என் மலர்

    சினிமா

    சரியாக வாசிக்காவிட்டால் அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்: இளையராஜா கூறுகிறார்
    X

    சரியாக வாசிக்காவிட்டால் அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்: இளையராஜா கூறுகிறார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    "இசைக் கருவிகளை சரியாக வாசிக்காவிட்டால், அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்'' என்று இளையராஜா கூறினார்.


    "இசைக் கருவிகளை சரியாக வாசிக்காவிட்டால், அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்'' என்று இளையராஜா கூறினார்.

    தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "தண்ணி கறுத்திருச்சு'' பாடலுக்கு டைரக்டர் ஸ்ரீதர் வேறு டியூன் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னாலும், எனக்கு மனசு கேட்கவில்லை. நான் அவரிடம் "சார்! இது ஹிட் ஆகும் நல்ல டியூன்தான். நிறுத்தி நிறுத்திப்பாடி முழுப்பாடலையும் கேட்க முடியாததால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்றேன்.

    அதோடு, "இந்தப்பாடலை வேறு ஒருவரைக்கொண்டு பாடச் சொல்லலாம்'' என்றும் சொன்னேன். "வேறு யாரை பாட வைக்க நினைக்கிறீர்கள்?'' கேட்டார் ஸ்ரீதர். "மலேசியா வாசுதேவனை பாட வைக்கிறேன்'' என்றேன். "உங்கள் விருப்பம்'' என்றார், ஸ்ரீதர்.

    சொன்னபடி மலேசியாவை பாட அழைத்தேன். ஜி.கே.வி.யும் கூட இருந்தார். மலேசியா வாசுதேவன் பாடி முடித்த நேரத்தில் ஜி.கே.வி. என்னிடம், "இவ்வளவு வித்தியாசமான பாடல் என்று எனக்கு ஏன் அன்றைக்கு தெரியாமல் போயிற்று?'' என்று கேட்டார்.

    இந்தப் பாடல் உள்பட இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் எல்லாப் பாடல்களுமே `ஹிட்' ஆனது. "என்னடி மீனாட்சி'' என்பது இந்தப் படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடல். இந்தப்பாடல் பதிவின்போது ஒரு வேடிக்கை நடந்தது.

    வெளியூரில் இருந்து நிறைய கல்லூரி மாணவ-மாணவிகள் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் பார்க்க வந்திருந்தார்கள். அப்படியே என்னுடைய ரெக்கார்டிங் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அனுமதியுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார்கள். நான் கண்டக்ட் செய்து கொண்டிருந்தேன். அனைவரும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தார்கள். திடீரென்று கமலஹாசன் வந்துவிட்டார். ரிகர்சல் முடிந்ததும் எல்லாரும் அமைதியாய் நிற்க, நான் ஒரு சிறு தமாஷ் செய்ய விரும்பினேன்.

    மியூசிக் எழுதிய பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு கமலை நோக்கிப் போனேன். அவருடைய கையில் மியூசிக் பேப்பரை கொடுத்து, கொஞ்சம் சத்தமாக "கமல் சார்! எல்லாம் நீங்க சொன்னது போல் எழுதி ரிகர்சல் செய்துவிட்டேன். சரியா இருக்கா? இல்லே ஏதாவது மாற்றணுமா? பார்த்திட்டு சொல்லுங்க'' என்றேன்.

    உடனே அவரும் சிரிக்காமல் சீரியசாக "எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனால்...'' என்று இழுத்து, அதில் ஒரு இடத்தைக்காட்டி "இந்த இடத்தில்தான் நான் எழுதியது போல் வரவில்லை. அதை மட்டும் சரி செய்து விட்டால் நூறு சதவீதம் `பெர்பெக்ட்' ஆகிவிடும்'' என்றார். ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருக்கு எங்கள் நாடகம் புரிந்தது. தங்களுக்குள்ளாக சிரித்துக்கொண்டார்கள். மாணவ-மாணவிகள் தான் எங்கள் நாடகம் புரியாமல் அப்படியே அதை உண்மை என்று நம்பிவிட்டார்கள்.

    "அய்யே! இவ்வளவுதானா? கமலஹாசன் சொல்வதைத்தான் இந்த இளையராஜா செய்கிறாராக்கும்!'' என்று அவர்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே கலைந்து போனார்கள்.

    அவர்கள் வெளியே போகும்வரை அமைதியாக இருந்துவிட்டு, அதற்கப்புறம் நானும் கமலும் சிரித்தோம். பாருங்கள்.... அப்படியொரு சிரிப்பு. எங்களுடன் இசைக் குழுவினரும் சேர்ந்து சிரித்தார்கள்.

    இசை விஷயத்தில் நான் ரொம்பவே கண்டிப்பானவன். இசையில் மட்டும் ஏதாவது தவறு வந்தால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். பெரியவர், சிறியவர் என்ற தராதரம் இல்லாது கோபப்பட்டு விடுவேன்.

    அண்ணன் பாஸ்கர் மீது கூட இப்படி என் கோபம் பாய்ந்திருக்கிறது. ரெக்கார்டிங்கின்போது பாஸ்கர் "காங்கோ'' போன்ற கருவிகளை வாசிப்பார். சில சமயம் இஷ்டப்படி வாசிப்பார். அதை வேண்டாமென்று சொல்வேன். உடனே என்னை வெறுப்பேற்றவோ, அல்லது தம்பிதானே என்ற எண்ணத்திலோ மீண்டும் தவறாக வாசிப்பார். எனக்கு தலைக்கேறிவிடும். சத்தம் போட்டு வெளியே அனுப்பி விடுவேன்.

    இசைக்குழுவினர் பார்க்க இது நடக்கும். என் இசையில் `காம்ப்ரமைஸ்' என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கூடப் பிறந்த அண்ணனே ஆனாலும் தவறாக வாசித்தால் வெளியே போய்விட வேண்டியதுதான் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். இதனால் சரியாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தி ஒரு `டிசிப்ளினை' கொண்டு வந்திருந்தது.

    `ஓபோ' என்ற இசைக் கருவியை வாசிக்கும் இசைக் கலைஞர் ஒருவர் விஷயத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்து விட்டது. அவர் பெயர் கணேசன். இசைக் குழுவினர் அவரை `கணேசண்ணா' என்றுதான் அன்புடன் அழைப்பார்கள். அன்றைய தினம் ஒரு பாடலுக்கு இவர் வாசித்துக் கொண்டிருந்தார்.

    அந்த `பிட் மியூசிக்' நான் எதிர்பார்த்தபடி அவருக்கு வாசிக்க அமையவில்லை. இத்தனைக்கும் நான் இசையமைப்பாளர் என்ற நிலைக்கு முன்னாக கிடார் வாசித்த காலத்தில், அவரோடு எத்தனையோ ரெக்கார்டிங்குகளில் வாசித்திருக்கிறேன். ஒரே டாக்சியில் போய் வந்திருக்கிறோம். இருந்தாலும் இந்த இடத்தில் பிடிவாதமாக நான் எதிர்பார்த்தபடி வரவேண்டும் என்று பல முறை கேட்டும், ரிகர்சல் கொடுத்தும் வரவில்லை.கோவர்த்தன் மாஸ்டரும் சில ரிகர்சல் கொடுத்து, "இது எப்படியிருக்கு என்று கேளு'' என்றார்.

    ஊஹும். எனக்கு நூற்றில் இருபத்தைந்து சதவீதம் கூட சரிப்படவில்லை. கடைசியில், "அவர் வாசிக்கவேண்டாம். போகட்டும்'' என்று சொல்லிவிட்டேன்.

    எத்தனையோ கால அனுபவம் உள்ளவர். எவ்வளவோ இசையமைப்பாளர்களை பார்த்தவர். இதெல்லாம் எனக்கு பெரிதாகப்படவில்லை. இதில் நான் நினைத்தபடி அந்த வாத்தியம் வரவில்லையென்றால் எதற்கு அந்த வாத்தியம்? வேண்டாம். இதுதான் என்பக்க நியாயம். அவர் கொஞ்ச நேரம் அமைதியாக வாடிய முகத்துடன் இருந்துவிட்டு, டாக்சி வந்தவுடன் வாத்தியத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

    அப்போது வருத்தப்படாத என் மனம், பல நாட்களுக்குப் பிறகு நினைத்து நினைத்து வருந்தியது. என் உள்ளேயே குமைந்து குறுகும் உணர்வை இன்றும் எனக்கு தந்து கொண்டிருக்கிறது.

    பாரதிராஜா "கிழக்கே போகும் ரெயில்'' என்று ஒரு கதையை தயார் செய்து, பூஜை பாடல், ரெக்கார்டிங் வைத்தார். அன்றைக்கென்று பார்த்து மூன்று பூஜைகள். அந்த பரபரப்பிலும் ஒரே நாளில் மூன்று பாடல்களை கிழக்கே போகும் ரெயில் படத்திற்காக பதிவு செய்தோம். இரண்டாவது பாடல் முடிய மதியம் 3 மணி ஆகிவிட்டது. மூன்றாவது பாடலை 4 மணிக்கு தொடங்கினோம். "கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ'' என்ற அந்த பாடல் முடிய இரவு 10 மணி ஆகிவிட்டது.

    அப்போதெல்லாம் `சினி மியூசிசியன்ஸ் யூனியன்' இருந்தது. இரவு 9 மணிக்குள் ரெக்கார்டிங் முடிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் விதிமுறையில் இருந்தது. இருந்தாலும் அவ்வப்போது இது மாதிரியான சந்தர்ப்பங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்வது வழக்கமாக இருந்தது. "மாஞ்சோலைக் கிளிதானோ'' பாடலை கவிஞர் முத்துலிங்கமும், "பூவரசம்பூ பூத்தாச்சு'' பாடலை அமரும் எழுதியிருந்தார்கள்.

    கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய ஒரே திரைப்படப்பாடல் என்ற பெருமையை பெற்றது எனது இசையமைப்பில் இந்தப் படத்துக்காக உருவான "மலர்களே நாதஸ்வரங்கள்'' என்ற பாடல். ஆனால் பாரதிராஜா ஏனோ படத்தில் அந்தப் பாடலை வைக்கவில்லை.

    "கிழக்கே போகும் ரெயில்'' ரிலீஸ் ஆன அன்றே படக்கம்பெனி பணியாளர்கள் தியேட்டர்களில் ரசிகர்களிடம் கருத்து கேட்கப் போயிருக்கிறார்கள். அவர்களிடம் சில ரசிகர்கள் "ராஜ்கண்ணு (படத்தின் தயாரிப்பாளர்) ரெயில் ஏறிட வேண்டியதுதான்'' என்று கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

    ஒரு வாரத்திற்கு அப்புறம் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடையே பேச்சு பரவி, படம் சூப்பர் ஹிட் ஆயிற்று. "16 வயதினிலே'' படத்தில் கிடைத்த புகழை பாரதிராஜா தக்க வைத்துக்கொண்டார்.
    Next Story
    ×