என் மலர்

    சினிமா

    அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் கூட்டத்தில் அறிவிக்கும் ரஜினிகாந்த்
    X

    அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் கூட்டத்தில் அறிவிக்கும் ரஜினிகாந்த்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘காலா’ படப்பிடிப்பு முடிவதால் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    ‘காலா’ படப்பிடிப்பு முடிய இருப்பதால் ரஜினிகாந்த் அடுத்த மாதம் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் 8 வருடங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 5 நாட்கள் 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இந்த சந்திப்பு நடந்தது. மீதமுள்ள மாவட்ட நிர்வாகிகளை 3 மாதங்கள் ஆகியும் இன்னும் சந்திக்கவில்லை.

    அவர்கள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுப்பது எப்போது? என்று விசாரித்த வண்ணம் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 2.0, காலா படங்களில் ரஜினிகாந்த் தீவிரமாக நடித்து வந்ததால் ரசிகர்கள் சந்திப்பு உடனடியாக நடக்கவில்லை. 2.0 படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பு முடிவடைந்து டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.



    அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஏற்கனவே மும்பை பகுதியில் இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி நகரை அரங்காக அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

    படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தினமும் பங்கேற்று நடித்து வருகிறார். அவருடன் கதாநாயகியாக வரும் ஹூமா குரேஷி மற்றும் சமுத்திரக்கனி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சம்பத், சாயாஷி ஷிண்டே ஆகியோரும் நடிக்கின்றனர். பா.ரஞ்சித் டைரக்டு செய்கிறார். இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.



    ஓரிரு வாரங்களில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை படமாக்க படக்குழுவினர் மீண்டும் மும்பை செல்கிறார்கள். காலா படப்பிடிப்பு முடிவடைவதை தொடர்ந்து விடுபட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை அடுத்த மாதம்(அக்டோபர்) 6 நாட்கள் தொடர்ச்சியாக சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது. ரசிகர்களுக்கு விநியோகிக்க அடையாள அட்டைகள் தயாராகி வருகின்றன. கடந்த முறை ரசிகர்களை சந்தித்தபோது, கடவுள் மனது வைத்தால் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றும் பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.



    “நாட்டில் அமைப்பு கெட்டுப்போய் கிடக்கிறது. அதை சீர்படுத்த வேண்டும் ரசிகர்களுக்கு அழைப்பு வரும். போருக்கு தயாராக இருங்கள்” என்றும் அரசியலில் குதிக்கப்போவதை சூசகமாக தெரிவித்து இருந்தார். எனவே அடுத்த மாதம் ரசிகர்களை சந்திக்கும்போது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஏற்கனவே அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பது குறித்து அரசியல் கட்சி நடத்தும் நடிகர்கள், வட இந்திய அரசியல் நண்பர்கள், அமிதாப்பச்சன் போன்ற மூத்த நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரிடம் அவர் ஆலோசனை கேட்டு வந்தார். பலரும் அவர் அரசியலில் ஈடுடலாம் என்று சாதகமான கருத்துக்களையே தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×