என் மலர்

    சினிமா

    ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கட்டணம் கடுமையாக உயரும்: திரைப்பட வர்த்தக சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்
    X

    ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கட்டணம் கடுமையாக உயரும்: திரைப்பட வர்த்தக சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கட்டணம் உயரும் என்று திரைப்பட வர்த்தக சங்க தலைவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரி விதிப்பால் சினிமா துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவரும், பட தயாரிப்பாளருமான ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் கூறியதாவது:-

    இதுவரை தமிழ்நாட்டில் ‘ஏ’ சான்றிதழ், ‘யு ஏ’ சான்றிதழ் பெற்ற தமிழ் படங்களுக்கும், இந்தி, ஆங்கில படங்களுக்கும் தியேட்டர்களில் 30 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. தமிழ் படங்கள் ‘யு’ சான்றிதழ் பெற்றால் வரி சலுகை உண்டு.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை வந்தால் இந்த வரி சலுகை கிடைக்காது. எல்லா படங்களுக்கும் வரி விதிப்பதால் வரியுடன் சேர்த்துதான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதனால் சினிமா கட்டணம் உயரும்.

    ஆரம்பத்தில் சினிமா டிக்கெட் அனைத்துக்கும் 28 சதவீதம் வரி என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு திரைப்படத் துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுக்கு 28 சதவீதமும், 100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீதமும் வரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு படம் ரூ.10 கோடியில் தயாரிக்கப்பட்டால், சம்பளம் மற்றும் செலவுக்காக தயாரிப்பாளர் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் கூடுதல் செலவு ஆகும்.

    இந்த படத்தை லாபம் சேர்த்து விற்பார்கள். அதை வாங்கும் பட வினியோகஸ்தர்களிடம் தயாரிப்பாளர் 12 சதவீத வரியை பெறலாம். இதன் மூலம் கூடுதல் செலவை சரிகட்டிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறுகிறது.

    இந்த செலவை சினிமா டிக்கெட் மூலம் சரி செய்வதற்காக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சுமை அதிகரிக்கிறது. படத் தயாரிப்பாளர்களை இந்த வரி விதிப்பு முறை பெரிதும் பாதிக்கும்.

    தமிழ்நாட்டில் வருடத்துக்கு சுமார் 220 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் 10 சதவீத படங்கள் கூட வெற்றி பெறுவது இல்லை. தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 150 படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. இதில் 4, 5 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன. 90 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன.

    தயாரித்த படம் வெற்றி பெற்றால் போட்ட பணம் கிடைக்கும். தோல்வி அடைந்தால் படம் எடுத்த செலவு மற்றும் கொடுத்த வரி எதுவும் திரும்ப வராது. எனவே, அடுத்த படம் தயாரிக்க முடியாத நிலை ஏற்படும்.

    இந்தி படங்கள் வெளியாகும் மாநிலங்களில் சினிமா டிக்கெட்டுக்கு 40 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கும் முறை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 30 சதவீதம், கேரளாவில் 15 சதவீதம், ஆந்திராவில் 12 சதவீதம் வரி உள்ளது. கர்நாடகத்தில் வரி இல்லை. ஆனால் இப்போது அனைத்து மாநில வரிகளையும் சராசரியாக்கி 28 சதவீதம், 18 சதவீதம் என சினிமா டிக்கெட்டுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைப்போல் வரி விலக்கு பெற்ற, குறைந்த வரி விதித்த மாநிலங்களில் டிக்கெட் விலை உயரும்.

    இதுதவிர மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் சினிமாவுக்கு கேளிக்கை வரி விதிக்கலாம் என்று புதிய சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமா டிக்கெட் மேலும் உயரும். இதனால் திரைப்பட தொழில் முழுமையாக முடங்கும் நிலை உருவாகும்.

    இது குதிரை குழி பறித்து அதில் குதிரையை தள்ளி மண் போட்ட கதையாக வாய்ப்பு உள்ளது. இதை தான் நடிகர் கமல்ஹாசன் “நிலைமை இப்படியே போனால் எல்லோரும் சினிமாவையே விட்டு ஓட வேண்டியது வரும்“ என்று எச்சரித்தார்.

    இன்னும் ஒரு மாதம் நிலைமை எப்படி இருக்கும் என்று பார்ப்போம். குறைக்க முயற்சி செய்வோம். முடியவில்லை என்றால் தியேட்டர்களை மூடுவது தவிர வேறு வழி இருக்காது. முழுமையாக ஜி.எஸ்.டி. முறை அமல்படுத்தப்படும் போது சினிமா தயாரிப்பு முடங்கும். எனவே இந்த பிரச்சினை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் திரைப்படத் துறையை காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு சுரேஷ் கூறினார்.

    Next Story
    ×