என் மலர்

    சினிமா

    அரசியலான ‘மெர்சல்’ குறித்து ரஜினி கருத்து தெரிவிக்காதது ஏன்? இணைய தளத்தில் விமர்சனம்
    X

    அரசியலான ‘மெர்சல்’ குறித்து ரஜினி கருத்து தெரிவிக்காதது ஏன்? இணைய தளத்தில் விமர்சனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரசியலான ‘மெர்சல்’ குறித்து ரஜினி கருத்து தெரிவிக்காதது ஏன்? இணைய தளத்தில் விமர்சனம்
    திரும்பிய திசை யெல்லாம் மெர்சல் பற்றியே பேச்சு. விஜய் நடிப்பில் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் அந்த படத்தை இதுவரை பார்க்காதவர்களும் அப்படி என்னதான் இருக்கிறது படத்தில்... ஒரு தடவை பார்த்து விடலாமோ என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

    அந்த அளவுக்கு மெர்சல் படத்துக்கு அரசியல்வாதிகளே மிகப்பெரிய விளம்பரத்தை உருவாக்கி கொடுத்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.

    மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு ரொக்கமில்லா பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதே போல ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் சிறு வியாபாரிகளை விழி பிதுங்க வைத்துள்ளது.

    இதனை அனைத்து எதிர்க்கட்சிகளுமே நீட்டி முழங்கின. அப்போதெல்லாம் எந்த பிரளயமும் ஏற்படவில்லை. ஆனால் மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றி விஜய் பேசிய அனல் தெறிக்கும் வசனங்கள் அக்னியாய் பரவி விட்டது. ஜி.எஸ்.டிக்கு எதிராக மெர்சல் படம் மூலமாக தவறான தகவல்களை விஜய் பரப்புவதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. அக்கட்சியின் தலைவர்கள் அனைவருமே மெர்சலுக்கு எதிராக வரிந்து கட்டினார்கள். மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குள்ளான வசனங்களை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பா.ஜனதா தலைவர்கள் வலுப்படுத்தி உள்ளனர்.



    இதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தமிழ் திரை உலகினரும் கண்டன குரல்களை எழுப்பி உள்ளனர். பா.ஜனதா தலைவர்களின் நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்துக்கு அணை போடுவதாக உள்ளது என்று கூறி உள்ளனர். பிரச்சினை வேண்டாம் என்று நினைத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ள நிலையிலும், தயாரிப்பாளர் சங்கம் அதனை நீக்க தேவையில்லை என்று கூறி உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும், பா.ஜனதாவை கடுமையாக சாடினார். விஜய்யை வளைத்துப் போடவே பா.ஜனதா கட்சியினர் மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று அவர் கூறினார். நடிகை கவுதமி உள்ளிட்ட தமிழ் திரை உலக பிரமுகர்களும் மெர்சலுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளனர்.

    இப்படி தமிழக அரசியல் களத்தை மட்டுமே மையம் கொண்டிருந்த மெர்சல் புயல், ராகுலின் ஆதரவு குரலால் தேசிய அளவிலும் எதிரொலித்தது. மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பா.ஜனதா கட்சியினரை கண்டித்து ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு பின்னர் மெர்சல் தீ மேலும் பற்ற தொடங்கி விட்டது. பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டு மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம், தமிழின் பெருமையை சிதைத்து விட வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இதன் பின்னர் வடமாநில ஆங்கில தொலைக்காட்சிகளும் மெர்சல் பிரச் சினையை பூதாகரமாக்கி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

    தமிழ் சினிமாவில் விஜய் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். படம் வெளியானவுடன் சில நாட்களுக்கு தியேட்டரில் கூட்டம் அலை மோதுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. மெர்சல் படத்துக்கும் அதுபோன்ற எதிர்பார்ப்பு இருந்தது. அரசியல் கட்சியினர் மெர்சலை கையில் எடுத்த பின்னர் அது இன்னும் அதிகமாகி விட்டது.

    விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் 2ஜி ஊழலை பற்றிய விமர்சனம் இடம் பெற்றிருந்தது. மெர்சலில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை விஜய் கடுமையாக சாடி உள்ளார். இப்படி தனது படங்கள் மூலமாக அரசியலில் குதிக்க விஜய் ஆழம் பார்ப்பதாகவே பரவலாக பேசப்படுகிறது. சமூக வலை தளங்களிலும் அது தொடர்பான கருத்துக் களும் அதிகம் பரப்பப் படுகிறது. அதே நேரத்தில் மெர்சல் வி‌ஷயத்தில் பா.ஜனதா தேவையில்லாமல் மூக்கை நுழைத்து மாட்டிக் கொண்டதாகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.



    இப்படி தேசிய அளவில் மெர்சல் அரசியல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் கமல் தனது டுவிட்டர் பதிவில் மெர்சலுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இதுவரையில் எந்த கருத்தும் கூறவில்லை. அவர் மவுனம் சாதித்து வருகிறார். இதற்கு சமூக வலைதளங்களில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

    மெர்சல் விவகாரத்தில் திரை உலகை சேர்ந்த சக நடிகர் என்கிற வகையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால், அது பாரதீய ஜனதா கட்சியினருக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்று ரஜினி கருதுவதாகவும், அதன் காரணமாகவே எந்த கருத்தும் கூறாமல் உள்ளார் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×