என் மலர்

    சினிமா

    காதல் திருமணத்துக்கு எதிரியா? மனம் திறந்து பேசுகிறார் சிவகுமார்
    X

    காதல் திருமணத்துக்கு எதிரியா? மனம் திறந்து பேசுகிறார் சிவகுமார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.
    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.

    சிவகுமாரின் முதல் படம் 1965-ல் வெளிவந்தது. அவருடைய கலை உலகப்பயணம் தொடங்கி, 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்கள் மகன் சூர்யா, இப்போது முன்னணி நடிகராகத் திகழ்கிறார். அவர் நடிகர் ஆவார் என்று நீங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தீர்களா?

    பதில்:- சூர்யா நடிகனான அதிர்ச்சி இன்னும் என்னுள் இருக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்'' படித்தவன் அவன். காலையில் கல்லூரி சென்றால் மாலை வரை அவன் வகுப்பில் நாலு வார்த்தை பேசினால் பெரிய விஷயம். மவுனமாக எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் சுபாவமுள்ளவன்.

    சென்னையில் பிறந்து 22 வருடம் வளர்ந்த ஒரு நடிகனின் மகன், இங்குள்ள எந்த ஸ்டூடியோவிலும் அப்பாவின் ஷூட்டிங்கை பார்த்ததே இல்லை. விளையாட்டாகக் கூட அவனை ஒரு சினிமா ஹீரோவாக நாங்கள் கற்பனை செய்து பார்த்ததில்லை.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னமும் அவனை திரை உலகுக்கு தேர்ந்தெடுத்தது ஒரு இனிய விபத்து. `வீடியோ டெஸ்ட்' என்று அவனை அழைத்துப் போனார்கள். நான் மணிரத்னத்திற்குப் போன் செய்தேன். "சார்! அவனுக்குச் சினிமா சம்பந்தமாக எதுவும் தெரியாது. அப்படி அவனை நாங்கள் வளர்க்கவில்லை. பெரிதாக எதிர்பார்த்து நீங்கள் `டெஸ்ட்' செய்து ஏமாந்து விடக்கூடாது.

    `கார்மென்ட் எக்ஸ்போர்ட்' (ஆடை ஏற்றுமதி) கம்பெனியில் இப்போது பயிற்சி பெறுகிறான். நாளைக்குச் சொந்தமாக அவன் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது எங்காவது வேலை பார்த்து மாதம் பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ சம்பாதித்து நிம்மதியாக வாழலாம்.

    "நீங்கள் `டெஸ்ட்' செய்து ஒதுக்கிவிட்டால், அது அவன் எதிர்கால வாழ்க்கையை ரொம்பவும் பாதிக்கும். இப்போதுகூட `லேட்' இல்லை. அவனை அனுப்பி விடுங்கள்'' என்றேன்.

    `அவர் மீது 200 சதவீதம் நமëபிக்கை இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நாங்கள் அவரைப் பார்த்துக் கொள்கிறோம்'' என்றார், மணிரத்னம்.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னம் அவர்களும் "நேருக்கு நேர்'' படத்தில், `சூர்யா' என்று பெயரிட்டு அவனை அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் கலைஞர்களுக்கு நெஞ்சார நன்றி கூறுகிறேன்.

    அமெரிக்காவில் 3 ஆண்டு "இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்'' படித்து எம்.எஸ். பட்டம் பெற்று இந்தியா வந்த என் இளைய மகன் கார்த்திக், ஒராண்டுக்கும் மேலாக மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றான். தற்போது `பருத்தி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறான்.

    கேள்வி:- காதல் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் இருந்தும், அதை நீங்கள் விரும்பவில்லை. தாயாரும், குடும்பத்தினரும் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகன் சூர்யா, காதல் திருமணம் செய்து கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?

    பதில்:- தூய காதலுக்கு நான் எதிரி அல்ல. தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை மணக்கமாட்டேன் என்ற கொள்கையில் சூர்யா உறுதியாக இருந்தால், அவர் விரும்பியபடி திருமணம் செய்ய அனுமதிப்பேன்.

    கேள்வி:- நீங்கள் நடித்த சினிமாப்படங்களில் முதன் முதலாக உங்கள் தாயார் பார்த்த படம் எது? பார்த்து விட்டு என்ன சொன்னார்கள்?

    பதில்:- கந்தன் கருணை. "முருகனையே நினைத்து வாழ்ந்து, பழனி மலைக்கு கிருத்திகை தவறாமல் போய், திருப்புகழ் - மொத்த பாட்டையும் பாடி, சாமி கும்பிட்டவரு உங்கப்பா. ஒரு கிருத்திகை அன்னிக்கு பழனிலே பாடும்போதே நாவு விழுந்து போச்சு! வந்து பத்து நாள்ளே இறந்துட்டாரு.' அவரு செஞ்ச பிரார்த்தனை, உனக்கு அந்த முருகன் வேஷம் கிடைச்சிருக்கு'' என்றார், என் தாயார்.

    கேள்வி:- 193 படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்கள் எவை?

    பதில்:- கந்தன் கருணை, உயர்ந்த மனிதன், சொல்லத்தான் நினைக்கிறேன், புதுவெள்ளம், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், சிந்துபைரவி.

    கேள்வி:- நீங்கள் நடித்த படங்களில் உங்கள் மனைவிக்குப் பிடித்தமான படம் எது?

    பதில்:- ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்துபைரவி.

    இவ்வாறு பதிலளித்தார், சிவகுமார்.

    193 திரைப்படங்களில் நடித்து விட்ட சிவகுமாரின் கலைப்பயணம், இப்போது சின்னத்திரையில் தொடருகிறது.

    "சித்தி'', "அண்ணாமலை'', "அபிராமி'' உள்பட ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார்.

    சின்னத்திரைக்கு போனது பற்றி அவர் கூறியதாவது:-

    "ஓவியக் கலைஞனாக வாழ்க்கையைத் தொடர நினைத்த என்னை `சிவகுமார்' ஆக்கி, உலகளாவிய தமிழ் மக்கள் அறிந்திடச் செய்தது, திரை உலகம்தான். இன்றைய புகழ், பொருள், வாழ்வு எல்லாம் திரை உலகம் இட்ட பிச்சை.

    ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நடிக்கத் துவங்கி, நூற்றி இருபது படங்களை முடிக்கும் காலங்கள் வரை கூட நான் லட்ச ரூபாய் சம்பளத்தை எட்டவில்லை. தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி அதிகம் கேட்டதில்லை. காரணம், திரை உலகம் என்னைக் கைவிடாது என்ற அசாத்திய நம்பிக்கை.

    இரண்டரை மணி நேர சினிமா ஏற்படுத்துகிற தாக்கத்தை 25 வார டெலிவிஷன் தொடரில் ஏற்படுத்த முடியாது. காரணம் தொடர்ச்சி விட்டுப் போவதுதான்.

    மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும், படைப்பாளி திறமைசாலியாகவும், டெலிவிஷன் மீடியத்தை திறம்படக் கையாளத் தெரிந்தவராகவும் இருந்தால் பெயர் பெறமுடியும் என்பதற்கு கே.பாலசந்தர் உருவாக்கிய `ரயில் சிநேகம்', `கையளவு மனசு', `காதல் பகடை' தொடர்கள் சாட்சி.

    1990களில் "நீதிமான்'' தொலைக்காட்சித் தொடரில் நான் நடித்தபோது, "என்ன சார்! இத்தனை வருஷமா சினிமாவிலே ஹீரோவா நடிச்சிட்டு `டிவி'க்கு வந்திட்டீங்களே!'' என்று சில துணை நடிகர்கள் கேட்டனர். நான் சொல்லும் சமாதானம் அவர்களை திருப்திபடுத்தாது என்பதை உணர்ந்து, மவுனப் புன்னகை செய்தேன்.

    1999-ல் `சித்தி' தொடர் உருவாக ஆரம்பித்ததும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் `சித்தி' தொடரை பார்த்ததாக புள்ளி விவரங்கள் கூறின.

    "அண்ணாமலை'', உலகின் பெரிய நாடுகளில் எல்லாம் ஒளிபரப்பு ஆயிற்று.

    உலகில் எல்லாத் துறைகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழும். அந்த மாறுதல்கள், திரை உலகிலும் நிகழும். கதாசிரியன், சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டு, பேனா முனை மதிப்பு பெறும் காலம் விரைவில் வரும். அப்போது அர்த்தமுள்ள கதைகள், ஆழமான கருத்துக்கள் மீண்டும் திரை மூலம் உயிர் பெறும். அதுவரை சின்னத்திரையில் தற்காலிகமாக பவனி வருவேன்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சிவகுமார் - லட்சுமி தம்பதிகளுக்கு சூர்யா, கார்த்திக் தவிர, ஒரே மகள் பிருந்தா.

    பிருந்தா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்து "பி.ஏ'' பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயரும் சிவகுமார்தான். இவர் "பி.ஈ'',"எம்.பி.ஏ'' பட்டங்கள் பெற்றவர். சென்னையில், "கிரானைடு''களை வெட்டப் பயன்படும் "டயமண்ட் டூல்ஸ்'' கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார்.

    சிவகுமார் பற்றிய தொடர் இத்துடன் நிறைவடைந்தது.


    Next Story
    ×