என் மலர்

    சினிமா

    சிவாஜிகணேசன் படத்துக்கு இளையராஜா இசை பாடல் பதிவின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள்
    X

    சிவாஜிகணேசன் படத்துக்கு இளையராஜா இசை பாடல் பதிவின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த 'ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த 'ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.

    தனது இசை வாழ்வு அனுபவங்கள் குறித்து, இளையராஜா கூறியதாவது:-

    "சென்னை கமலா தியேட்டரில் 'கிழக்கே போகும் ரெயில்' படத்தின் வெற்றி விழா. விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கலந்துகொண்டு எங்கள் எல்லாருக்கும் பரிசு வழங்கினார்.

    அவர் பேசும்போது, படத்தில் இடம் பெற்ற ''மாஞ்சோலைக் கிளிதானோ'' என்ற பாடலை வாய்விட்டுப் பாடி, ''அடடா! என்ன பாடல்! என்ன பாடல்!'' என்று புகழ்ந்து பேசினார். நடிகர் திலகத்திடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    சிவாஜி பேசும்போது, பாரதிராஜாவை வானளாவ உயர்த்திப்பேசினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்தவர்களில் ஒருவராக, பாரதிராஜாவின் அம்மாவும் அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். விழா முடிந்ததும், தனது தாயாரை சந்தித்த பாரதிராஜா, ''எப்படி இருந்தது?'' என்று கேட்க, அந்தத் தாயாரோ சர்வ சாதாரணமாக, ''அது என்னமோப்பா! அவங்க என்னென்னமோ பேசுறாங்க! ஆனா என் காதுல பாரதிராசா, பாரதிராசாங்கற உன் பேர் மட்டும்தான் கேட்டுதுப்பா'' என்று சொன்னார்.

    உயர்ந்த தாயுள்ளத்தின் உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான் என்னால் இதை உணர முடிந்தது. இதற்கிடையில் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் ஆபீசிற்கு ஒருநாள் போய் வரலாம் என்று போனேன். அப்போது ராஜ்கண்ணுவுடன் சிலர் இருந்தனர். என்னைப் பார்த்ததும், ''படத்தின் பாடல்கள் சரியில்லை. பதினாறு வயதினிலே படப்பாடல்கள் மாதிரி அமைந்திருந்தால் படம் இன்னும் நன்றாகப் போகும்'' என்றார்கள்.

    என் முகத்திற்கு எதிரேயே அவர்கள் இப்படிச் சொன்னதில், எனக்கு வருத்தமாகி விட்டது. எல்லா படப் பாட்டுக்களும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமா? என்ன இவர்களின் பேச்சு? ஒரு அடிப்படை கலை உணர்வு கூடவா இல்லாமல் இருப்பார்கள்? மனம் வருந்தினேன். அந்த மாதிரியான வருத்தங்கள், மனதில் வடுவாகத் தங்கி விட்டன. நடிகர் திலகம் சிவாஜி நடிக்க ''ரிஷிமூலம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.கருப்பசாமி தயாரித்தார். நான் இசை. மகேந்திரன் வசனம், எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன். எஸ்.எஸ்.கருப்பசாமி அப்போது அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மிகவும் கண்டிப்பானவர். கண்ணியமானவரும் கூட.

    பாடல்கள் கம்போசிங்கிற்கு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கருப்பசாமி ஆகியோருடன் மகாபலிபுரம் போனேன். அங்குள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கினோம். மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் நடந்தது. ''நேரமிது'' என்ற பாடலுக்கான சூழ்நிலை புதிது. சிவாஜி - கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் இந்த டூயட் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? அவர்கள் பெட்ரூமில்! அதுவும் குழந்தை அருகில் படுத்திருக்கும்போது!

    அதாவது தூங்கும் குழந்தை விழித்து விடாதபடி, மிக மெல்லியதாக அவர்களின் டூயட் அமைய வேண்டும். டியூன் அமைத்து, பாடிக்காட்டினேன். எல்லாருக்கும் பிடித்திருந்தது. இந்த டியூனை நான் கம்போஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

    அந்த மாலை நேரத்தில் பிரான்சில் இருந்து சுற்றுலா வந்திருந்த தம்பதியரில் பெண் மட்டும் எங்கள் அறையை கடந்து போயிருக்கிறார். பாடலைக் கேட்டவர் அப்படியே நின்று விட்டார். பிறகு ''நான் உள்ளே வரலாமா?'' என்று வெளியில் இருந்தவாறே சைகை மூலம் கேட்டார். ''ப்ளீஸ் கம் இன்'' என்று டைரக்டர் சொல்ல, உள்ளே வந்தார். நாங்களெல்லாம் கீழே தரையில் விரிப்பை விரித்து அமர்ந்திருந்தோம். எங்களோடு அவரும் கீழே உட்கார்ந்தார். என் முகம் பார்த்தவர், ''நீங்கள் பாடிய பாடலை மறுபடியும் ஒருமுறை பாட முடியுமா?'' என்று கேட்டார்.

    ''ஓ'' என்றேன். மெதுவாக பாடவும் செய்தேன். அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து 'பொலபொல' வென்று கண்ணீர் கொட்டியது. பாடல் முடிந்ததும் எல்லாரும் அமைதியானோம். இப்போது அந்தப் பெண்மணி பேசினார். "இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்'' என்றார். அதோடு, ''இந்த இசையை எனக்காக எழுதித்தர முடியுமா?'' என்று கேட்டவர், தனக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்றும் சொன்னார்.என்னிடம் மியூசிக் எழுதும் பேப்பர் இல்லை. எனவே என் லெட்டர்பேடில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அதில், கோடுகள் போட்டு அந்த இசையை பியோனோவில் வாசிப்பதற்கு தகுந்தாற்போல் எழுதிக் கொடுத்தேன். வாங்கிக் கொண்ட அந்தப் பெண் நன்றி ததும்ப, ''இந்த இசையை வாங்குவதற்குத்தான் இந்த சுற்றுலா நடந்ததோ என்னவோ?'' என்று சொல்லியபடி விடை பெற்றுச் சென்றார். இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது, இன்னொரு சம்பவம்.

    டி.எம்.சவுந்தர்ராஜனும், பி.சுசிலாவும் பாடிக் கொண்டிருந்தார்கள். ''மேகத்திலே வெள்ளி நிலா, காதலிலே பிள்ளை நிலா'' என்ற சரணம் போய்க் கொண்டிருந்தது. அப்போது எஸ்.பி.முத்துராமன் என்னை அழைத்தார். ''ராஜா சார்! நீங்கள் கம்போசிங்கில் வெறும் ஆர்மோனியத்துடன் பாடும்போது காதருகில் மிகவும் மெல்லிய குரலில் பாடுவது போல இருந்ததே! இப்போது இவர்கள் பாடும்போது பலமான குரலில் வருவது போலல்லவா இருக்கிறது'' என்றார்.

    மகேந்திரனோ அவர் பங்குக்கு, ''ராஜா! இவ்வளவு சத்தமாக பாட்டைக் கேட்டால், கட்டிலில் தூங்கும் பையன் எழுந்து விடமாட்டானா?'' என்றார். நான் டி.எம்.எஸ். - சுசிலா பாடிக் கொண்டிருந்த அறைக்குப் போனேன். டி.எம்.எஸ்.சிடம், ''அண்ணா! குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும்போது கணவனும், மனைவியும் பாடும் ரொமாண்டிக் பாடல் இது. மெதுவாகக் கேட்க வேண்டும். இதுவோ பெரிய மலைச்சாரலில் நின்று கொண்டு ''மேகத்திலே வெள்ளி நிலா'' என்று பாடுவது போல் வருகிறது. உங்களுக்கு தெரியாததல்ல. மெதுவாகப் பாடினால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

    அவர், ''ராஜா! நான் மெதுவாகத்தான் பாடுகிறேன். இப்போ கேளு''என்றவர் பாடினார். மிகவும் சன்னமாக குரல் ஒலிக்க, மெதுவாகத்தான் கேட்டது. ''பிறகு எப்படி ரிக்கார்டிங்கில் அவ்வளவு பெரிய சத்தமாக கேட்கிறது?'' என்று கேட்டேன். ''நான் என்னப்பா பண்றது? என் குரல் அமைப்பு அப்படி! நேரில் கேட்டால் மென்மையாகவும் மைக்கில் கேட்டால் கம்பீரமாகவும் ஒலிக்கிற குரலாக ஆண்டவன் கொடுத்து விட்டான்'' என்றார், டி.எம்.எஸ். உள்ளே போய் இருவருடைய குரலையும் குறைத்து பாடலைப் பதிவு செய்தோம்.

    ஆனாலும், அது ஒருவருக்கொருவர் காதில் ரகசியமாக பாடுகிற மாதிரி வரவில்லை. மகேந்திரன் கதை வசனம் எழுதிய படங்கள் எல்லாம் நன்றாக ஓடியதால் அவருக்கு டைரக்டு செய்யும் வாய்ப்பு வந்தது. ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் அப்படியொரு வாய்ப்பை வழங்கினார். இதைத் தொடர்ந்து வார இதழ் ஒன்றில் தொடர் கதையாக வந்திருந்த ''முள்ளும் மலரும்'' கதையை படமாக்க மகேந்திரன் முடிவு செய்தார். திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்யும் ஏற்பாடுகளை தொடர்ந்தார். ரஜினி, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு என நட்சத்திரங்கள் முடிவானார்கள்.

    கம்போசிங் நடந்தது. அப்போது ''16 வயதினிலே'' படத்தைப் பற்றியும், பாரதிராஜாவின் திறமையைப் பற்றியும் மட்டுமே மகேந்திரன் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார். அதே நேரம், ''தரத்தில் உயர்ந்த நல்ல படமாக இதைக் கொண்டு வந்து விட வேண்டும்'' என்றும் சொன்னார்.

    ''செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்'', ''அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை'', ''ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...'' ''நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'' போன்ற பாடல்கள் உருவாயின. பாலு மகேந்திராதான் கேமரா. மகேந்திரனும், பாலு மகேந்திராவும் நல்ல நண்பர்கள். ரஜினியின் நல்ல நடிப்பு, படத்தின் இயக்கம், கேமரா, கதை, திரைக்கதை எல்லாம் கச்சிதமாக அமைந்து படத்துக்கு வெற்றியை தேடித்தந்தன.

    ஒரு படத்தின் வெற்றிக்காகவே ஒட்டுமொத்தயூனிட்டும் உழைத்தாலும், வெற்றியைத் தருவது நமக்கும் மேலே உள்ள ஒருசக்தி. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. நானும் மகேந்திரனும், சேலத்தில் ''முள்ளும் மலரும்'' ஓடிய ஒரு தியேட்டருக்கு போன போது அது நடந்தது. தியேட்டர் முதலாளி எங்களை வரவேற்று அழைத்துச் சென்று படம் பார்க்க வைத்தார்.

    படத்தின் ஆறாவது ரீலில், ரஜினி மீது லாரி ஏறியது போல் ஒரு சீன் வரும். அங்கே இடைவேளை என்று போட்டு விட்டார்கள். எனக்கு அதிர்ச்சி. நான் பார்த்தவரை படத்தின் இடைவேளை அது இல்லை.என்னைவிட மகேந்திரன் இன்னும் அதிர்ச்சியாகி இருந்தார்.
    Next Story
    ×