என் மலர்

    சினிமா

    இந்தி நடிகர் ஓம்புரி மரணம்: மோடி - கமல்ஹாசன் இரங்கல்
    X

    இந்தி நடிகர் ஓம்புரி மரணம்: மோடி - கமல்ஹாசன் இரங்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தி நடிகர் ஓம்புரி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
    இந்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் ஓம்புரி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் குடும்பத்துடன் அவர் வசித்து வந்தார்.

    படப்பிடிப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய ஓம்புரிக்கு நேற்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.

    நடிகர் ஓம்புரி 1950-ம் ஆண்டு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். ‘காஷிராம் கோட்வால்’ என்ற மராத்தி படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படம் 1976-ம் ஆண்டு வெளியானது. 1980-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆக்ரோஷ்’ இந்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டார்.

    1982-ம் ஆண்டு வெளியான ‘ஆரோகன்,’ 1983-ம் ஆண்டு வெளியான ‘அர்த் சத்யா’ ஆகிய 2 படங்களிலும் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் கிடைத்தன. பாவ்னி பவாய், சட்காட்டி, மிர்ச்சோலாம் தாராவி, நசூர், ராட் உள்ளிட்ட பல படங்கள் ஓம்புரியின் நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்தன.

    அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அக்‌ஷய்குமார், அமீர்கான் ஆகியோருடன் இணைந்து நடித்து இருக்கிறார். கமல்ஹாசன் தனது ‘அவ்வை சண்முகி’ படத்தை இந்தியில் ‘சாச்சி’ என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் ஓம்புரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ‘ஹேராம்’ படத்திலும் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார்.

    ஜெயராம் நடித்து தமிழில் சமீபத்தில் வெளியான ‘செண்பக கோட்டை’ படத்தில் சாமியார் கதாபாத்திரத்தில் வந்தார். ‘காந்தி’ ஆங்கில படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மை சன் த பென்டாஸ்டிக், த பரோல் ஆபீசர், ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் ஆகிய ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். சிட்டி ஆப் ஜாய், த ஹோஸ்ட் அன்ட் த டார்க்னஸ் ஆகிய ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், ஜூலியா ராபட்ஸ், டாம் ஹாங்க்ஸ் ஆகியோருடன் நடித்து உலக அளவிலும் பேசப்பட்டார்.

    தற்போது 4 படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். பத்மஸ்ரீ விருது, சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

    ஓம்புரி மறைவு இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தார்கள். ஓம்புரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்பட பல தலைவர்களும், அமிதாப் பச்சன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும் ஓம்புரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஓம்புரி எனது நண்பர் என்பதில் இத்தனை ஆண்டுகாலம் பெருமை கொண்டு இருந்தேன். அவர் மறைந்து விட்டார் என்று எப்படி சொல்ல முடியும்.? அவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலமாக எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

    தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    “பஞ்சாபில் பிறந்து இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து 45 வருட காலம் தன் வாழ்க்கையை கலைத்துறைக்கு அர்ப்பணித்தவர் ஓம்புரி. இந்திய படங்களில் மட்டுமல்ல ஆங்கில படங்களிலும் நடித்து நமக்கு பெருமை சேர்த்தவர் ஆவார். நாடக துறை வளர்ச்சிக்கும் அரும் சேவை செய்தவர்.

    பத்மஸ்ரீ, சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளாலும் கவுரவிக்கப்பட்டவர். அவரது மறைவு திரையுலகம் மற்றும் நாடக துறைக்கு மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறோம்.”

    இவ்வாறு இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×