என் மலர்

    சினிமா

    இளையராஜாவின் இசை வாரிசுகள்
    X

    இளையராஜாவின் இசை வாரிசுகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இசை உலகில், இளையராஜாவின் வாரிசுகளாக கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன்சங்கர்ராஜா ஆகியோர் திகழ்கிறார்கள்.
    இசை உலகில், இளையராஜாவின் வாரிசுகளாக கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன்சங்கர்ராஜா ஆகியோர் திகழ்கிறார்கள்.

    இளையராஜாவின் குடும்பத்தில் அவரது தம்பி கங்கை அமரனும் புகழ் பெற்ற இசை அமைப்பாளராக இருக்கிறார்.

    இளையராஜாவின் வாரிசுகள் கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன்சங்கர்ராஜா மூவருமே அப்பா வழியில் இசையமைப்பாளர்களாகி

    விட்டார்கள்.பவதாரிணி பாடகியாகவும், புகழ் பெற்றுள்ளார். "பாரதி'' திரைப்படத்தில் "மயில் போல பொண்ணு ஒண்ணு'' என்ற பாடலைப் பாடி தேசிய விருது பெற்றார். இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. பாடலை எழுதியவர் மு.மேத்தா.

    இளையராஜாவின் இசைக்குழுவில், 11 வயதில் கீ போர்டு வாசிப்பவராக சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், இன்று உலகப்புகழ் பெற்ற இசை அமைப்பாளராக விளங்குகிறார்.

    தன் இசைக்குழுவில், ஏ.ஆர்.ரகுமான் எப்படி சேர்ந்தார் என்பது பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "மூடுபனி படத்துக்கு நான் இசை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கீபோர்டு வாசிப்பவர், குடிபோதையில் வந்திருப்பது தெரிந்தது. உடனே அவரை வெளியே அனுப்பி விட்டேன். `கீபோர்டு' வாசிக்கத் தெரிந்த வேறொருவர் தேவைப்பட்டபோது உடனடியாக யாரும் கிடைக்கவில்லை. அப்போது என் குழுவில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து, "எனக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அவன் ஓரளவு கீ போர்டு வாசிப்பான். அழைத்து வரட்டுமா?'' என்று கேட்டார். "இதென்ன கேள்வி? உடனே அழைத்து வாருங்கள்'' என்றேன்.

    அடுத்த அரை மணி நேரத்தில் அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள். நான் அந்தச் சிறுவனிடம் கீபோர்டில் வாசிக்க வேண்டிய இசைக் குறிப்பை கொடுத்தேன். அதை வாசிப்பதில் அவனுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டபோது நானே அவன் கையைப் பிடித்து வாசிக்கச் சொல்லிக் கொடுத்தேன். அந்தச் சிறுவனும் புரிந்து கொண்டு நான் எதிர்பார்த்த மாதிரி வாசித்து விட்டான். பாடலும் நன்றாக அமைந்தது.

    அந்த சிறுவன் வேறு யாருமல்ல, இசையமைப்பாளர் சேகரின் மகன் திலீப்தான் அவர். இந்த திலீப்தான் பின்னாளில் ஏ.ஆர்.ரகுமானாக இசை உலகுக்கு வந்தார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    சித்ரா, ஜென்சி, சுஜாதா, மகதி உள்பட பல பின்னணி பாடகிகளை அறிமுகப்படுத்திய பெருமை இளையராஜாவுக்கு உண்டு.

    இளையராஜா இசை அமைத்த "நிழல்கள்'' படத்தில், "பொன்மாலைப் பொழுது'' பாட்டை எழுதி, திரை உலகில் அடியெடுத்து வைத்தார், கவிஞர் வைரமுத்து. பாரதிராஜா  இயக்கிய இந்தப்படம் 1980-ல் வெளிவந்தது.

    இசையமைத்துப் பாடுவதோடு மட்டுமின்றி இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர், இளையராஜா.

    "சங்கீதக் கனவுகள்'', "வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது'', "பால் நிலா பாதை'', "துளிக்கடல்'', "ஞான கங்கா'', "வெண்பா நன்னூல் மாலை'', "பள்ளியெழுச்சி பாவை பாடல்கள்'' முதலான புத்தகங்களை எழுதியுள்ளார்.

    ஆதிசங்கரரின் ஞான நூலை சமஸ்கிருதத்தில் ரமண மகரிஷி எழுதினார். தமிழில் அதை "விவேக சூடாமணி'' என்ற பெயரில் இளையராஜா எழுதியிருக்கிறார்.

    இலக்கிய ஆர்வம் பற்றி அவர் குறிப்பிடுகையில், "அவ்வப்போது கவிஞர் பொன்னடியான் எனக்கு தமிழ் இலக்கிய - இலக்கணம் கற்பிக்க வருவார். பிற்காலத்தில் பாடல்கள் எழுதவும், வெண்பா, கவிதைகள் போன்ற பலவற்றை எழுதும்போதும், அவர் முன்பு கூறிய விஷயங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன'' என்று கூறியுள்ளார்.

    இசைக்காக 3 முறை டாக்டர் பட்டம் பெற்றவர் இளையராஜா.

    1994-ல் அரிசோனா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அடுத்த ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டங்களை வழங்கின.

    இளையராஜாவின் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டு, பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்பட பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    "டாக்டர்'' பட்டம் கிடைப்பதற்கு முன்பே, இளையராஜா பெற்ற பட்டம் "இசை ஞானி.'' இதை வழங்கியவர் முதல்-அமைச்சர்

    கருணாநிதி.காரைக்குடியில் பட அதிபர் பழ.கருப்பையா நடத்திய விழாவில், இந்த விருது வழங்கப்பட்டது.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, கேரள அரசின் "சிறந்த இசையமைப்பாள''ருக்கான விருது, ஆந்திர அரசின் "நந்தி'' விருது உள்பட பல விருதுகளை இளையராஜா பெற்றுள்ளார்.

    "ஹவ் டு நேம் இட்?'', "நத்திங் பட் வின்ட்'', "இன்டியா 24 ஹவர்ஸ்'' ஆகிய பெயர்களில் இசை ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார்.

    இளையராஜா பல்வேறு இந்திய மொழிகளிலும் 854 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இசை அமைத்த பாடல்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் மேல்.

    இளையராஜா இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கும் 855-வது படம் `ஆ தினகளு' (அந்த நாட்கள்) என்ற கன்னடப்படம். தனது இசைப்பணிகளை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனக்கான நிரந்தர அறையில் இருந்து கவனிக்கிறார்.

    இளையராஜாவை "அன்னக்கிளி'' படத்தின் மூலம் இசை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும், ராஜா என்ற பெயரை மாற்றி "இளையராஜா'' என்ற பெயரை சூட்டியவருமான பஞ்சு அருணாசலம் கூறியதாவது:-

    "தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்த போதிலும், இந்தி சினிமாப் படங்கள் பாடலுக்காகவே இங்கே வெற்றிகரமாக ஓடின.

    இந்திப் படங்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை தடுக்கக்கூடிய விதத்தில், இசையில் புதுமையைப் புகுத்தியவர் இளையராஜா. அதனால், இசையில் இளையராஜாவின் கொடி, வெகு உயரத்தில் பறந்தது; இன்னும் பறந்து கொண்டிருக்கிறது.

    இசை உள்ளவரை இளையராஜாவின் புகழும் வாழ்ந்து கொண்டிருக்கும்.''

    இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.

    இளையராஜா கூறியதாவது:-

    "இசை தானாக வராது. யாரும் அழைத்து வந்துவிட முடியாது. அதுவாக என்னிடம் வந்தது. போட்டியும், பொறாமையும், குரோதமும் நிறைந்த இந்த உலகில் அன்பும், பாசமும் நேசமும் உள்ள மனித உறவுகளை காண்பதரிது.

    இவ்வளவுக்கும் மத்தியில், என்னை தவிக்க விட்டு விடாமல், சப்த சுரமும், நற்றமிழும், பாடலும், நாதாமிர்தமாக - நதியாக - கடலாக இருக்கும் இசையிலே ஒரு துளியாக என்னை இறைவன் உட்கார வைத்தானே! இது, தகுதியற்ற என் மீது இறைவன் கொண்ட கருணையே அல்லாமல் வேறு என்னவாக இருக்கும்!

    மனித வாழ்க்கையில் சில மனிதர்கள் மட்டுமே ஆலமரம் போல் நின்று, வருகிறவர்களுக்கு நிழல் தருவதுடன் தங்கும் பறவைகளுக்கு இடம் கொடுப்பது போல, மற்றவர்களுக்கு உபயோகமாக தங்கள் வாழ்க்கையை கழிப்பார்கள்.

    சாதாரணமான ஒரு இசை அமைப்பாளனான என்னிடம் வந்து தங்கிப்போனவர்களும் தாளாது போனவர்களும் இருந்தாலும், எத்தனையோ தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், இசைத்தட்டு - கேசட் விற்பனையாளர்கள் உயர்வதற்கு என் இசை ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

    எனினும், இந்தப் பிறவியில் இவை எல்லாம் எனக்கு பெரிதல்ல. என் இசை, என் அன்னை மூகாம்பிகை, என் பிறவிப்பிணி ஒழித்த பகவான் ஸ்ரீரமணர் அருள் - இதையெல்லாம் அடைந்ததை மட்டுமே முக்கியமாக கருதுகிறேன்.

    திருவண்ணாமலை என்ற ஒரு ஸ்தலம் இல்லாது போயிருந்தால், என் கதி என்னவாகியிருக்கும்? அதைச்சுற்றிச் சுற்றி இந்த உடம்பைத் தேய்ப்பதைத் தவிர எனக்கு ஏதும் உயர்வாகத் தோன்றவில்லை!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    Next Story
    ×