என் மலர்

    சினிமா

    செம்பருத்தியில் ரோஜாவுக்கு கதாநாயகி வேடம் கிடைத்தது எப்படி?
    X

    செம்பருத்தியில் ரோஜாவுக்கு கதாநாயகி வேடம் கிடைத்தது எப்படி?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    "செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம்.
    "செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம்.

    விஜயகாந்த் நடிப்பில் "கேப்டன் பிரபாகரன்'' வெற்றி பெற்றிருந்த நேரம். படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, புகழின் உச்சியில் இருந்தார்.

    அதிரடிப்படமாக "கேப்டன் பிரபாகரன்'' வந்திருந்ததால், அடுத்து ஒரு காதல் கதையை இயக்க விரும்பினார், செல்வமணி. அப்படி அவர் முடிவு செய்த படம்தான் "செம்பருத்தி.''

    படத்தின் நாயகனாக பிரசாந்த். அவரது பாட்டியாக `அஷ்டாவதானி' நடிகை பானுமதி என தேர்வு செய்தவருக்கு, `நாயகி' கிடைப்பதில்தான் சிக்கல் இருந்தது. கதைக்கு புதுமுக நடிகையை போட்டால் சரியாக இருக்கும் என்று கருதினார் அவர். அதற்கேற்ப நாயகி தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டார்.

    இதில் ரோஜா எப்படி சிக்கினார்? ரோஜாவே கூறுகிறார்:

    "அப்போது என் புகைப்படம் ஒரு சினிமா பத்திரிகையின் அட்டையில் வந்தது. தெலுங்குப் படத்துக்காக அப்பாவின் நண்பர் எடுத்த படங்களில் ஒன்றுதான் இப்படி பத்திரிகையில் வந்துவிட்டது. இதை யாரோ டைரக்டர் செல்வமணியின் கண்களில் காட்டியிருக்கிறார்கள். உடனே அவரும் இப்படியொரு புதுமுகத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்'' என்று கூறியிருக்கிறார்.

    உண்மையில், போட்டோவில் பார்த்ததுமே எனது பெரிய கண்களும், புன்னகை முகமும் அவருக்குப் பிடித்து விட்டன. அதனால் என்னை கதாநாயகியாக தேர்வு செய்தார்.''

    இவ்வாறு ரோஜா கூறினார்.

    புது நாயகியை செல்வமணி முடிவு செய்ததும் திருப்பதியில் அவர் வீட்டுக்கு சினிமா ஆட்கள் போய்த் தேடியிருக்கிறார்கள். ரோஜாவோ (அப்போது ஸ்ரீலதா) தனது பெற்றோருடன் அதே நேரத்தில் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்திருக்கிறார். சென்னை தி.நகரில் உள்ள "ரோகிணி இன்டர் நேஷனல்'' ஓட்டலில்தான் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு ஆட்கள் இதைத் தெரிந்து கொண்டார்கள்.

    வேகவேகமாக ரோகிணி இன்டர்நேஷனல் ஓட்டலுக்குப் போனவர்கள், ரோஜாவின் குடும்பம் பத்து நிமிடம் முன்புதான் அறையை காலி செய்துவிட்டு காரில் திருப்பதிக்கு புறப்பட்டார்கள் என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.

    ரோஜாவை தேடி வந்திருந்த செல்வமணியின் நண்பர் ராமநாதன், உடனே செயலில் இறங்கினார். சினிமாவில் `கார் சேஸிங்' காட்சிகள் வருகிற மாதிரி காரை வேகமாக ஓட்டச்செய்து, சென்னை பாரிமுனை சந்திப்பில், ரோஜாவின் காரை மடக்கிவிட்டார். அதன் பிறகு நடந்ததை ரோஜாவே கூறுகிறார்:

    "எங்கள் காரை மடக்கிய அதே வேகத்தில் "செம்பருத்தி'' படக்கம்பெனிக்கு அழைத்துப் போனார்கள். அப்போது கேப்டன் பிரபாகரன் படம் `ஓஹோ' என ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய டைரக்டர் படத்தில் நடிக்க நமக்கு அழைப்பா என்று எனக்கு திகைப்பாகக்கூட இருந்தது. அப்போது கூட நடிக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இல்லாதிருந்ததால், நடிக்க வந்த அழைப்பு என்னை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தவில்லை.''

    இவ்வாறு ரோஜா கூறினார்.

    இதன் பிறகு ரோஜாவின் அப்பாவிடம், திரைக்கதையை செல்வமணி சொல்லி, ரோஜாவை நடிக்க வைக்க அனுமதி கேட்டிருக்கிறார். இப்போதும் ரோஜாவின் அப்பா மட்டுமே "ஓ.கே'' சொல்லியிருக்கிறார். ரோஜா தரப்பில் அப்போது மவுனமே பதிலாக இருந்திருக்கிறது.

    மறுநாள் அழைத்து வரச்சொல்லி ரோஜாவின் அப்பாவிடம் டைரக்டர் செல்வமணி சொல்ல, மறுநாளே மேக்கப் டெஸ்ட் நடந்திருக்கிறது. அதன் பிறகு ஊருக்கும் வந்துவிட்டார்கள்.

    அப்போது நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது என்றே எண்ணியிருக்கிறார் ரோஜா. அதுபற்றி அவர் சொல்லும்போது:

    "நானெல்லாம் கறுப்பு. அப்போது படங்களில் நடிக்க வந்த நடிகைகள் எவ்வளவு கலராக இருந்தார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் நடித்த சினிமாவில் என்னை எங்கே அழைக்கப் போகிறார்கள்? அதுவும், செல்வமணி போன்ற பெரிய டைரக்டர்கள் நிச்சயம் என்னை அழைக்கமாட்டார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.

    ஆனால் நான் எதிர்பார்த்தே இராத அந்த தகவல் 10-வது நாளில் வந்துவிட்டது. நடிக்க வருமாறு, தகவல் அனுப்பினார்கள். வீட்டில் மகா சந்தோஷம். இப்போது அப்பா வழியில் அம்மாவும் நான் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அப்போது கூட நடிப்பில் சாதனை செய்த `அஷ்டாவதானி' பானுமதியம்மாவுடன் நடிக்கப் போகிறோம் என்றதும் எனக்கு பயமாகிவிட்டது'' என்றார், ரோஜா.

    தமிழில் நடிக்க வந்து விட்டாரே தவிர, தமிழில் ஒரு வார்த்தை கூட ரோஜாவுக்குத் தெரியாது. டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை செய்தார். மற்ற நேரங்களில் அண்ணனுடன்தான் தெலுங்கில் `மாட்லாடிக்' கொண்டிருப்பார். படம் ஒரு வருடம் தயாரிப்பில் இருந்ததால் அவ்வப்போது கிடைத்த இடைவெளியில் ரோஜா தெலுங்கில் 3 படங்கள் நடித்து முடித்து விட்டார். முதல் படம் "பிரேம தப்பர்சு'' தோல்விப்படம் என்றாலும், அடுத்தடுத்து வந்த 2 படங்கள் வெற்றி பெற்று ரோஜாவுக்கு தெலுங்குப்பட உலகில் நிலையான மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.

    அதிலும் கூட இரண்டாவது தெலுங்குப்படத்தை விடவும், மூன்றாவது தெலுங்குப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரோஜாவை தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக நிலை நிறுத்தியது.

    தயாரிப்பில் ஒரு வருடம் நீடித்த "செம்பருத்தி'' ரிலீஸ் ஆகி அதுவும் வெற்றிப்படமானதில் ரோஜா தமிழிலும் முன்னணி நடிகையானார்.

    திரையில் தனது (கறுப்பு) நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ரோஜாவின் அழகுத்தோற்றம் வெளிப்பட்டதில் ரோஜாவுக்கு நம்ப முடியாத ஆச்சரியம்.

    "நல்ல கலராக இருப்பவர்கள்தான் சினிமாவில் ஹீரோயினாக முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதனால்தான் நடிக்க அழைக்கப்பட்ட புதிதில் என் மீதே எனக்கு நம்பிக்கையில்லை. நானும் படத்தில் நடித்து அது திரையிலும் வந்த பிறகுதான், முன்னர் நடித்த பல பிரபல நடிகைகள் கூட மேக்கப் உபயத்தில்தான் கலர் கலராக காட்சியளித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு `நிறம்' ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை'' என்கிறார், ரோஜா.

    தெலுங்கில்படங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, தமிழிலோ "செம்பருத்தி'' படத்துக்குப் பிறகு உடனடி வாய்ப்பு வரவில்லை, ரோஜாவுக்கு. கொஞ்சம் இடைவெளி விட்டு அதன் பிறகு வந்த படமே `சூரியன்.' இதில் சரத்குமார் ஜோடியாகி இருந்தார் ரோஜா.

    இந்தப்படமும் வெற்றி பெற, தமிழில் ராசியான நடிகை என்ற பெயரும் ரோஜாவுக்கு கிடைத்தது.

    "செம்பருத்தி'' படத்திலேயே ரோஜாவின் குழந்தைக் குணமும், யதார்த்தமான போக்கும் டைரக்டர் செல்வமணியை கவர்ந்து இருக்கிறது. ரோஜா மாதிரியான வெள்ளை மனம் கொண்ட பெண்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய அவர், அடுத்து எடுத்த அஸ்திரம்தான் "ரோஜாவுடன் திருமணம்.''
    Next Story
    ×