என் மலர்

    சினிமா

    பட அதிபர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: விஷால் அறிவிப்பு
    X

    பட அதிபர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: விஷால் அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பட அதிபர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், அப்போது, படப்பிடிப்புகள் நடைபெறாது; தியேட்டர்கள் மூடப்படும் என்றும் விஷால் அறிவித்தார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்க உறுப்பினர்களின் கூட்டுகூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விளக்கி நடிகரும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரின் கூட்டுகூட்டம் நடந்தது. அதில் திரை உலக பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் சட்டத்துக்கு புறம்பான பதிவிறக்கம் போன்ற பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. இதுபற்றி இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.

    மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்களை அளிக்க இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்றவேண்டும். அப்படி நிறைவேறாத பட்சத்தில் வருகிற மே 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். அதன்படி எந்த தியேட்டர்களிலும் படம் திரைக்கு வராது. படப்பிடிப்புகள் நடைபெறாது என்ற முக்கிய முடிவு எடுக்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம்.

    இவ்வாறு விஷால் கூறினார்.



    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * திரையரங்கு கட்டண முறையில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரவேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை, இருக்கும் இடம், ரசிகர்களுக்கு தரும் வசதிகள், பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்புக்கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டுவர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    * திருட்டு வி.சி.டி. ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்புபணியில் குறைந்தபட்சம் ஆயிரம் நபர் கொண்ட ‘டீம்’ அமைக்கப்பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட ‘டீம்’ போதவில்லை.

    * திரைப்படத்துறையினரே, இந்த ‘பைரசி’ தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்கவேண்டும்.

    * உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணைப்பிறப்பிக்க வேண்டும்.



    * இந்தத்துறையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் மாநிலம் முழுவதும் கட்டப்பட வேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும்.

    * பொதுச்சேவை வரி என்கிற புதிய வரிக்கொள்கையில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது திரைப்படத்துறைதான். திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும்போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது. எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்தபட்ச வரி விதிப்பாக 4 அல்லது 5 சதவீதம் மட்டுமே பொதுச்சேவை வரியாக இருக்கவேண்டும்.

    * திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும்போது, தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக பொது சேவை வரி விதிக்கப்பட வேண்டும்.

    * மத்திய அரசு, புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள், இதையே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணையசேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்யவேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும்.



    * புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் பொதுச்சேவை வரி மற்றும் பல வித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்கவேண்டும்.

    * திரைப்படத்தொழிலையும், அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்பவர்களுக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும், மரியாதையையும் அளிக்கவேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட 14 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் கதிரேசன், ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம், டைரக்டர்கள் பார்த்திபன், பாண்டியராஜ், ஆர்.வி.உதயகுமார் மற்றும் ஏராளமான தயாரிப்பாளர்கள்-தியேட்டர் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×