்கு வாரத்திற்கு 3 முறை ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் விருது வாங்க டெல்லிக்கு செல்லும் அளவிற்கு உடல்நலத்துடன் இல்லை. எனது தந்தைக்கு நல்ல குடும்பம் இருந்தது. நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தார். சிறந்த படங்களில் நடித்து இருந்தார். அவர் விருதுகள் குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை. ஆனாலும் அவருக்கு முன் கூட்டியே இந்த விருதை வழங்கி இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

    இளம்வயதில் கொடுத்து இருந்தால் அது அர்த்தம் உள்ளதாக இருந்திருக்கும். வாழ்க்கையின் இறுதி நாட்களில் இருந்தவருக்கு விருது கொடுப்பதில் அர்த்தம் இல்லை என்று உணர்கிறேன்.

    இவ்வாறு வேதனையுடன் கூறியிருந்தார்.
    Next Story
    ×