என் மலர்

    சினிமா

    ஆர்மோனியத்தை நண்பர் எடுத்து வாசித்ததால்  இளையராஜா ஆவேசம்
    X

    ஆர்மோனியத்தை நண்பர் எடுத்து வாசித்ததால் இளையராஜா ஆவேசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    "இது என் உயிருக்கு சமம்! யாரைக்கேட்டு தொட்டாய்?'' தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா.
    "இது என் உயிருக்கு சமம்! யாரைக்கேட்டு தொட்டாய்?'' தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.

    தனது இசைப்பயண அனுபவம் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பைரவி படத்தை தயாரித்த கலைஞானம், "மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை (பின்னணி இசை சேர்ப்பு) முடிக்க வேண்டும். அந்த அளவுக்குத்தான் என்னிடம் பணம் இருக்கிறது. எனவே மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை முடித்துவிடுங்கள்'' என்று என்னிடம்

    சொல்லிவிட்டார்.இதுமாதிரியானதொரு நெருக்கடியை இதுவரை சந்தித்திராதவன் என்ற முறையில், அவர் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    நான் அவரிடம், "படம் மிகவும் சீரியசாக மனதைத் தொடும் விதத்தில் அமைந்திருக்கிறது. எனவே, மூன்று நாளைக்குள் முடியுமா என்பது சந்தேகம். அதோடு மூன்று நாளைத் தாண்டிவிட்டால் யார் பணம் கொடுப்பது?'' என்று கேட்டேன்.

    அவரோ, "எப்படியும் மூன்று நாளைக்குள் முடித்தாகணும்'' என்றார்.

    "சம்பளம் வேண்டாம்''

    அவர் இப்படிச் சொன்னதும் நான் இன்னும் கோபமாகி, "மூன்று நாட்களுக்கும் மேலாக ரீரிக்கார்டிங் போனால் என் சம்பளப்பணத்தை நீங்கள் தரவேண்டாம். அதை ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கொடுத்து விடுங்கள்'' என்றேன்.

    கலைஞானம் பதில் எதுவும் சொல்லாமல் போய்விட்டார்.

    ரீரெக்கார்டிங் தொடங்கியாயிற்று. படத்தின் ஆரம்பத்திலேயே கிளைமாக்ஸ் காட்சிகள் போல, ஹீரோவின் தங்கையை கெடுப்பது, அவளின் மரணம், அதன் இறுதிக்காட்சிகள், ஹீரோவின் சபதம், வில்லனின் ஆட்களோடு சண்டை என்று போய்க்கொண்டிருந்தது.

    எல்லா ரீல்களிலும் மிïசிக். மூன்று நாட்களுக்குள் முடியவில்லை. "சரி; அப்படியே இரவும் தொடர்ந்து வேலை செய்து முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதனால் இரவு 9 மணிக்கு முடிக்க வேண்டிய கால்ஷீட்டை முடிக்காது, இரவும் தொடர்ந்து வேலை செய்து அதிகாலை 4-30 மணிக்கு

    முடித்தோம்.கலைஞானத்திடம் `வருகிறேன்' என்றுகூட சொல்லாமல் கிளம்பினேன்.

    அப்போது அவர் நான் எதிர்பாராத ஒரு காரியம் செய்தார். என்னுடைய பாக்கி சம்பளத்தை கையில் வைத்தார்.

    "நீங்கள்தான் பணம் இல்லை என்றீர்களே?'' என்று கேட்டேன்.

    "பரவாயில்லை. கலைஞர்கள் வயிறெரியக்கூடாது'' என்றார், கலைஞானம்.

    நான் அவரிடம், "வேண்டாம். எனக்கு வருத்தமில்லை'' என்றேன்.

    அவரோ, "இல்லையில்லை, கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பேசிய தொகை கொடுத்தால்தான் மரியாதை'' என்று சொன்னவர், மேற்கொண்டு என்னை எதுவும் பேசவிடாமல் கையில் பணத்தை வைத்தார்.

    ஜெய்சங்கர், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் காயத்ரி. இதில் "வாழ்வே மாயமா?'' என்ற பாடல், நல்ல பாடலுக்கு இசையமைத்தோம் என்ற திருப்தியை தந்தது.

    இந்தப் படத்தில்தான் இந்தியத் திரை இசையில் முதன் முதலாக `எலெக்ட்ரிக் பியானோ' உபயோகிக்கப்பட்டது.

    தொடர்ந்து டி.என்.பாலு இயக்கிய "ஓடி விளையாடு தாத்தா'' என்ற காமெடிப் படத்துக்கு இசையமைத்தேன். இது சோபியா லாரன்ஸ் நடித்த "ரோமன் ஹாலிடே'' என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்.

    பத்ரகாளியை அடுத்து ஏ.சி.திருலோகசந்தரின் "பெண் ஜென்மம்'' படத்திற்கும் என்னையே இசையமைக்க அழைத்தார். இந்தப் படத்தில் `செல்லப்பிள்ளை சரவணன்' என்ற பாடல் எனக்கு பிடிக்கும். இப்போது கேட்டாலும், அதில் மூன்றாவது சரணத்திற்கு முன்வரும் இசையை கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

    ஸ்ரீதேவி நடித்த `சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்ற படம் வித்தியாசமான கதைக் கருவைக் கொண்டது. ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் தாய்மார்கள், இருட்டும்வரை தங்களிடம் வேலை வாங்கும் முதலாளிகளைப் பார்த்து கெஞ்சுகிற முறையில் பாடும் பாடலான

    "தண்ணி கறுத்திருச்சு - மணித்தங்கமே

    தவளை சத்தம் கேட்டுருச்சு - ஒயில் அன்னமே

    புள்ளையுமே அழுதிருச்சு - மணித்தங்கமே

    புண்ணியரே வேலை விடு''

    - என்று ஒரு பாட்டு இருக்கிறது.

    சூரியன் மறைந்ததால், தண்ணீரில் இருட்டுப்பட்டு கறுப்பாகிவிட்டது. தவளைகள் கூட கத்துகின்றன. தொட்டிலில் தூங்க வைத்த பிள்ளையும் பசியால் அழுகிறது. புண்ணியவானே காலையில் இருந்து இருட்டும் வரை வேலை செய்து விட்டோம். இப்போது அந்தக் குழந்தைக்கு பாலூட்டுவதற்காகவாவது செய்த வேலை போதும் என்று சொல்லி, எங்களை விட்டுவிடு'' என்று கெஞ்சும் பாடல் இது.

    இந்த மெட்டை இந்தப் படத்தில் அதன் வார்த்தைகளை விட்டு விட்டு, வேறு வார்த்தைகளை வைத்து கவிஞர் வாலி பாட்டு எழுதினார். இது ஒரு தாலாட்டுப்பாடல் போல் படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.

    படம் வெற்றி பெறவில்லை.

    "துணையிருப்பாள் மீனாட்சி'' என்ற படத்தில் `சுகமோ ஆயிரம்' என்று ஒரு பாடல் பிரபலம். இந்தப்படம் தொடர்பான ஒரு விஷயம் சொல்லவேண்டும்.

    "சரசா பி.ஏ'' என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் நடராஜன், திருச்சி ரங்கராஜன் என்பவருடன் சேர்ந்து பி.ஆர்.சோமு டைரக்ஷனில் "உயிர்'' என்ற படத்தை ஜெமினி ஸ்டூடியோ உதவியோடு தயாரிக்க இருந்தார்.

    ஏற்கனவே திருவையாறு ரமணஸ்ரீதர் - சரளா கச்சேரிகளுக்கு நான் வாசித்திருக்கிறேன்.

    ரமணி (ரமணிஸ்ரீதர்) இன்றைய நடிகர் ராகவேந்தர். இவர் தயாரிப்பாளர்களுக்கு நண்பர்.

    என்னைப்பற்றிசொல்லி இந்தப் படத்துக்கு இசையமைக்க வைக்கலாம் என்று சிபாரிசு செய்திருந்தார்.

    அதற்கு அவர்களோ, "முதன் முதலில் அவருக்கு படம் கொடுத்ததே நாம்தானே. அதற்கும் நீதானே சிபாரிசு செய்தாய். ஜெமினிகணேசன் - பத்மினி நடிக்க தாதாமிராசி டைரக்ஷனில், வாசு ஸ்டூடியோவில் டி.எம்.சவுந்தர்ராஜன் பாட, `சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு' என்று அமரன் பாட்டெழுதி ரெக்கார்டு செய்து படம் நின்று போயிற்றே! அந்த ராஜாவைத்தானே சொல்கிறாய்?'' என்று ரமணியை கேட்டிருக்கிறார்கள்.

    "இல்லையில்லை. அது ஏதோ அசந்தர்ப்பம். அதற்காக திறமை உள்ளவர்களை தள்ளி வைத்தால் எப்படி?'' என்று பதிலுக்கு இவர் கேட்டிருக்கிறார்.

    இப்படிச் சொன்னதும் அவர்கள், "சரி சரி! ஒரு 5 பாடல்கள் ரெக்கார்டு செய்து கொடுக்கட்டும். ஏனென்றால் ஜெமினி ஸ்டூடியோவின் ஆதரவில் இந்தப்படம் வரவேண்டியிருக்கிறது. அதற்கு அவர்களிடமும் ஒப்புதல் வாங்க இந்தப் பாடல்கள் உதவியாக இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ரமணி எங்களிடம் வந்து இதைச் சொல்ல, ஸ்டூடியோவுக்கும் ஆர்க்கெஸ்ட்ராவுக்கும் என் கையில் இருந்த பணத்தைப்போட்டு ரெக்கார்டிங்குக்கு ஏற்பாடு செய்தேன்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வசந்தா, சரளா, ரமணி பாடினார்கள். ஒரே நாளில் 5 பாடல்கள் பதிவாயின. ஜெமினி ஸ்டூடியோவில் கோடீஸ்வரராவ் என்ற என்ஜினீயர் பாடல்களை பதிவு செய்தார்.

    பாடல்கள் "ஓ.கே'' ஆயின. பூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது.

    இப்போது போல, அப்போதெல்லாம் பூஜைக்கு அழைப்பிதழோ, போஸ்டர்களோ அடிக்கும் பழக்கம் இல்லை.

    பூஜை, பாடல் பதிவு அவ்வளவுதான். எல்லாரையும் நேரிலோ, போனிலோ அழைத்து விடுவார்கள்.

    பூஜைக்கு முதல் நாள். ரமணி காமராஜர் சாலையில் நாங்கள் இருந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்.

    அப்போது நான் வீட்டில் இல்லை. இந்த ரமணி எப்போதுமே துறுதுறுவென்றிருப்பார். டிபன் சாப்பிட்டு விட்டு ஓட்டலில் இருந்து வெளியே பீடா ஸ்டாலில் பீடா போட்டால், கடைக்காரரை குஷிப்படுத்த சத்தம் போட்டு ஏதாவது ஒரு பாடலைப் பாடுவார். இப்படிப்பாடும்போது ரோட்டில் டிராபிக்கோ, மாணவ, மாணவியரோ, ஜனங்களோ யார் வேடிக்கை பார்த்தாலும் கவலையே படமாட்டார். பாடி முடித்ததும் காசு கொடுத்துவிட்டு `கண்ணா நான் வரட்டுமா?' என்று கிளம்பிவிடுவார்.

    நாங்களெல்லாம் அவர் பாடுவதையும், சிவாஜி போல் நடித்துக் காட்டுவதையும் சிரித்த முகமாய் ரசிப்போம்.

    வீட்டுக்கு என்னைப் பார்க்க வந்தவர், காத்துக்கொண்டிருக்க முடியாமல் ஒருவித தவிப்பு நிலையில் இருந்திருக்கிறார். அம்மா அவரை "உட்காரு தம்பி'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    உட்கார்ந்தவர் என் ஆர்மோனியப் பெட்டியை எடுத்து ஏதோ வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

    எனக்கோ என் ஆர்மோனியம் உயிருக்கு மேல். அதை யாரையும் தொடவிடமாட்டேன்.

    என் ஆர்மோனியத்தை இவர் வாசிப்பதை பார்த்ததும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    "ஏய்! யாரைக் கேட்டு இதைத் தொட்டாய்?'' எப்படி நீ இதைத் தொடலாம்?'' என்று கன்னாபின்னா என்று சத்தம் போட்டேன்.

    அவர் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் கத்தியதில் ஏற்பட்ட அதிர்ச்சியையும், அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். என்றாலும் அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு, "ஏய் ராஜா! என்னய்யா இது? இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு கோபம்?'' என்று என்னை சமாதானப்படுத்த முனைந்தார்.

    ஆனால் நான் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அப்போது இருந்தேன். இதனால் மேலும் கத்திவிட்டேன்.

    ஒரு கட்டத்தில் ரமணியால் தாங்கமுடியவில்லை. உடனே அவருக்கும் கோபம் வந்து, "ஏய்! என்னை இந்த (ஆர்மோனியம்) பெட்டியைத் தொடக்கூடாதுன்னு சொல்லி திட்டிட்டே இல்லே? உன் முன்னால் நான் மிïசிக் டைரக்டரா ஆகிக்காட்டலைன்னா நான் ரமணி இல்லை'' என்று சபதம் செய்தார்.

    நானும் விட்டேனில்லை. "நீ மிïசிக் டைரக்டராகு. பேர் எடு. அதனால எனக்கொண்ணும் இல்லை. என் இடம் எனக்குத்தான். உன் இடம்  உனக்குத்தான். ஆனால் நீ ஒரு பாடகனா இந்த சினிமாவில் பேர் எடுக்கவே முடியாது'' என்று கண்மூடித்தனமாக வார்த்தைகளை

    விட்டுவிட்டேன்.அடுத்த நாள் பூஜையில் "உயிர்'' படத்துக்கு ரமணி இசையமைப்பாளர். அவரது இசையில் பாடல் பதிவானது. ரமணி, ரமணஸ்ரீதர் ஆகிவிட்டார்.

    இந்தப் படத்துக்கு நான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த பாடல்களில் ஒன்றான `புது நாள் இன்று தான்' என்று அமரன் எழுதி வசந்தா பாடிய பாடல், இப்போது "சுகமோ ஆயிரம்'' என்று எஸ்.பி.பி.யும், பி.சுசீலாவும் பாட, `துணையிருப்பாள் மீனாட்சி' படத்தில் இடம் பெற்றது.

    Next Story
    ×